
தமிழினத்தின் தலைநிலமாம் தமிழகத்தின் தமிழறிஞர், இம்மலையகத்து பாவலர் ப.மு. அன்வரையும் குமரி வான்முற்றம் இன்று நெஞ்சார நினைவுகூர்கிறது.
அறிவியல் தமிழ் வளர்த்த தமிழறிஞர் மணவை முஸ்தஃபா, ‘அறிவியல் தமிழ்த் தந்தை’ எனப் போற்றப்படுபவர், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைகளுக்கான எட்டு கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டு, அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு மறக்க முடியாத பங்களிப்பு செய்தவர், அவர்.
1935ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் இளங்காகுறிச்சியில் பிறந்த முஸ்தஃபா, சிறுவயதிலிருந்தே மொழி மற்றும் அறிவியல் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அறிவியல் தமிழ் அறிஞர் எனப் பல துறைகளில் பணியாற்றிய அவர், ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளை’ என்னும் தன்னார்வ அமைப்பை நிறுவி, அறிவியல் தமிழின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்தார்.
அறிவியல் தமிழ் மன்றத் தலைவராகவும், யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராகவும், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழ் பதிப்பு தலைமை பொறுப்பாசிரியராகவும் பணியாற்றிய அவர், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தமிழின் பயன்பாட்டை விரிவுபடுத்தினார்.
அவரின் பங்களிப்புகளைப் பாராட்டி, கலைமாமணி விருது, திரு.வி.க. விருது, அறிவியல் தமிழ்ச் சிற்பி விருது, தமிழ் தூதுவர் விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், அவர் சமைத்த இஸ்லாமும் சமய நல்லிணக்கமும், மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி போன்ற நூல்கள் சிறந்த படைப்புகளாகப் பாராட்டப்பட்டன.
2017ஆம் ஆண்டில் அவர் மறைந்தாலும், அறிவியல் தமிழை பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடியதாக மாற்றிய அவரின்பணி, தமிழின் வளர்ச்சிக்கும் அறிவியல் உலகின் பரவலுக்கும் இடையே பாலமாக இருந்து,
தமிழறிஞர்களின் வரிசையில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளது.

மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் நன்கு அறிமுகமான பாவலர் ப.மு.அன்வர் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பனந்தாள் எனும் இடத்தில் பக்கீர் முகமது ராவுத்தர், சபியாபிவி ஆகியோருக்கு 1942-ஆம் ஆண்டு சூன் 15-ஆம் நாள் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை தவித்திரு குமரகுருபரர் உயர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். 1956-இல் மலாயாவிற்கு வந்து தம்முடைய கல்வியைத் தொடர்ந்தார். பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பல அறிஞர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். சித்தர் பாடல்களையும் திருமுறைகளையும் கற்று நிறைந்த நூலறிவைப் பெற்றார்.
1957-ஆம் ஆண்டு தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் எழுதத் தொடங்கிய அன்வர், கவிதைவேள் கா.பெருமாள் வழியாகத் தம்முடைய கவிதைப் படைப்பாற்றலை நெறிப்படுத்திக் கொண்டார்.
இவருடைய தன்னுணர்ச்சிப் பாக்கள், கவிதை நாடகங்கள், இசைப் பாடல்கள் போன்ற படைப்புகள் மலேசிய வானொலியில் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி உள்ளார். ஆனால், அந்தப் பாடல்களை நூலாக்கம் செய்யவில்லை. எனினும், ‘செய்குசனான்’ எனும் குறும்பாவியலை நூலாக வெளியிட்டுள்ளார்.
இந்த நூல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2003-ஆம் ஆண்டின் டான்ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் விருதைப் பெற்றது. 5000 மலேசிய ரிங்கிட் பரிசாகவும் வழஙகப்பட்டது. இவர் மலேசியாவில் எண்ணற்ற பரிசுகள், விருதுகள், தங்கப் பதக்கங்களப் பெற்றுள்ளார்.
அருள்மதியம் பதிப்பகம் வெளியிட்ட ‘மலேசியத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம்’ தொகுப்புக் குழுவின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றி உள்ளார். ப. மு. அன்வர், மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு மூத்த தமிழ்ப் புலவர். சிந்துக் கண்ணியில் நிறைய பாடல்களை எழுதி உள்ளார்.
முஸ்தஃபா, அன்வர் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்த நாள் என்பதால், இவ்விரு சான்றோரையும் குமரி வான்முற்றம் நினைவுகூர்கிறது.


