Tuesday, October 6, 2026

வலியோரை வாழ்த்தி எளியோரைத் தாழ்த்தும் போலீஸ் விசாரணை: -காலங்காலமாக அதிகார துஷ்பிரயோகம்! -பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர்: அக்.06: மலேசியர்களைக் காவல் நிலையத்திற்கு கட்டாயப்படுத்தி வரவழைத்து, அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்(Criminal Procedure Code) 111, 112-வது பிரிவுகளை காவல் படை அதிகார துஷ்பிரயோக முறையில் காலங்காலமாக பயன்படுத்துவது குறித்து முன்னாள் அமைச்சரும் மனித உரிமை வழக்கறிஞரு-மான பொன்.வேதமூர்த்தி, கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய காவல் படைத் தலைவர்(IGP) தான்ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயிலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின்மூலம்,, போலீஸ் விசாரணை நடைமுறையின் அடித்தளத்தையே அவர் அசைத்துப் பார்த்திருக்கிறார்: ஒரு மலேசியரை நேரில் வரவழைத்து கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கட்டாயப்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு எதன் அடிப்படையில் கிடைக்கிறது? அக்குடிமகனிடம் முதலில் என்னென்ன தெரிவிக்கப்பட வேண்டும்? அந்த அதிகாரத்தின் மீதான அரசியல்சாசன வரம்பு என்ன என்பது குறித்தெல்லாம் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவருமான அவர் வினாக்கணைகளைத் தொடுத்திருக்கிறார்..

தேச நிந்தனைச் சட்டம், தண்டனைச் சட்டம், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின்கீழ் நடைபெறும் விசாரணை தொடர்பாக புக்கிட் அமான்-காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வருமாறு பொன்.வேதமூர்த்திக்கு உத்தரவு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் எழுந்துள்ளது.

தற்போதைய துணைப் பிரதமருக்கும் இசுலாமிய கட்சியான பாஸ் தலைவருக்கும் ஓராண்டுக்கு முன்பு அவர் எழுதிய வெளிப்-படையான கடிதம் தொடர்பானதுதான் இந்த விசாரணை என்று காவல்துறை வாய்மொழியாகத் தெரிவித்திருக்கிறது; அதேவேளை, இத்தகைய விசாரணையை துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியிடமோ அல்லது பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹவாங் ஹாடியிடமோ நடத்த போலீஸ் முன்வருமா என்பது தெரிய வில்லை.

சுறுக்கமாக, வலியோரை வாழ்த்தி எளியோரைத் தாழ்த்துவதுதான் காவல்படையின் தருமம் போலும்!

“இதற்கு முன்னர், தான் இதுபோன்ற பல கடிதங்களை எழுதியுள்ளதாகவும் ஆனால், எந்தக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணைக்கு வரும்படி தனக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை” என்றும் பொன்.வேதமூர்த்தி அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் எழுப்பியுள்ள கேள்வியின் மையப்பகுதியாக, 111 மற்றும் 112-வது பிரிவுகளின்மூலம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ‘அந்த வழக்கு’(the case) என்ற இரண்டு எளிய சொற்கள் உள்ளன.

குடியுரிமை உள்ள ஒருவரை நேரில் வரவழைப்பதற்காக கட்டாயப்படுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு ‘அந்த வழக்கு’ குறித்துப் போதுமான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகக் காவல்துறை கருதினால், சம்பந்தப்பட்ட குடிமகனிடம் சட்டரீதியான விளைவுகளைச் சுட்டிக்காட்டி ‘அந்த வழக்கு’ உண்மையில் என்ன என்பதை மறைக்க முடியாது என்றும் பொன்.வேதமூர்த்தி வாதிடுகிறார்.

நீதிமன்றத்தில்தான் வாதாட முடியும் என்றால், தேசிய காவல்படைத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தின் மூலமும் வாதாடமுடியும் என்பதை பொன். வேதமூர்த்தி நிறுவி இருக்கிறார்.

ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்படும் சொற்கள் எவை, புகாரின் தன்மை என்ன, புகார்தாரர் யார்?, மிக முக்கியமாக, சம்பந்தப்பட்டவர் ஒரு சந்தேக நபராக விசாரிக்கப்படுகிறாரா அல்லது வெறும் சாட்சியாக மட்டுமே அழைக்கப்படுகிறாரா போன்ற விவரங்களை வெளியிடுமாறு அவர் காவல்துறைத் தலைவரிடம் (IGP) கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிமக்களை விசாரணைக்கு அழைப்பதற்கும் அவர்கள் மீதான உண்மையான வழக்கு என்னவென்று தெரியாமல் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கும் பின்னர் விசாரணை நடைமுறைக்கு எவ்விதக் கேள்வியுமின்றி அவர்கள் பணிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும் ‘பிரிவு 111’-ஐ ஒரு தடையற்ற அதிகாரமாகப் பயன்படுத்தக் காவல்துறையை அனுமதிக்கக் கூடாது என்பதே சட்டவல்லுநருமான பொன்.வேதமூர்த்தியின் வாதமாகும்.

“சட்டத்தின் ஆட்சி என்பது குடிமக்களை மட்டுமல்ல; அரசையும் காவல்துறையையும்கூட சமநிலையில் வரைமுறைப்படுத்துகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைக்கப்படும் எந்த மலேசியருக்கு எதிராகவும் இதே அதிகாரங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால், இந்தப் பிரச்சனை அரசியல் ஆர்வளர்கள் மற்றும் அரசாங்க விமர்சகர்களைக் கடந்து, பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்ர்.

மிக முக்கியமாக, தனக்கு எதிராகக் கைது ஆணை கோரும் காவல்துறையின் நடவடிக்கையை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தியைப் பொறுத்தவரை, இந்த நிலை ஒரு முக்கியமான கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்புவதற்கான வாய்ப்பை வழங்கும்; அதாவது, ‘மலேசியர்களுக்கு எதிராக வழக்கமாகப் பயன்படுத்தப்படும் காவல் துறை அதிகாரம், தெளிவான அரசியலமைப்பு வரம்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் ஏதுமின்றிச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்பதே அந்தக் கேள்வி.

மொத்தத்தில், பொன்.வேதமுர்த்தி தற்பொழுது வெளிச்சத்திற்குக் கொண்டுவர விரும்பும் பிரச்சினை என்னவென்றால், ஒரு குடிமகன் பதிலளிக்க வேண்டிய வழக்கு என்ன என்பதைப் போதுமான அளவு தெளிவுபடுத்தாமலே, அவரை விசாரணைக்கு உட்படுத்தக் காவல்துறையால் கட்டாயப்படுத்த முடியுமா? அல்லது, பல ஆண்டுகளாக இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டு வந்த ஒரு கட்டாய விசாரணை நடைமுறை, அரசியலமைப்பு ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலே நீண்ட காலம் தொடர்ந்து வருகிறதா என்பதுதான்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை