
தொல் தமிழினத்தின் மேன்மைக்கும் செம்மொழியாம் தமிழின் தொன்மைக்கும் கட்டியம் கூறும் தொல்காப்பியம் என்னும் மகுட நூல் குறித்த விழிப்புணர்வை புதுப்பிக்கும் நோக்கில் தொல்காப்பிய மாநாடு, வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 22-ஆம் நாள் ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத்தினால் நிகழ்த்தப்பட இருக்கிறது.
தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதி-காரம் என்னும் மூன்று இலக்கியங்களும் தமிழின் மும்மணிக் காப்பியங்கள்.
அவற்றுள் தலையாயச் செம்மணிக் காப்பியம் என்றால் அதுவே நனிமிகு தொல்காப்பியம் ஆகும். மூவாயிரம் ஆண்டுகள் பழைமையில் முதுமை காணும் தொல்காப்பியத்திற்கு முன்னதாக, தமிழில் பற்பல இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் தோன்றி மருவின.
இருப்பினும் தொல்காப்பியமே இலக்கிய வடிவில் இன்றும் துளிர்க்கும் முதன்மை-யான தமிழ் இலக்கண நூல் என்பது வெள்ளிடைமலை.
ஆயிரமாயிரம் தமிழ் இலக்கிய இலக்கணப் பாயிரங்கள் தோன்றின; ஊன்றின; மறைந்தன; ஆனால், தொல்காப்பியம் மட்டுமே சிதைவு பெறாமல் நலிவு பெறாமல் இன்றும் வழிவழியாகப் போற்றிப் பாது-காக்கபபட்டு வருகிறது.
தமிழ் மொழியின் இலக்கண விதிகளுக்கு ஓர் அடிப்படை நூலாகக் கோலோச்சுகிறது, தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்-காப்பியர். சேர நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அகத்தியரின் மாணவர்களில் ஒருவர். ஆனாலும், தொல்காப்பியரைப் பற்றிய நேர்த்தியான வரலாறு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்பதுதான் வேதனை கலந்த சோதனை.
அந்த வகையில் பன்னாட்டு அளவில் தொல்காப்பியத்திற்கு அண்மையில் ஒரு விழா எடுக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் அப்படி ஒரு விழா இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்பதே வருத்தம் அளிப்பதாக இருந்தது. அந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் மலேசியத் தமிழர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மலேசிய ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் அந்த முன்னெடுப்பைச் செய்துள்ளது.

முத்தமிழ்க் கனிச்சாறூற்றி நனிபெருக வாழ்த்துகிறோம். தொல்காப்பியத்தின் சிறப்புகளையும், அதன் உலகளாவிய பங்களிப்பையும் ஆராய்வதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.
தொல்காப்பியத்தின் தொன்மைக்கு பாயிரம் பாடும் விழாவாக உலகத் தொல்காப்பிய முதல் மாநாடு மலேசியாவின் பேராக், மாநிலத்தில் உள்ள கோபெங் ஆர்டிசி பாமா மாநாட்டு மையத்தில் வரும் காரிக்கிழமை, ஆகஸ்டு 22-இல் நடைபெற இருக்கிறது.
அதுவே, ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் வெள்ளி விழாவாகவும் களைகட்டுகிறது.
சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ. டாக்டர் மு. சரவணன் தலைமையில் நடைபெற இருக்கிறது.
நாடறிந்த கவிஞர் கவிரத்னா டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணன் இந்த விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். உலகளாவிய நிலையில் கல்விமான்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
தமிழின் தொன்மையையும் அதன் இலக்கணப் பாரம்பரியத்தையும் உலகளாவிய தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பது; தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் ஆகிய அதிகாரங்களில் உள்ள மொழியியல், சமூகவியல் மற்றும் வாழ்வியல் கோட்பாடுகளை நவீனக் கண்ணோட்டத்தில் ஆராய்வது; இளம் தலைமுறையினரிடையே தொல்காப்பியம் குறித்த விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் உருவாக்குவது போன்றவையே முதன்மை இலக்குகளாக அமைகின்றன.
