
தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்திற்கான வாராந்திர கற்பித்தல் நேரத்தை 12 பாடவேளைகளிலிருந்து(வகுப்பு நேரம்) 10 பாடவேளைகளாகக் குறைக்க முன்வைக்கப்பட்டுள்ள 2027 கல்விப் பாடத்திட்ட மறுசீரமைப்புத் திட்டத்திற்கு, மலேசிய இந்தியற் காங்கிரஸ்-மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃப்ட்லினா சிடேக்கிற்கு அவர் அதிகாரப்-பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளதோடு, அதன் நகலை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கும் ந்ற்று அனுப்பியுள்ளார்.
இந்த முன்மொழிவு ஆசிரியர்கள், பெற்றோர் கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மற்றும் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சரவணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
“2027 கல்விப் பாடத்திட்ட மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ் மொழிப் பாட நேரத்தை வாரத்திற்கு 12-இலிருந்து 10 ஆகக் குறைக்கும் முயற்சியை நான் உறுதியாக எதிர்க்கிறேன்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மலேசியத் தமிழர்களின் மொழி, கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதில் தமிழ்ப்பள்ளிகள் மிக முக்கியப் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் மொழிக் கல்வி என்பது வெறும் கற்றல் அல்லாது தொடர்பாடல் மட்டுமல்ல; மாணவர்களின் அறிவாற்றல், உணர்வுப்பூர்வ வளர்ச்சி, பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் அடையாள உருவாக்கத்தில் தாய்மொழிக் கல்வி முக்கிய அடித்தளமாக அமைகின்றது என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பாடங்கள் அல்லது கல்விக் கூறுகளுக்காக இடமளிக்கும் நோக்கில் தற்போதுள்ள தாய்மொழிக் கற்பித்தல் நேரத்தைக் குறைக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்; கல்வி அமைச்சின் ஆளுமை மேம்பாட்டுப் பாடக்கூறு (Character Building Module) திட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்த சரவணன், அதனை தற்போது உள்ள நன்னெறிக் கல்விப் பாடத்துடன் ஒருங்கிணைக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
இதன்மூலம் தமிழ் மொழிப் பாட நேரத்தைக் குறைக்காமல் புதிய கூறுகளை அறிமுகப் படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே, கல்வி அமைச்சு தனது பாடத்திட்ட மறுசீரமைப்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, தமிழ்ப்பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள வாராந்திர 12 தமிழ் மொழிப் பாடவேளைகளைத் தொடரவோ அல்லது அதிகரிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரவணன் கேட்டுக் கொண்டார். மேலும், புதிய பாடத்திட்டத்தின்படி, தாய்மொழிக் கல்விக்கான நேர ஒதுக்கீடு முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


