
பத்துமலை வட்டாரம், தாமான் ஸ்ரீ கோம்பாக்-பிங்கிரான் பகுதியை ஒட்டியுள்ள கம்போங் தெமெங்கோங் அருள்மிகு சிவ இராஜ காளியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டால் அதற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராயுடு பதில் சொல்ல வேண்டும் என்று மலேசிய தமிழர் முன்னேற்றக் கட்சி தலைவர் ஸ்ரீ ரமேஷ் தெரிவித்துள்ளார்.
1960-களில் இருந்து வட்டார மக்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கி வந்தது, இந்த சூழலில் இவ்வாலயம் 1993- இல் சிக்கலை எதிர்கொண்டது.
டிஎன்பி நிறுவனத்தின் சார்பில் உயிர் அழுத்த மின் கம்பிவடப் பாதை அமைக்க வேண்டி இருந்ததால் கம்போங் தெமெங்கோங் பகுதி மக்கள் அருகிலுள்ள அடுக்ககத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அந்த நேரத்தில் ஆலயம் இருந்த இடம் கவனத்தில் கொள்ளாமல் கைவிடப்பட்டது. இதன் தொடர்பில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடமும் மாவட்ட நில அலுவலகத்திடமும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
ஏதும் தீர்வு கிடைக்காத நிலையில் 2018ல், தொகுதி எம்பி யும் மாநில மந்திரி பெசாருமாகிய டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அன்றைய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதி ராவிடமும் இந்த சிக்கல் குறித்து தெரிவிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில், ஆலயத்தை வேறு இடத்தில் மாற்றி அமைப்பதற்காக மாநில அரசாங்கம் ஒப்புதல் கொடுத்தது. இருந்தபோதும் அதற்கான ஆவணம் முறையாக கிடைக்க வில்லை. அவரை அடுத்து வந்த ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடுவிடம் நான்கு முறை கடிதம் கொடுத்து இந்த சிக்கலைத் தீர்க்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.. ஆனால், பாப்பா ராய்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் டிஎன்பி நிறுவனமோ ராட்சச கான்கிரீட் பாலங்களை போட்டு அருள்மிகு இராஜ காளியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் அண்மை காலமாக அடியோடு தடை ஏற்படுத்தி உள்ளது.

சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு புதிதாக வழங்கப்பட்ட இடத்திற்கு உரிய பட்டா இதுவரை வழங்கப்படாததால் ஆலய நிர்வாகத்தினராலும் வட்டார பக்தர்களாலும் அங்கு புதிய ஆலயத்தை எழுப்ப முடியவில்லை;
அதனால் இப்போது இருக்கின்ற பழைய ஆலயத்திலாவது வழிபாட்டைத் தொடரலாம் என்றால் அதற்கும் அனைத்து தரப்பினரும் தடை ஏற்படுத்துவதால் வட்டார மக்கள் வழிபாட்டிற்கு இடம் இன்றி பரிதிவிக்கின்றனர் என்று ரமேஷ் இந்த விவகாரம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபொழுது தெரிவித்தார்.
ஏறக்குறைய 8,000 இந்து குடும்பத்தினர் அண்மைய ஆடி மாத பூசனைகளைக் கூட தொடர முடியாமல் தேங்கி நின்றனர் என்று இதன் தொடர்பில் செய்தியாளர்களிடம் ஸ்ரீ ரமேஷ் மேலும் தெரிவித்தார்.
மொத்தத்தில் இந்த ஆலயத்திற்கு எந்த சிக்கல் நேர்ந்தாலோ ஆலயம் இடிக்கப்பட்டாலோ அதற்கு பாப்பா ராயுடு பதில் சொல்ல வேண்டும் என்றும் ஸ்ரீ ரமேஷ் குறிப்பிட்டார்.
எது எவ்வாறாக இருந்த போதிலும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அம்ருதீன் ஷாரி ஆலயம் தற்பொழுது அமைந்துள்ள இடத்திற்கான பாதையை உடனே திறந்து விடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இதற்கிடையில் மாற்று இடமாக வழங்கப்பட்ட இடத்திற்கான ஆவணங்கள் உடனே கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மந்திரி பெசாரைக் கேட்டுக் கொள்வதாகவும் ஸ்ரீ ரமேஷ் மேலும்தெரிவித்துள்ளார்.