இந்த மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து வருகை தரும் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வுச் சுருக்கங்களையும், கட்டுரைகளையும் சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார்கள். தொல்காப்பியத்தின் இலக்கண, சமூகவியல் மற்றும் வாழ்வியல் பெருமைகளைப் பிற மொழியினரும் அறியும் வண்ணம் கொண்டு சேர்ப்பது மற்றும் ஒரு நோக்கமாகும்.
அது மட்டுமின்றி, தொல்காப்பியத்தின் அனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய புதிய உலகளாவிய பார்வைகளை ஒரே தளத்தில் திரட்டுதல். புலம்பெயர் சூழலில் வாழும் இளைய தலைமுறையினரிடம் தொல்காப்பியக் கல்வி மீதான ஈடுபாட்டை அதிகரித்தல்; அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களிடமிருந்து பெறப்படும் தரமான கட்டுரைகள் நூல் வடிவில் குக்கப்பட்டு மாநாட்டில் வெளியிடுவது பிற நோக்கங்களாகும்.

தொல்காப்பியம் மிக எளிமையான நூல். தொடக்கப் பள்ளி மாணவர்கள்கூட எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஒன்றை மட்டும் மறந்துவிட வேண்டாம். அது ஓர் இலக்கண நூல். இலக்கியம் அல்ல. போகப் போக இனிக்கும்.
இவ்வளவு நாளும் தெரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கிறோமே என்று காலம் தாழ்ந்து வருத்தப் படலாம். தமிழ் மொழிக்கு இலக்கணம் சொல்லும் நூல் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கசப்பும் இருக்காது. துவர்ப்பும் இருக்காது.
தொல்காப்பியம் 1,610 பாட்டுகளால் ஆனது. இதில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன.
ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது இயல்கள். ஆக மொத்தம் இருபத்தேழு இயல்கள். பாடல்களாகவே எல்லாக் கருத்துகளும் சொல்லப் படுகின்றன. அவற்றைச் சூத்திரம் அல்லது நூற்பா என்றும் சொல்வர்.
தமிழ் நூல்கள் பெரும்பாலும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குவது வழக்கம். ஆனால், தொல்காப்பியம் அப்படி அல்ல. அதற்கு கடவுள் வாழ்த்து வழங்கவில்லை.
தொல்காப்பியத்திற்குப் பாயிரம் என்பது மட்டும் இருக்கிறது. பாயிரம் என்றால் கவிதை நடையில் முன்னுரை. அந்தப் பாயிரத்தில் தமிழகத்தின் எல்லை “வடவேங்கடம் தென் குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று குறிப்பிடப் பட்டு இருக்கிறது. அந்தப் பாயிரத்தை எழுதியவர் தொல்காப்பியருடன் கல்வி பயின்ற பனம்பாரனார்.
தொல்காப்பியத்தில் முதலில் வருவது எழுத்து அதிகாரம். தமிழின் முதல் எழுத்துகளைப் பற்றி சொல்கிறது. தமிழ் எழுத்துகளைப் பற்றிச் சொல்லும் தொல்காப்பியம் எழுத்தின் வடிவம் பற்றி சொல்லவில்லை. மெய் எழுத்துகளுக்கு புள்ளி வரும் என்கிறது. ஆனால், புள்ளி எங்கே இருக்கும் என்று சொல்லவில்லை. முன்னைக் காலத்தில் பனை ஓலையில் எழுதினார்கள். அதனால், புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும். அந்த வகையில் தமிழ் எழுத்துகளுக்கு புள்ளி வைப்பது இல்லை.

அடுத்து, இந்த எழுத்து அதிகாரம் எழுத்துகள் பிறப்பதைப் பற்றிச் சொல்கிறது. ஒலி என்பதுதான் சொல் ஆகிறது. அந்த ஒலியை அரவம், இசை, ஓசை என்கிறார்கள். சீன மொழியைத் தவிர, உலகில் உள்ள மற்ற எல்லா மொழிகளும் ஒலி எழுத்துகளால்-தான் எழுதப் படுகின்றன. ஆங்கிலத்தில் Phonetics என்று சொல்வார்கள்.
