
இடைநிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் ஆறாம் படிவ-எஸ்டிபிஎம் கல்வி, தற்பொழுது மறுமலர்ச்சி கண்டுள்ளது. கல்லூரிக் கல்வி அல்லது பட்டய படிப்பு(Diploma) என்ற அளவிற்கு உருமாற்றம் கண்டுள்ள நிலையில், அத்தகைய மாணவர்களுக்கு தனி சீருடையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இடைநிலை கல்வி என்ற நிலையிலிருந்து உயிர்க்கல்வி மாணவர்களுக்கான புதுமுக வகுப்பு எஸ் டி பி எம் படிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எஸ்டிபிஎம் (STPM) கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்களது விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என்றும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா வலியுறுத்தியுள்ளார்.
முருகன் கல்வி நிலையம், தமிழ் மாணவர்களுக்காக மட்டும் குரல் எழுப்பவில்லை; மாறாக, மலாய் சீன மாணவர்களுக்கும் சேர்த்து குரல் எழுப்புகிறது.
அதேவேளை, எஸ்டிபிஎம் மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்கை கருத்தில் கொண்டு பாடங்களை தேர்வு செய்யும்போது தக்காரை தொடர்பு கொண்டு விளக்கமும் விவரமும் பெற வேண்டுமே அன்றி, பொருத்தமில்லாதவர்களிடம் கேட்டு எதிர்கால பின்னடைவை சந்திக்கக் கூடாது என்றும் நேற்று ஜூன் 10ஆம் நாள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது அவர் மாணவர்களை அறிவுறுத்தினார்.

எஸ்டிபிஎம் என்பது அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான முக்கியமான கல்விப் பாதையாக இருப்பதால், மாணவர்கள் தங்களின் உயர்கல்வி இலக்குகளுக்கு ஏற்ப பாடங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
பள்ளிகளில் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு ‘பேக்கேஜ்’ (Package) முறையில் பாடங்கள் வழங்கப்படுவதால், பல மாணவர்கள் தாங்கள் விரும்பும் கூடுதல் பாடங்களைத் தேர்வு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
குறிப்பிட்ட பாடத்திற்கு ஆசிரியர் இல்லாத சூழலில், அந்த பாடத்திற்கான ஆசிரியரை கல்வி அமைச்சிடம் கேட்டுப் பெற வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமையாகும். சில பள்ளிகளின் நிர்வாக தவற்றினால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து விடக்கூடாது.
“ஒரு மாணவர் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய முடியாவிட்டால், அவரின் எதிர்கால கனவுகளே சிதைந்து போகும். இது அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கும் தடையாக அமையும்,” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் வருடத்திற்கு சுமார் 40,000 மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் ஏறக்குறைய 4,000 பேர் இந்திய மாணவர்கள் என மதிப்பிடப்படுகின்றனர். ஆனால், தமிழ்மொழி பாடத் தேர்வை எழுதுபவர்கள் அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே, அதாவது சுமார் 15 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே தமிழ்மொழியைத் தேர்வு செய்கின்றனர் என்று சுரேன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் .
எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தை இந்திய மாணவர்கள் கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும். கடந்த 2024ஆம் ஆண்டு எஸ்டிஎம் தேர்வில் 526 மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை தேர்வு செய்திருந்தனர். இரண்டாவது தவணையில் அந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்ட நிலையில் மூன்றாவது தவணையில் அதன் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
தமிழ்ப் பாடத்தை தேர்வு செய்த மாணவர் எண்ணிக்கை தொடர் சரிவு காண்பதற்கு என்ன காரணம்? இந்நிலை மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஸ்ரீ முருகன் நிலையம் வரும் ஜூலை மாதம் முதல் எஸ்டிபிஎம் தமிழ்மொழிப் பாடத்திற்கான பயிற்சி வகுப்புகளை இணையவழி கட்டணம் இன்றி வழங்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.
“தமிழ்மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்கள், ஸ்ரீ முருகன் நிலையத்தில் கற்கிறோம்” என்று பள்ளிகளில் தெரிவிக்கலாம்.
“அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.
மேலும், மாணவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். ஏனென்றால் எஸ்டிபிஎம் பாடத் தேர்வை மாணவர்கள் இந்த ஒருவாரத்தில் முடிவு செய்தாக வேண்டிய சூழல் உள்ளது.
“அரசின் கல்விக் கொள்கையின்படி மாணவர்கள், தங்களின் எதிர்கால நலன் கருதி தாங்கள் விரும்பும் பாடங்களைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஏன் பேக்கேஜ் முறை கொண்டு வரப்பட்டுள்ளது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும், அவர்களின் உயர்க்கல்வி வாய்ப்புகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுரேன் கந்தா வலியுறுத்தினார்.


