
கடந்த 15-ஆவது பொதுத் தேர்தலின்போது வெளியில் தெரியாமல் வீசிய பச்சை அலை இப்பொழுது மங்கி வருகிறது. பாஸ்-பெர்சத்து கட்சிகளின் கூட்டணிக்கு அப்போது எழுச்சி சேர்த்தது ‘UNDI 18’; 18 வயதை எட்டிய மலாய் இளம் வாக்காளர்கள், குறிப்பாக மாணவ சமுதாயம், கமுக்கமாக ஆதரவளித்த இந்தக் கூட்டனியின் எழுச்சியால்தான், கடந்த பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது; கடைசியில் எதிரும் புதிருமான நம்பிக்கைக் கூட்டணியும் தேசிய முன்னணியும் சேர்ந்து தற்போதைய ஆட்சியை நடத்தி வருகின்றன.
இத்தச் சூழலில் ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள தர்போதைய நிலையில், தேசிய முன்னணி தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளது.
மத்தியக் கூட்டரசை நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்து வழிநடத்தினாலும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தலில் அதே நம்பிக்கைக் கூட்டணியை எதிர்ப்பதில் தங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லையென்று தேசிய முன்னணி தலைமை அறிவித்துவிட்டது.
இதேக் காலக்கட்டத்தில், இன்னொரு கூட்டணியான பெரிக்காத்தானில் வேரும் விழுதுமாக இருந்த பாஸ், பெர்சத்து கட்சிகளிடையே கனன்று கொண்டிருந்த பகை நெருப்பு, தற்பொழுது பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
பெர்சத்து கட்சியுடனான அரசியல் உறவை முறித்துக்கொள்வதாக நேற்றிரவு அறிவித்துவிட்ட பாஸ் கட்சி, அம்னோவுடனான 2019 அத்தியாயத்தை இப்பொழுது மீண்டும் புதுப்பிக்க முயற்சிக்கிறது; மலாய் ஒற்றுமை என்னும் கருத்தை முன்வைத்து மீண்டும் பயணிக்க அம்னோ’வை அழைக்கிறது பாஸ்.
ஆனால், பாஸ் கட்சிமீது அம்னோ கொண்டுள்ள அவநம்பிக்கை, இதற்கு தடையாக உள்ளது.
மலேசிய தேசிய அரசியல் தளத்தில், குறிப்பாக அரசியல் நிலையற்றத்தன்மைக்கு பெயர்பெற்ற 14-ஆவது நாடாளுமன்ற தவணைக் காலத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டமைக்கப்பட்ட முவாஃபாக்காட் நேஷனல் – Muafakat Nasional(MN) கூட்டணியை மீண்டும் கட்டமைக்க பாஸ் விரும்பினலும் இதற்கு பெரும் தடையாக இருப்பது, பாஸ்(PAS) மற்றும் அம்னோ(UMNO) கட்சிகளுக்கிடையிலான நம்பிக்கையின்மைதான்.
பெர்சத்துக் கட்சியுடனான அரசியல் உறவை முறித்துக் கொண்ட நிலையில், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களையும் 16-ஆவது பொதுத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், மலாய் முஸ்லிம் ஒற்றுமையை மையப்படுத்தி, அம்னோவுடனான பழைய கூட்டணியை புதுப்பிக்க, இஸ்லாமியக் கட்சியான பாஸ் முடிவு செய்துள்ளது.
முன்னதாக, கடந்த மே 22 அன்று பெர்சத்துவுடனான உறவை மறுமதிப்பீடு செய்து வருவதாகவும் 16ஆவது பொதுத் தேர்தலை முஹைதீன் யாசின் இல்லாமல் தனித்து எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் பாஸ் தலைவர் ஹாடி அவாங் கூறியிருந்தார்.
பாஸ்-பெர்சத்து இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை பெர்சத்து சீர்குலைப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், 3 வாரங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், பெர்சத்துவுடனான உறவைத் துண்டிக்க முடிவு செய்துள்ளதாக பாஸ் இப்பொழுது அறிவித்துள்ளது.
இந்தச் சிக்கல் தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள பாஸ் தலைமையகத்தில் நேற்று இரவு கூடிய பாஸ் கட்சியின் மத்திய நிருவாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்ள பாஸ் மத்திய நிருவாகக் குழுக் கூட்டம் முடிவு செய்துள்ளது,” என்று அவர் ஊடகவெளியிலும் தெரிவித்துவிட்டார்.
அதற்குப் பதிலாக, மலாய்-முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களையும் அடுத்த பொதுத் தேர்தலையும்(GE16) எதிர்கொள்ள ஒரு புதிய அரசியல் கூட்டணியை அமைப்பது குறித்து பாஸ் ஆராயும் என்றும் அவர் நேற்று தெரிவித்திருக்கிறார்.
கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் அணியில் சேருவதை பாஸ் வரவேற்பதாகவும் ஹாடி கூறியிருக்கிறார்.
பாஸ்-பெர்சத்து கட்சிகளுக்கான நெருக்கம், பெர்லிஸ் மந்திரி பெசார்(மாநில முதல்வர்) விவகாரத்தில் விரிசல் அடையத் தொடங்கியது; பெர்லிஸில் பாஸ் கட்சி மந்திரி பெசாரை பதவியிலிருந்து நீக்கிய நடவடிக்கை, கெடா மற்றும் கிளந்தான் மாநிலங்களில் கூட்டணி பொறுப்பாளர் நியமனங்களில் தலையீடு நடந்ததாகக் கூறப்படுவது, பெரிகாத்தான் நேஷனலில் புதிய மலாய்-முஸ்லிம் கட்சிகளைச் சேர்ப்பதற்கு பெர்சத்துவின் எதிர்ப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளைச் சீர்குலைத்துள்ளதாகத் தெரிகிறது.