எழுத்து அதிகாரத்தில் தனித்து நிற்கும் எழுத்து; சொல்லுக்கு இடையில் வரும்போது அந்த எழுத்தின் நிலை; எழுத்துகளின் உச்சரிப்பு நிலை; சொற்களில் எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் நிலைகள்; சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் போன்றவை விளக்கப் படுகின்றன.
இரண்டாவதாக வருவது சொல் அதிகாரம். 463 நூற்பாக்கள் கொண்டது. சொல்லப் படுவது என்பது சொல். அந்தச் சொல்தான், எழுத்தால் எழுதப் படுகிறது. ஒரு மொழிக்கு முதலில் சொல்தான் வந்தது. அப்புறம் தான் எழுத்து வந்தது. அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த அதிகாரத்தில் தமிழ்ச் சொற்கள், தொடர்களாக அமையும் முறை; வேற்றுமைத் தொடர் இலக்கணம்; தனிச் சொற்களின் இலக்கணம் போன்றவை சொல்லப் படுகின்றன. சொல்லதிகாரத்தில் தமிழ் மொழியை எவ்வாறு பேசுவது, எவ்வாறு எழுதுவது, பேசவும் எழுதவும் எவ்வாறு சொற்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தொல்காப்பியம் சொல்கிறது. “எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி’ என்று விளக்கம் தருகிறது பாயிரம்.
மூன்றாவதாக வருவது பொருள் அதிகாரம். அன்றைய காலத்து மக்களின் வாழ்வு எப்படி இருந்தது. இந்த அதிகாரத்தில் அது விளக்கப் படுகிறது. இந்த அதிகாரம் தமிழ் மொழியில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்புடைய ஒரு பகுதி என்றும் சொல்லலாம்.
மனிதர்கள் தங்கள் அறிவாலும் ஆற்றலா-லும் கண்டறிந்த எழுத்தையும் சொல்லையும் கொண்டு புனையப்படும் வாழ்க்கைக்கு இலக்கணம் கூறுகிறது இந்தப் பொருளதி-காரம்.
இந்த அதிகாரத்தில், அகத் திணையியல், புறத் திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்கள் உள்ளன.
தமிழ் இலக்கியம் என்பது திணை கோட்-பாட்டைச் சார்ந்தது. ஏழு திணைகள் உள்ளன என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஏழு திணைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் திணைகள் நிலங்கள் சம்பந்தப் பட்டவை. இதில் நிலம் இல்லாத பாலை எனும் திணையும் சேர்ந்து கொள்கிறது. பாலை என்பது ஓர் அகத்திணையாகும்.
இந்த அகத்திணைப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழி நற்றாய், செவிலித் தாய்கள் என்று பொதுவாகச் சொல்லப்படும். ஆனால், அவற்றுக்குப் பெயர்கள் வழங்கப் படுவது இல்லை. “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ என்பது தொல்காப்பியக் கூற்று.
தொல்காப்பிய நூல், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும் பொறிக்கப்படவில்லை. எனவே காலம் தோறும் பனைவோலையில் எழுதியே படித்து வந்தனர்
தமிழில் தொல்காப்பியத்திற்குப் பிறகு சிறந்த இலக்கண நூல் எதுவும் எழுதப்பட வில்லை.
தொல்காப்பியம் எழுதப்பட்ட ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கு உரை எழுத ஆரம்பித்தார்கள். அப்படி எழுதியவர்கள், அவர்களின் காலத்து இலக்கண, இலக்கிய அறிவின் அடிப்படை-யிலேயே உரை எழுதி இருக்கின்றனர்.
இளம்பூரணர், பேராசிரியர் சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் போன்ற புலவர்களின் தொல்ஃகாப்பிய உரைகளைத் தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.
தொல்காப்பியம் என்பது தமிழின் முதல் நூல். தமிழ் அறிவின் உச்சமான படைப்பு என்றும் ஏற்கப் பட்டுள்ளது. ஆக, தொல்-காப்பியம் என்றால் என்ன என்று இப்போது உங்களுக்கு ஓரளவுக்குப் புரிந்து இருக்கும்.
