
நலிந்த இந்திய குடும்பங்களை சேர்ந்த(பி-40) மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் தடையின்றி தொடர ஒற்றுமை அரசாங்கம் முழு ஆதரவு நல்கும் என்று மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று ஜூன் ஏழாம் நாள் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தெரிவித்தார்.
எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் நிதியுதவியையும் இன்று அறிவித்தார்.
பல்கலைக்கழக Great Hall-இல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மஇகா தலைவருமான தான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.
இந்திய மாணவர்கள், குறிப்பாக B40 மற்றும் M40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உயர்கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாக மலேசிய இந்திய சமூக பொருளாதார கல்வி உருமாற்றப் பிரிவான மித்ரா வழியாக நிதி உதவி பெறுவதற்குரிய ஏற்பாட்டை ‘மடாணி’ அரசு மேற்கொள்ளும் என்றார்.
எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு தொடக்க நிதி உதவி வழங்குவதற்காக
வெ.10.41 மில்லியன் ஒதுக்கப்படுகிறது; இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் 2,000 வெள்ளியைப் பெறும் அதேவேளை, பேறுகுறைந்த மாணவர்களுக்கு 3,000 பள்ளி வீதம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்ப கல்விபெறும் 3,000 மாணவர்களின் நலம் கருதி கட்டமைப்பு மானியமாக வெ.7.955 மில்லியன் ஒதுக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.
“நாடு முன்னேற வேண்டும் என்றால் கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், உயர்க்கல்வி பெறும் இந்திய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கிய தளம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், இந்திய சமூகத்தின் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களின் உயர்கல்வியைத் தொடர மத்திய ஒற்றுமை அரசாங்கம் முழு ஆதரவுதரும் என்று அவர்களிடம் நேரில் உறுதியளித்தார்.



