
தமிழர் ஒற்றுமை, தொல் குடியினரான தமிழர்தம் பண்பாட்டு மேன்மை, காலம் கருதா தொண்டு ஆகிய மூவிலக்குகளை முன்னிறுத்தி கடந்த 25 ஆண்டுகளாக மலேசியத் தமிழ் சமுதாய வீதியில் செம்மாந்த உலா மேற்கொண்டு வரும் மலேசிய தமிழர் சங்கம் இப்பொழுது தன்னுடைய வெள்ளிவிழா கொண்டாட்டத்தை பெருமிதப் பெருக்குடன் கொண்டாடுகிறது.
நினைவில் வாழும் கவி பெருமகன் காரைக்கிழார், தமிழில் பாபுனைவதற்கென்றே பிறப்பெடுத்த மணிக் கவிஞர் பாதாசன், பழுதிலா தமிழ் நெஞ்சினர் பழ.எ. அன்பழகன் ஆகிய மூவரும் வித்திட்ட முச்சங்கம் முளைவிட்டு கிளை விட்டு ஆல்போல் விழுதுவிட்டு தற்பொழுது தமிழ் நெஞ்சர் பரமசிவனார் தலைமையில் நாடு முழுவதும் பரவி தமிழகம் புதுவை ஆகிய மாநிலங்களிலும் பெயர் சொல்லி மலேசியத் தமிழர் சங்கம் என்ற பரிமாணத்துடன் செம்மாந்த நிலையில் செயல்படுகிறது.
இந்த இயக்கம் தற்பொழுது வெள்ளி விழா ஆண்டை எட்டியுள்ள நிலையில் அதன் நிகழ்காலத் தலைவர் பரமசிவம் தலைமையில் மிகப்பெரிய விழா கொண்டாட்டத்தில் முனைப்பு காட்டி வருகின்றது.

இதன் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலைத் திங்கள் 19 ஆம் நாள் பெட்டாலிங் உத்தாமாவில் நடைபெறுகிறது.
கடந்த 2001-இல் புத்ரா உலக வாணிப மையத்தில் 5,000 பேர் புடைசூழ முத்தமிழ் சங்கம் உருவானது;
இந்நாட்டுத் தமிழர்களின் மொழி, இலக்கிய, பண்பாட்டு மரபுகளை போற்றி பாதுகாப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது, இந்த மொழி இன நலசார் அமைப்பு. அதோடு, தை முதல் நாளே தமிழர் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டு என்ற முழக்கத்தையும் முன்னெடுத்த அமைப்பு இது.
நாடு முழுவதும் பிரதிபலித்த இந்தத் தமிழ் முழக்கத்தினால் மலேசிய இந்து சங்கத்தின் அந்நாளையத் தலைவர் டத்தோ அ. வைத்திலிங்கம்கூட தை முதல் நாளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த செய்தியும் அச்சு ஊடகத்தில் வெளியானது.
இத்தகைய மலேசியத் தமிழர் சங்கத்திற்கு, டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் தலைவராக பொறுப்பேற்று சங்கத்திற்கு கோலாலம்பூர் ஈப்போ சாலை (Jalan Sultan Azlan Shah) முத்தியாரா வணிக வளாகத்தில் அலுவலகத்தை உருவாக்கி சங்கத்திற்கு சொத்தாக வாங்கி வைத்தார். தொடர்ந்து பதவியேற்ற செல்லதுரை, வழக்கறிஞர் எம். ஜி. கணேசன் ஆகியோர் தலைமையில் சங்கம் நாடு தழுவிய நிலையில் கிளைகளை அமைத்து மலேசியத் தமிழர் சங்கம் என்ற பெயரோடு இன்று நிலைபெற்றுள்ளது

இந்த அமைப்பின் ஐந்தாவது தலைவராக
சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் பொறுப்பேற்ற பரமசிவன் மருதை, மலேசிய தமிழ் சங்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகிறார்.
நிகழும் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 25 பேர் அடங்கிய குழுவோடு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநில அரசுகளுடன் உறவுப் பயணம் மேற்கொண்டது.
அதனைத் தொடர்ந்து, நாடு தழுவிய நிலையில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவ்வாண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 25 ஆம் ஆண்டு விழாவை பாரிய அளவில் கொண்டாடும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசியத் தமிழர் சங்கத்திற்கு ஒரு சமூக சேவை மையம் அமைக்கின்ற பணி தொடங்கப்பட்டு பெட்டாலிங் உத்தாமா பிஜேஎஸ் 1/48 இல் அந்த மையம் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலைத் திங்கள் 19 ஆம் நாள் இச்சேவை மையம் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கும்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பெட்டாலிங் உத்தாமாவில் வீற்றிருக்கும் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை எட்டு மணி முதல் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் ‘வண்ணம்
தீட்டும்’ போட்டியும் நடைபெறும்;
தொடர்ந்து பரத நடன நிகழ்வு ஆலய வளாகத்தில் நடைபெறும்.
காலை 11:00 மணி அளவில் மலேசியத் தமிழர் சங்கத்தின் புரவலர் டத்தோ பா. சகாதேவன் தலைமையில் வெள்ளி விழாக் கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
இதில், சிறப்பு வருகையாளராக சட்டத்துறை துணை அமைச்சர் மு. குலசேகரன், ம. இ.கா. தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
மலேசியத் தமிழர் சங்கத்தின் வரலாற்று நிகழ்வாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப தளத்தில் திருக்குறள் அதிகாரப்பூர்வமாக டத்தோ மு. சரவணனால் தொடக்கி வைக்கும் முத்தாய் போன நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து தக்கார் சிறப்பிப்பு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
நண்பகல் 12:00 மணிஅளவில் மலேசியத் தமிழர் சங்கத்தின் சேவை மையம் திறப்பு விழா இடம்பெறும்.
மலேசியத் தமிழர் சங்கத்தின் இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கு அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் அன்போடு அழைப்பதாக இதன் தொடர்பில் அண்மையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பரமசிவன் மருதை தெரிவித்தார்.