தொல்காப்பியம் தோன்றியபிறகு, அதனை அடிப்படையாகக் கொண்டு பற்பல இலக்கண நூல்கள் தோன்றின. அவற்றில் முதன்மையாக வருபவை ஐந்திலக்கண நூல்கள் ஆகும்.
அந்த ஐந்திலக்கண நூல்களின் பெயர்கள். 1. வீரசோழியம் 2. இலக்கண விளக்கம் 3. தொன்னூல் விளக்கம் 4. முத்து வீரியம் 5. சுவாமிநாதம். இந்த நூல்களில் இன்னும் இரண்டு நூல்கள் உள்ளன. தமிழ்நெறி விளக்கம், நன்னூல் இவை இரண்டும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்ல. அதனால், ஏழு இலக்கண நூல்கள் என்பதற்குப் பதிலாக ஐந்திலக்கண நூல்கள் என்று அழைக்கின்றனர்
தொல்காப்பியத்தில் மூன்றாவதாகச் சொல்லப்படும் பொருள் அதிகாரம் இருக்கிறதே, அதில் ஒரு பிரிவுதான் யாப்பிலக்கணம். இந்த யாப்பிலக்கணம் ஒரு பெரிய பிரிவு. அதனால், அதைத் தனியாகப் பிரித்து எடுத்து தனித்துவிட்டனர். அதே மாதிரிதான் அணி இலக்கணமும்; இந்த இலக்கணம், பொருள் அதிகாரத்தில் மற்றொரு பெரிய பிரிவு. இந்த யாப்பிலக்கணமும், அணி இலக்கணமும் இரட்டைப் பிறவியரைப் போல சேர்ந்தே வரும்.
அணி என்றால் அழகு. செய்யுள்களில் அமைந்து வரும் சொல் அழகு, பொருள் அழகு போன்றவற்றை வரையறுத்துக் கூறுவது இந்த அணி இலக்கணம் ஆகும். அணி இலக்கணத்திற்கு ஒரு பெரிய விளக்கம் சொல்லும் நூலே இருக்கிறது. அதன் பெயர் தண்டியலங்காரம். அணி இலக்கணத்தை இன்னும் பிரிக்கலாம்.
அதிசய அணி, சிலேடை அணி, தீவக அணி, வாழ்த்தணி, மயக்க அணி என்று மொத்தம் 35 அணிகள் உள்ளன. இவற்றை எல்லாம் கேட்கும் போது, முதலில் மயக்கம் வருகிற மாதிரி இருக்கலாம். போகப் போக எல்லாம் சரியாகி மயக்கம் தெளிந்து விடும்.
ஒன்றை மட்டும் மறந்து விட வேண்டாம். இந்த மாதிரி 3000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழின் இலக்கணத்தைச் சல்லடை போட்டு பிரித்து வகுத்துப் பார்த்து இருக்கிறனர் என்றால், அவர்களின் தமிழாற்றலை என்னவென்று சொல்வது?.
தமிழ்மொழியின் தோற்றம் மிக மிகத் தொன்மையானது. அப்படிப்பட்ட மொழியில் தொல்காப்பியம் என்கிற ஓர் இலக்கண இலக்கியமும் ஐக்கியமாகிறது. ஆக, தொல்காப்பியத்திற்கு இணையாக, வேறு ஒரு நூல் இதுவரைக்கும் நமக்குக் கிடைக்கவில்லை.
தொல்காப்பியத்தைப் போல இன்னொரு நூல், இனி கிடைக்கப் போவதில்லை.
முதற்சங்கத்தில் குமரிக் கண்டம் தோன்றி மறைந்தது. இடைச்சங்கத்தில் கபாடபுரம் தோன்றி மறைந்தது. கடைச்சங்கத்தில் மதுரை அழிந்து போனது. இந்தக் கடைச் சங்கத்தில் தோன்றிய நூல்தான் தொல்காப்பியம்.
படைப்பு:
பாவலர் அருள் ஆறுமுகம்



சிறப்பு …நல்ல பணி …வாழ்த்துகள்….மாநாடு சிறக்கட்டும்