
காவல்துறையில் உயர் ஆணையராக பணியாற்றியவரா இவர் என்று வியக்கும் அளவிற்கு தமிழ் இலக்கியவாணராக பரிணமித்துவரும் டத்தோஸ்ரீ முனைவர் தெய்வீகன் ஆறுமுகம், மலாயா பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பெருமகனாரை குமரி நல்லாள் முதற்கண் வாழ்த்துகிறாள்!
நம் நாட்டில் நிறுவப்பட்ட முதல் பல்கலைக் கழகமான மலாயா பல்கலைக்கழகம், பன்னாட்டு கல்வி முனையமாக உருமாற்றம் கண்டுள்ளது மிகமிக பெருமைக்குரியது;
இதன் வரலாறு, கடந்த இருபதாம் நூற்றாண் டின் தொடக்கத்திலேயே(28.9.1905) ஆரம்ப மாகிறது. இதன் முதல் வேந்தராக நியமிக்கப் பட்டவர் மலாயாவின் தேசியத் தந்தை மேதகு துங்கு அப்துல் ரகுமான்.
சிங்கப்பூரிலும், மலாயாவிலும் இரண்டு பிரிவாக இயங்கிய இந்த சகலகலாசாலை, 1959க்குப்பின் மலாயாவில் வேரூன்றி, பெரும் ஆலமரம்போல், தழைத்தோங்கியது.
அறிவுமிக்க, ஆற்றல்மிக்க, திறன்மிக்க, தரமிக்க அறிஞர்கள், கல்விமான்கள், சிந்தனையாளர்கள் புடம்பெற்ற உயர் கல்வி நிலையம் இது.
தவிர, மருத்துவம், சட்டம், பொருளியல், பொறியியல் என்று பல்துறை சார்ந்து ஆயிரக்கணக்கான செம்மார்ந்த பெருமக்களை உருவாக்கிய, பெருமை இந்த பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
நாட்டின் வளர்ச்சிக்கும் வளப்பத்திற்கும் வழிகாட்டியதுடன் அரசியல் தலைவர்களை உருவாக்கியும் தந்த உயிர் கல்வி முனையம் இது.
1957ல் நாடு சுதந்திரம் பெற்றபின்பு அதிவேகத்தில் சாதனைப் படைத்து வருவது கண்கூடு.

இத்தகைய சிறப்பும் பெருமையும் மிக்க பல்கலைகழகத்தில் பயின்று, இந்திய ஆய்வியல் துறையில் இளங்கலை பட்டம்பெற்று, காவல்துறையில் இளம் அதிகாரியாக பணியில் அமர்ந்து, பின்னர் இங்கிலாந்தின் நாட்டிங்காம் பலகலைக் கழகத்தில் குற்றவியல் கல்வியில் முதுகலை பட்டம்பெற்று, பின்னர் அதே குற்றவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர் டத்தோஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகம்.
மலேசிய காவல் துறையின் 200 ஆண்டுகால வரலாற்றில் முதன் முதலாக, மூன்று நட்சத்திர கமிஷனராக உயர்ந்த, தமிழ்ப் பள்ளியில் பயின்ற தமிழர், இவர்.
காவல் துறையில் ஏ.எஸ்.பி.யாக சேர்ந்த இவர், காவல்துறை ஆணையராக உயர்ந்த இவர், பணி ஓய்வு பெற்றபின், தற்பொழுது நாடெங்கிலும் குற்றவியல், குற்றத்தடுப்பு, என்று காவலர்களுக்கும் சட்ட அமலாக்கத் துறையினர்க்கும் உரையாற்றி, பயிற்சியும் அளித்து வருகிறார். அதேவேளையில், நாடெங்கும், இன்று இலக்கிய நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள், சமுதாய விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளில் இவரின் இனிமையான தமிழுரையைக் கேட்கலாம்.
கேட்டார் பிணிக்கும் தகையவாய்க், கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்-(குறள் 643)
என்பதற்கு இவரின் உரைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
மலாய்மொழி, ஆங்கிலம், தமிழ் என மும்மொழிகளிலும், சரளாமாகவும், தெளிவாகவும் பேசும் வல்லமை உடையவர்.
இன்றுவரை தமிழையும், குறிப்பாக சங்க இலக்கியங்ளையும் எடுத்தியம்பி, மக்களை மட்டுமல்ல, மாணவர்களின் சிந்தனையை-யும் தட்டி எழுப்பும் ஆற்றல் படைத்தவர் என்பதை, அவரின் உரையை செவிமடுத்-தோர் அறிவர்.

இத்தகைய சீர்மிகு தமிழ் மகனார்க்கு மலாயாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ ‘Ir’ டாக்டர் நூர் அஸூவான் சிறப்புப் பேராசிரியர்(Adjunct Professor)நியமனக் கடிதத்தையும் சான்று பட்டயத்தையும் அண்மையில் அளித்தார்.
இம்மலையகத் திருநாடுவாழ் இந்தியர்-களுக்கும், தமிழர்களுக்கும் பெருமையுடன் சிறப்பையும் சேர்த்துவரும் நனிசிறந்த தமிழ்த் தலைவராகிய இவரை, மலாயாப் பல்கலைகழகம், (சிறப்புநிலை) பேராசிரியராக நியமித்துள்ளது மகிழ்ச்சி யளிக்கிறது; பெருமை தருகிறது.
இந்த நியமனம், ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கும் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது. அன்னாரின் சேவை, தொடர்ந்து மிளிர, இறையருள் துணை நல்கட்டும்.


