Thursday, October 8, 2026

தாறுமாறு தேர்தல் ஆணையம்: -தீபாவளி சமயத்தில் மலாக்கா மாநிலத் தேர்தல் !

தீபாவளித் திருநாளை மையம்கொண்டு, மலாக்கா மாநில 16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மலாக்கா மாநிலத்தில் ஏறக்குறைய அரை இலட்ச இந்து மக்கள், தங்களின் முக்கிய சமய விழாவான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்திற்குமுன்பு, அக்டோபர் 31-ஆம் நாள் வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறும் என்றும் தீபாவளிக்குப் பின் ஒரு வாரம் கழித்து நவம்பர் 14-ஆம் நாள் வாக்களிப்பு தினம் என்றும் அறிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரம் உச்சக் கட்டத்தில் இருக்கும்பொழுது, இந்து மக்கள் தங்களின் முக்கியமான பண்டிகையைக் கொண்டாட வேண்டிய நெருக்கடிக்கு தேர்தல் ஆணையம் தள்ளிவிட்டதோ என்று கருதவேண்டி இருக்கிறது.

மலாக்கா மாநில சட்டமன்றம் (செப்டம்பர் 23இல்) கலைக்கப்பட்டு, இருவாரம் கழித்து, நேற்று அக்டோபர் 07-இல் கூடிய தேர்தல் ஆணையம், வரும் சனிக்கிழமை அக்டோபர் 10-இல் வேட்புமனுத்தாக்கலை இடம்பெறச் செய்து, அடுத்த இரு வாரத்தில் அக்டோபர் 24 சனிக்கிழமை தேர்தலை நடத்த முன்வந்திருக்கலாம்; அல்லது அக்டோபர் 17 சனிக்கிழமையை வேட்புமனுத் தாக்கல் நாளாக அறிவித்து அக்டோபர் 31 சனிக்கிழமை தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருக்கலாம்.

இதில் எதையும் செய்யாமல், நாட்டின் முக்கியமான தேசிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிக்கு ஒருவாரத்திற்கு முன் வேட்புமனுத்தாக்கலை நிகழ்த்தி, தீபாவளிக்குப் பிறகு ஒரு நாள் கழித்து முன்கூட்டிய வாக்குப்பதிவு என்றும் தீபாவளி தினத்திலிருந்து ஐந்து நாள் கழித்து வாக்குப்பதிவு என்றும் முடிவு செய்திருப்பது என்ன நடவடிக்கை என்று தெரியவில்லை.

மலாக்கா மாநில இந்தியர்கள்(இந்துக்கள்) மட்டும் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படவில்லை; அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், நிருவாகிகள் என ஆயிரக் கணக்கில் நாடு முழுவதிலுமிருந்து மலாக்காவில் முகாமிடக்கூடும்.

அரசியல் எல்லையைச் சேர்ந்த இவர்கள் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா அல்லாது வேண்டாமா என்பதை தேர்தல் ஆணையம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கட்டும்.

தவிர, பண்டிகைக்கால விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்ற மலாக்காவாழ் இந்துக்கள், தேர்தலில் வாக்களிப்பதற்காக முன்கூட்டியே வர வேண்டிய நெருக்கடியை தேர்தல் ஆணையம் உருவாக்குகிறதா என்றும் புரியவில்லை.

மொத்தத்தில், தேர்தல் ஆணையம் அக்கப்போராக நடந்துகொள்கிறதா அல்லது தில்லுமுல்லு வேலையைச் செய்கிறதோ என்றெல்லாம் கருத வேண்டி இருக்கிறது.

தேர்தல் ஆணையம் 7 ஆண்டுகளுக்குமுன் மேற்கொண்ட நடவடிக்கையை சற்று உற்றுநோக்கினால், இந்த ஐயக்கூற்றில் உண்மை இருக்கிறா இல்லையா என்பது தெரியவரும்.

2018 நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், பிரதமர் துன் மகாதீர் தலைமையில் ஒற்றுமைத் துறை அமைச்சராக இருந்த பொன்.வேதமூர்த்திக்கு துணை அமைச்சராக இருந்தவர் முகமட் ஃபாரிட்.

பெர்சத்துக் கட்சி சார்பில் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவர், தேசிய முன்னணியைச் சேர்ந்த மசீச வேட்பாளர் வீ ஜெங் செக்-ஐ 524 வாக்குகள் குறைந்த பெரும்பான்மையில் வென்றார். ஆனாலும், 2019 செப்டம்பர் மாத பிற்பகுதியில் அகால மரணமடைந்தார் முகமட் ஃபாரிட்.