மே 25 அன்று, முஹைதீன், ஹாடியின் குற்றச்சாட்டுகளை மறுத்து, பாஸ் தலைவரால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த தமது கட்சியின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பாஸ் தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையேயான விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய அங்கமான அம்னோவுடன் இஸ்லாமியக் கட்சியான பாஸ், தனது முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
2019-இல் மலாய்-முஸ்லிம் வாக்குகளை ஒருங்கிணைக்க பாஸ் கட்சியும் அம்னோவும இணைந்து முவாஃபாக்காட் கூட்டணியை உருவாக்கின. அதன் பின்னர் பாஸ் கட்சி, பெர்சத்துவுடன் சேர்ந்து பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் இணைந்ததையடுத்து, அம்னோவுடனான கூட்டணி சிதைந்தது. இப்போது, இரு கட்சிகளும் மீண்டும் இணைவதற்கான சாத்தியம் குறித்து பேசப்பட்டாலும், அது இன்னும் நடைமுறைக்கு வராத நிலை நிலவுகிறது.
முவாஃபாக்காட் தேசியக் கூட்டணியைப் புதுப்பிக்க, ஜொகூர் மாநிலத் தேர்தலைப் பயன்படுத்த பாஸ் விரும்புகிறது; இதன் தொடர்பில், அம்னோவுடன் ஆலோசித்து வருவதை ஹாடி அவாங் உறுதிப்படுத்தினாலும், உடைந்த கூட்டணி மீண்டும் ஒட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம்கூட, ஜொகூர் தேர்தலில் பாஸ் கட்சியும் அம்னோவும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்திருந்தாலும், அம்னோவோ, தன் தலைமையிலான தேசிய முன்ன்ணியின் பாரம்பரிய கூட்டளிகளான மசீச, மஇகா உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, ஜோகூர் மட்டுமல்ல; நெகிரி செம்பிலானிலும் தனியாக களம்காணும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
களம் மாறிவிட்ட இன்றைய நிலையில், தேசிய முன்னணி தனித்து வெற்றிபெறலாம் என்று நம்புவதால், பாஸ் அழைப்பை நிராகரித்து வருகிறது.
2018 பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, அம்னோவும் பாஸ் கட்சியும் தங்களுக்கான மாற்றுவழியாக முவாஃபாக்காட் கூட்டணியை உருவாக்கின. அந்தச் சூழலில், பாஸ் கட்சியைப் போல, அம்னோவும் ஏறக்குறைய தனித்து விடப்பட்டிருந்தது.
அம்னோ வழிநடத்திய தேசிய முன்னணியின் 13 உறுப்புக் கட்சிகளும் ஏறக்குறைய விலகிவிட்டன; அல்லது தள்ளி நின்றன. கெராக்கான் கட்சி பிரிந்து சென்றாலும் மசீச அம்னோவிற்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்து வந்தது; மஇகாவோ, காதும்காதும் வைத்தாற்போல பாஸ் கட்சியுடன் அரசியல் உறவாடியது; பாஸ் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில், பட்டு வேட்டி சட்டையுமாக மஇகா தலைவர்கள் கலந்து கொண்டதை யெல்லாம் நாடு பார்த்தது.
இடைபில் பிரதமர் துன் மகாதீர் ஒருபக்கம் அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரிசையாக பெர்சத்து கட்சிக்கு தாவவைத்து, தான் தலைமை வகித்தக் கட்சியை ஊதிஊதி பெரிதாக்கிக் கொண்டிருந்தார்.
இந்தக்கட்டத்தில்தான் அம்னோவும் பாஸ் கட்சியும் மலாய் உரிமை என்னும் கட்டமைப்பில் முவஃபாக்காட் கூட்டணியை தங்களின் பாதுகாப்பிற்காகவும் அரசியல் முன்னெடுப்பிற்காகவும் கட்டமைத்தன.
இந்த நிலையில், பாஸ் பெரிசாத்துவுடன் இணைந்து புதுக்(பெரிக்காத்தான்) கூட்டணியை ஊருவாக்கியதால்தால், 2020 காலக்கட்டத்தில் முவாஃபாக்காட் அணி சிதைந்தது; இப்பொழுது, ஜொகூர் – நெகிரி செம்பிலான் மாநிலங்களின் தேர்தல் களம், பாஸ்-அம்னோ கூட்டணியின் எதிர்காலத்தை சோதிக்கும் முக்கிய மேடையாகஉருவாகி இருக்கிறது.
முவாஃப்ப்பகாட் நேஷனல் மீளுருவாக்கம் குறித்து இருதரப்பு பேச்சு இடம்பெற்றாலும், பாஸ்-அம்னோ இடையிலான நம்பிக்கையின்மை, பெரிசத்துடன் பாஸ் கொண்டிருந்த உறவு மற்றும் அம்னோவின் தனித்துப் போட்டியிடும் திட்டம் ஆகியவை முக்கிய தடைகளாக உள்ளன.
எது எவ்வாறாக இருந்தாலும், பெர்சத்துவுடனான உறவை பாஸ் துண்டித்துள்ள இன்றைய நிலையில், பாஸ் கட்சியின் அடுத்த அரசியல் நகர்வு என்னவென்பது போகப்போகப் புரியும்!.


