Wednesday, September 23, 2026

மலேசியத் தமிழர் தன்மான சிந்தனைப் பேரவை ஏற்பாட்டில் டான்ஸ்ரீ குமரனுக்கு விருதளிப்பு!-இன்று மாலை சோமா அரங்கில்!!

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், முழு சுய சிந்தனையாளர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஏழாவது(147) பிறந்த நாளை முன்னிட்டு (செப்டம்பர் 17) மலேசியந் தமிழர் தன்மான சிந்தனைப் பேரவை ஏற்பாட்டில் மலேசிய இந்திய சமுதாயத்தின் வாழும் வரலாறாக விளங்குகின்ற தான்ஸ்ரீ க. குமரனுக்கு இன்று புதன்கிழமை மாலை ஆறே முக்கால் மணி அளவில் தலைநகரத்து தான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கத்தில் பாராட்டு விருதளிப்பு விழா நடைபெற இருக்கிறது

மலேசிய இந்திய சமுதாயத்தில் கடந்த நூற்றாண்டையும் இந்த நூற்றாண்டையும் இணைத்து வாழ்கின்ற பெருந்தலைவர்களில் ஒருவரான ஐயா டான்ஸ்ரீ குமரனின் உள்ளத்தில் ஏராளமான அரசியல்-வரலாற்று-சமூக சிந்தனைகள் பொதிந்துள்ளன. அவரை இன்றைய மலேசிய இந்திய சமூகத்து இளைஞர்கள் வகையாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அது அவர்களுக்குத்தான் இழப்பாக அமையும்.

அத்தகைய பெரு மகனார்க்கு இன்று சிறப்பு செய்யப்பட இருக்கிறது.

மலேசியத் தமிழர் தன்மான சிந்தனை பேரவையின் பொதுச் செயலாளர் மானமிகு சி.மு. முந்தைய குமரன் ஒருங்கிணைப்பில் நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்ச்சியில் இதே பேரவையின் துணைத் தலைவர் தன்மான பெருஞ்சுடர் த. பரமசிவம் வரவேற்பு உரையாற்ற இருக்கிறார்.

தொடர்ந்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ மு. சரவணனின் தலைமை உரைக்குப்பின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும் நிருவாக இயக்குநருமான ‘சமூகக் காவலர்’ டத்தோ பா. சகாதேவன் வழங்கும் அன்புரை, மலாயா பல்கலைக்கழக தமிழ்த் துறையின் மேனாள் இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியன் ஆற்றும் வரலாற்று உரை, மலேசியத் தமிழர் தன்மான சிந்தனைபா பேரவையின் தேசியத் தலைவர் ‘எழுத்த்ண்மை ஏந்தல்’ முனைவர் பெரு.அ. தமிழ்மணி வழங்கும் பாராட்டுரையைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் நாயகன் குமரன் விருதையும் சிறப்பையும் ஏற்று, ஏற்புரை வழங்க இருக்கிறார்.

இந்த அமைப்பின் துணைச் செயலாளர் மானமிகு பெ. கோவிந்தசாமி ஆற்றும் நன்றி உரையுடன் நிறைவு பெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் நாடும் படி தமிழ் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் ஏற்பாட்டுக் குழுவினர் வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை