
காவல் துறையில் செம்மாந்த முறையில் பணியாற்றி பெயரோடும் புகழோடும் ஓய்வு பெற்றபின் இலக்கிய வல்லாராக உருமாற்றம் கண்டுள்ள டத்தோஸ்ரீ தெய்வீகன்- டத்தீன்ஸ்ரீ கோமதி தம்பதியரின் புதல்வி மருத்துவர் அபிநயா-டாக்டர் ஜெராய்டு ஹேகன் ஆகியோரின் திருமணம், பெட்டாலிங் ஜெயா அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் கடந்த புதன்கிழமை மேத் திங்கள் 27 ஆம் நாள் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
தொடர்ந்து, மே 30ஆம் நாள் சிறப்பு மதிய விருந்து, சிலாங்கூர் மாநில காவல் தலைமையக மண்டபத்தில் நடைபெற்றது.
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகன், காவல் துறையில் பணியாற்றிய காலத்திலேயே தமிழ் இலக்கிய வட்டத்தில் நன்கு அறியப்பட்டவர். ‘முதிரும் வரை காத்திரு’ என்னும் சான்றோர்மொழிக்கு ஏற்ப, காவல்துறை பணியில் குறிப்பிடத்தக்க அடைவு நிலையை எட்டிய அதேவேளையில் தமிழ் இலக்கிய அளவிலும் தன்னை தேர்த்திக் கொண்டு இரு தளங்களிலும் ஒருசேர வெளிப் பட்டவர் டத்தோஸ்ரீ தெய்வீகன்.

காவல் துறையில் பணியாற்றிக் கொண்டே தமிழ் மொழியின்பால் ஈடுபாடும் அக்கறையும் கொண்டு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர், இவர்.
தற்பொழுது பணிஓய்வு பெற்ற நிலையில், மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய-மானவராகவும் சிறப்பு பேச்சாளராகவும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஊடக மட்டத்திலும் சான்றோர் பெருமக்கள் வட்டத்திலும் நன்கு அறியப் பட்டவராகத் திகழ்கிறார் டத்தோஸ்ரீ தெய்வீகன்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தால் மொழி வளர்ச்சிக்காக இம் மலையகத்தில் உரு-வாக்கப்பட்ட டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரிய அறங்காவலர்களில் இவரும் ஒருவர் என்றால் இதற்கு மேல் இவரைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?

இப்படிப்பட்டவரின் அன்பு மகளின் திருமணத்தில் ஆன்றோரும் சான்றோரும் கலந்து கொள்வதும் அவ்வண்ணம் மணமக்களை வாழ்த்துவதும் மிகமிக இயல்பானது.
காவல் துறை இசைக்குழுவினரின் இனிய இசையோடும் சுவைமிகு உணவோடும் திருமண விருந்தோம்பல் நடைபெற்றது.
ஆலய மண்டபத்திலும் காவல் துறை அரங்கத்திலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளிலும் எறத்தாழ 2,500 பேர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
பல்லின சமுதாயத்தையும் பல்துறைகளையும் சார்ந்த நூற்றுக்கணக்கான பெருமக்கள், உயர்நிலை அரச அதிகாரிகள், தொழில் அதிபர்கள், நீதி அரசர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இந்நாள் முன்னாள் தூதர்கள், மலேசிய அரச காவல்துறையினர், சுங்கத்துறை- சிறைச்சாலைத்துறை அதிகாரிகள், சட்டத்துறையினர் பேராசிரியர்கள், அரசியல் – சமுதாயத் தலைவர்கள், அமைச்சுகளின் முன்னாள் தலைமைச் செயலர்கள் என நாடு முழுவதிலுமிருந்து ஏராளமானோர் திருமணத்திலும் விருந்தோம்பலிலும் பங்கு பற்றினர்.

சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்தும் டத்தோஸ்ரீ தெய்வீகனின் நண்பர்கள் வந்திருந்தனர்.
குறிப்பாக, மஇகா துணைத் தலைவரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தருமான டத்தோஸ்ரீ மூ சரவணன், தேசிய காவல் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட், துணை ஐஜிபி டான்ஸ்ரீ அயூப் கான், குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் காவல் ஆணையர் டத்தோ குமார், குற்றத் தடுப்புப் பிரிவு இயக்குனர் ஆணையர் ருஷ்டி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
தவிர, டத்தோஸ்ரீ தெய்வீகனின் அன்புத் துணைவியார் டத்தின்ஸ்ரீ கோமதி, மலாயாப் பல்கலைக்கழக நூலகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதன் அடிப்படையில் கல்வித் துறை சார்ந்து ஏராளமான அதிகாரிகளும் நட்பினரும் இதில் கலந்து கொண்டனர்.
திருமணம், திருமண விருந்து ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக நிறைவேறின.

புதுமணத் தம்பதியர் டாக்டர் அபிநயா தெய்வீகன்- Dr.ஜெராய்டு ஹேகன் அந்தோணி இருவரையும் நீடூழி வாழ வாழ்த்தி மகிழ்ந்தனர்.


