
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கின்றன வேளையில், களப்பணி உச்சத்தைத் தொட்டுள்ளது என்று ம இ கா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
காடேக் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் நடராஜன் செல்லப்பா போட்டி இடுகின்ற நிலையில் அவரை ஆதரித்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதிலுமிருந்தும் மஇகா முக்கியத் தலைவர்கள் காடேக் தொகுதியில் குவிந்துள்ளதாக சரவணன் தெரிவித்தார்.

காடேக் தொகுதியில் அமைந்துள்ள மஇகா தேர்தல் நடவடிக்கை அறையில் செய்தியாளர்களை சற்று முன் சந்தித்த பொழுது, நாளை மறுநாள் நடைபெற இருக்கின்ற மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்ற வேளையில் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்ற மஇகா வேட்பாளர் நடராஜன் வெற்றி பெற்றால் அவர் நிச்சயமாக மலாக்கா மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார் என்பதால் அவரை அனைத்து இந்திய வாக்காளர்களும் ஆதரித்து வெற்றி பெற செய்யும்படி அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

மாநில அளவில் தேசிய முன்னணி வெற்றிபெற்று, இந்த தொகுதியில் மட்டும் எதிரணியில் போட்டியிடுகின்ற இந்திய வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் ஆட்சிக் குழுவில் இடம் பெறும் வாய்ப்பில்லை என்பதால் இந்திய வாக்காளர்கள் அனைவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து நடராஜாவை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று சரவணன் மேலும் கேட்டுக் கொண்டார்.

இந்தத் தேர்தல் பரப்புரைக்காக பயணம் செய்கின்ற பொழுது தற்போதைய தேசிய முன்னணி ஆட்சியே தொடர வேண்டும் என்று அனைத்து மக்களும் விரும்புவதாக காடேக் வேட்பாளர் நடராஜாவிற்காக அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மஇகா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ அசோகன் தெரிவித்தார்.


