
நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் மேற் கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் குறித்து குத்தகை , மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்திற்கு(PKIM) வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைக்கு மடாணி ஒற்றுமை அரசாங்கம் கொள்கை அளவில் அணுசரணை-யாகவும் இசைவாகவும் நடந்து கொள்கிறது என்று குத்தகையாளர் சங்கத் தலைவர் ஆனந்தன் கணேசன் தெரிவித்தார்.
மலேசிய இந்திய சமுதாயம் சார்ந்த இந்த வர்த்தக அமைப்பு தன்னுடைய வெள்ளி விழாவை அண்மையில் கோலாலம்பூர் ராயல் சிலாங்கூர் கிளப்பில் எழுச்சியுடனும் உத்வேகத்துடனும் நடத்தியது.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து இந்த வர்த்தக அமைப்பின் தலைவர் ஆனந்தன் கணேசன் நாடளவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி -பள்ளி வளாக உருமாற்றம் தொடர்பான குத்தகை யாவும் மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்திற்கு வழங்கப்பட வேண்டும்; முன்னரும் இதுபோல வழங்கப்பட்டு வந்த நிலையில் இடையில் மாற்றம் நிகழ்ந்தாலும் பழையபடி தங்கள் அமைப்பிற்குத் தான் தமிழ்ப் பள்ளிகள் சார்ந்த குத்தகைப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஊடகத்தாரிடம் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் அரசு தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பொழுது கேட்டுக் கொண்ட ஆனந்தன் தற்போதைய மடாணி ஒற்றுமை அரசாங்கத்தில் இந்திய பிரதிநிதியாக இருக்கின்ற அமைச்சரவை உறுப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்-திருப்பதாகக் கூறினார்.
புத்ரா ஜெயாவிலும் தங்களின் கோரிக்கைக்கு ஆதரவான சூழ்நிலை நிலவுவதால் விரைவில் பிரதமரை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக ஆனந்தன் குமரியிடம் தெரிவித்தார்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் தற்பொழுது நாட்டின் தென்புலத்தில் ஜோகூர் மாநிலத்திலும் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் சட்டமன்ற பேரவைகளுக்கான தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

நாட்டிற்கு இது தேர்தல் பருவமாக இருக்கின்ற நிலையில் கூடிய விரைவில் பிரதமர் அலுவலகத்தில் தங்களின் கோரிக்கை மனுவை விரைவில் சமர்ப்பிக்க இருப்பதாக ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் மாதம் 16-ஆம் நாள் இந்த வர்த்தக அமைப்பு தன்னுடைய வெள்ளிவிழாவை கொண்டாடிய பொழுது அதில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாகிட் ஹமிடியின் அரசியல் செயலாளர் டத்தோ வீரா மெகாட் சுல்கைர்னைன் பின் தான்ஸ்ரீ ஒமார்டின் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது ஒரு அமைப்பை கால் நூற்றாண்டு காலம் சிந்தாமல் சிதறாமல் வலிமையோடு வழிநடத்துவது சாதாரண செயல் அல்ல என்று பாராட்டு தெரிவித்ததுடன் மலேசிய இந்திய குத்தகையாளர் சங்க வளர்ச்சி நிதியாக 10,000 வெள்ளியையும் அறிவித்தார்.

முன்னதாக செயலாளர் பா. நடராஜன் வரவேற்புரை ஆற்றிய அந்த நிகழ்ச்சியில், மலேசிய இந்திய குத்தகையாளர் சங்க துணைத் தலைவர் டத்தோ கணேஷ், முன்னாள் தலைவர் டத்தோ சுகுமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்- உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள், வர்த்தக பிரமுகர்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இடையே இந்திய குத்தகையாளர் சங்கம் கடந்த கால் நூற்றாண்டு காலம் பயணம், அடைவு நிலை, முன்னேற்றம் குறித்த காணொளி காட்சியும் திரையேற்றப்பட்டது.


