
விடுமுறை வாசத்தை அறியாத தமிழ்ப் பத்தி பத்திரிகையாளர்கள் சீன புத்தாண்டு விடுமுறையின் போது கிடைத்த ஒரே ஒரு நாளையும் தத்தம் குடும்பத்தினருடன்ஒரே குடும்பமாக அணிதிரண்டு கொண்டாடித் தீர்த்தனர்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் 2025 குடும்பத்தின விழா ஜனவரி 29ஆம் நாள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் டத்தோஸ்ரீ மு. சரவணன், தமிழ் ஊடகத்தை பொருத்தவரை அது அச்சு ஊடகமாக இருந்தாலும் அல்லது இணைய ஊடகமாக இருந்தாலும் பொதுவாக செய்தியாளர்கள்தான் வெளிச்சத்தில் இருப்பார்கள். ஆனால் இந்த விழாவில் அலுவலக நிர்வாக பணியை சேர்ந்தவர்கள், பிழைதிர்த்தும் பணியாளர்கள் அச்சுக்கோப்பு முதலிய பணிகளில் ஈடுபட்டவர்களை எல்லாம் மேடை ஏற்றி சிறப்பு செய்த பாங்கு மிகவும் பாராட்டுக்குரியது. இத்தகைய ஏற்பாட்டை செய்த தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சே.வே. முத்தமிழ் மன்னனையும் செயலாளர் வெற்றி வாணனையும் மிகவும் பாராட்டுவதாக குறிப்பிட்டார்.

ஊடக வட்டத்தை சேர்ந்த செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் படுகின்ற சிரமத்தை தான் நன்கு அறிவதாக மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா தேசிய துணைத் தலைவர் சரவணன் குறிப்பிட்டார்.
அதேவேளை, அச்சு ஊடகங்களை நடத்துகின்ற முதலாளி தரப்பினர் எதிர்கொள்கின்ற சிரமத்தையும் நினைவு கூர்ந்தார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கு துல்லியமான சரியான தகவலை கொண்டு சேர்ப்பதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுபவர்கள் பத்திரிகையாளர்கள். இவர்கள் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
எத்தகைய செய்தியாக இருந்தாலும் அதன் உண்மைநிலை மாறாமல் சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதில் இவர்கள் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது என்றார் சரவணன்.

இத்தகைய பணியை ஆற்றி வரும் அச்சு மற்றும் மின்னியல் ஊடகத்துறையினர் மற்றும் பணியாளர்களுக்காக, தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் குடும்ப தின விழாவை நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தங்களிடையிலான உறவை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி பெரிதும் துணை புரிகிறது என்று நாட்டின் பாரம்பரிய தலைநகரம் கோலாலம்பூருக்கும் வழிப்பாட்டுத் தலமும் சுற்றுலாத் தளமுமான பத்துமலைக்கும் இடையில் தாமான் கோப்பராசி போலீஸ் 2, சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமை உரை ஆற்றிய சரவணன் குறிப்பிட்டார்.
“சமுதாயத்தின் குரலாக ஒலிப்பவர்கள் பத்திரிகையாளர்கள். இதில் பத்திரிகை தர்மம் என்பது மிக முக்கியம். வெல்வதும் வீழ்வதும் இவர்களின் கைகளில்தான் உள்ளது” என்றார்.

முத்தமிழ் மன்னன் தலைமையில் இச்சங்கம் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பதைப் பாராட்டிய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் இச்சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 5,000 வெள்ளியை வழங்குவதாக மேலும் கூறினார்.
அச்சு ஊடக செய்தியாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தில், தற்போது இணைய ஊடகத்தினர் உட்பட 170க்கும் அதிகமானோர் உறுப்பியம் பெற்றுள்ளனர்.
முன்னதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணனுக்கு முத்தமிழ் மன்னன், வெற்றி விக்டர், பத்திரிகையாளர் சங்க துணை தலைவர் காளிதாசன் வெங்கடேசன், உதவி தலைவர்களான காளிதாசன் இளங்கோ ஜீவா, ரவி முனியாண்டி மற்றும் சங்கத்தின் செயலவை உறுப்பினர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

தமிழ் ஊடகத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்காக நடத்தப்பட்ட இவ்விழாவில் மனிதநேய மாமணி ரத்தினவள்ளி அம்மையாரும் வருகை புரிந்தது, உணவு செலவையும் ஏற்றுக்கொண்டார்.
மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்களை பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து சிறப்பித்தார்.
தகவல் துறை அமைச்சர் அமைச்சர் ஃபாமி ஃபாட்சில், இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலையில் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருநாதார்.
மைலோ உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள், பொது இயக்கங்கள், தனிப்பட்ட வர்த்தக பெருமக்களின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சியை விழா ஏற்பாட்டு குழுத் தலைவர் ஜீவா சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட செயற்குழுவினரின் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்
கிறிஸ்ட் சின்னப்பனின் கலகலப்பான அறிவிப்பும் எஸ்எஸ்ஆர் குழுவினரின் கண் கவர் நடனமும் செவிக்கினிய பாடல்களும் நிகழ்ச்சிக்கு இனிமை சேர்த்தன.

அதிர்ஷ்ட குலுக்கல், சேலை அழுகு ராணி போட்டி, பஞ்சாபி ஆடை அழகு ராணி போட்டி சிறுவர் நடன போட்டி என்றெல்லாம் இந்த நிகழ்ச்சி, இனிமையான சூழலில் கலகலப்பாக நடைபெற்றது
தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் மஇகா தேசிய உதவி தலைவர் டத்தோ டி.முருகையா, இளைஞர் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன், ம இகா தேசிய விளையாட்டுப் பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் , புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் , கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், அமைச்சர் ஃபாமி ஃபாட்சிலின் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன், ‘ஸ்பான்’ தலைவர் சார்லஸ் சந்தியாகோ, ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜ், டத்தோ இராமநாதன், உலு சிலாங்கூர் கவுன்சிலர் பல,புவனேசுவரன் பச்சைமுத்து, விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்தியா சுதாகரன், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குனர் சுரேந்திரன் என அரசுசார் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் சார்பில் திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.


