
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் 36 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
கடுமையான பிரச்சாரத்திற்கு நடுவே சிரம்பான் ஜெயா தொகுதி ‘எண் 24’ தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜகோபாலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஏறக்குறைய 90 விழுக்காடு வாக்காளர்களை இதுவரை நேரில் சந்தித்து உள்ளதாகவும் சந்திக்கும் அனைவரும் மகத்தான ஆதரவை அள்ளி வழங்குவதாக தினாளன் தெரிவித்தார்.
18 ஆண்டுகளாக ஒரு மக்கள் பிரதிநிதி இருக்கிறார்; இருந்தும் என்ன பயன் என்று பெரும்பாலானவர்கள் என்னிடம் நேரில் வினவுகின்றனர்.

சிரம்பான் ஜெயா தொகுதியில் அதிகமான இடங்களில் கால்வாய்களும் வடிகால் முறையும் சீராக இல்லாததால் சிறு மழை பெய்தாலும் ஏற்படும் வெள்ளப் பிரச்சனை; வாழ்க்கை செலவின அதிகரிப்பு; வேலைவாய்ப்புச் சிக்கல் காரணமாக தொகுதி மக்களிடையே பேரளவில் அதிர்ச்சி நிலவுகிறது.
தவிர, கனரக வாகன ஓட்டுநர்களுக்கு வழங்கி வந்த 300 லிட்டர் டீசலை 200 லிட்டராக குறைத்ததால் கனரக வாகன உரிமையாளர்களும் ஓட்டுனர்களும் பெரும் இன்னலுக்கும் நட்டத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.
சிரம்பான் ஜெயா தொகுதியில் பெரும்பாலான மக்களுக்கு அரசாங்கத்தின் சமூக நல உதவி கிடைப்பதில்லை என்பதுதான் வாக்காளர் மத்தியில் பெரும் புகாராக இருக்கிறது.
அதனால் இம்முறை சிரம்பான் ஜெயா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; எனக்கும் வாக்களிக்க எண்ணம் கொண்டுள்ளதால் வருகின்ற சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் முதல் நாள் நடைபெற இருக்கின்ற தேர்தலில் தான் மட்டுமல்ல! தேசிய முன்னணியும் வென்று மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் டத்தோ தினாளன்.