இதன் விளைவாக, ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் எழுந்தது.

இதன் தொடர்பில் தேர்தல் அட்டவணையை அறிவித்த தேர்தல் ஆணைய நடவடிக்கை, பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது;

தேர்தல் நாள் நவம்பர் 16- என்றும் முன்வாக்குப்பதிவு நாள் நவம்பர் 12 என்றும் வேட்பு மனுத்தாக்கல் நாள் நவம்பர் 2-ஆம் நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்ததைக் கண்டு பலரும் வியந்தனர்.

இடைத் தேர்தல் வரப்போவதை தேசிய முன்னணி அவதானித்திருந்த நிலையில், அங்கு தான் போட்டியிட விரும்புவதாக ‘பெரியண்ணன்’ அம்னோ முந்திக்கொண்டு அறிவித்தது; இதைக் கண்டு வெகுண்ட மசீசவோ, ‘இது எங்களின் தொகுதி; 2018 தேர்தலில் தோற்றாலும் 2014 பொதுத் தேர்தலில் நாங்கள் வென்ற இத்தொகுதியில் நாங்கள்தான் மீண்டும் போட்டியிடுவோம் என்று மசீச கராராக சொன்னதும் அம்னோ பின்வாங்கியது.

இதே 2019 நவம்பர் மாதத்தில் இவ்விரு கட்சிகளுமே தத்தம் தேசியப் பேராளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தன.

நவம்பர் 2-3ஆம் நாட்களில் தேசிய ஆண்டுப் பேராளர் மாநாட்டை நடத்த மசீச திட்டமிட்டு, அதற்கான பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் அம்னோவோ நவம்பர் 13-16 என நான்கு நாள் தேசிய ஆண்டுக் கூட்டத்திற்கான ஏற்பாட்டை முடுக்கிவிட்டிருந்தது.

இத்தகைய சூழலில், நவம்பர் 2 முதல் 16 வரையிலான இருவார தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தேர்தல் ஆணையத்தின்மீது, மசீச-அம்னோ மட்டும் விமர்சனத்தை முன்வைக்கவில்லை; ஜனநாயக அக்கறை கொண்டவர்களும் நடுநிலையாளர்களும் துன் மகாதீர் தலைமையிலான தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கத் தொடங்கினர்.

இதனால், தேர்தல் ஆணையம் பதில்சொல்ல வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது.

மசீச, அம்னோ க்ட்சிகளுக்கு எவ்வித நெருக்கடியையும் ஏற்படுத்தும் எண்ணம் தேர்தல் ஆணையத்திற்குக் கிடையாது என்றும் இந்த அட்டவணைக்கான கால வரையறை இயல்பாக அமைந்துவிட்டது. தீபாவளி பண்டிகை விரைவில் (அக்டோபர் 27-இல்) கொண்டாடப்பட இருப்பதால் அந்தப் பண்டிகை முடிந்ததும் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான நடவடிக்கையை முடுக்கவிட வேண்டிய நிலை தேர்தல் ஆணையத்திற்கு எழுந்ததேத் தவிர வேறில்லை என்றுகூறி சமாளித்தது. கடைசியில், இவ்விரு கட்சிகளும் தத்தம் ஆண்டுக் கூட்டத்தை ஒத்திவைத்தன, வேறு வழியின்றி!

அஸஹார் அஸிஸான் ஹரூண் தலைமையிலான அப்போதைய தேர்தல் ஆணையம் தீபாவளிப் பண்டிகையைக் கவனத்தில் கொண்ட நிலையில், ரம்லன் ஹரூண் வழிநடத்தும் இப்போதைய தேர்தல் ஆணையம் ஏன் அவ்வாறு தீர்மானிக்கவில்லை என்பதுதான் கேள்வி;

இரு ஹரூண்களும் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் குறிப்பாக பலயின, பல்கலாச்சார, பலசமய, பன்மொழிக் கூறுகளைக் கொண்ட நாட்டின் கூட்டு சமுதாய நலன் கருதி முடிவெடுக்கிறார்களா அல்லது வேறு கோணத்தில் செயல்படுகிறார்களா அல்லது ஏதாவது புற அழுத்தத்திற்கு ஆட்பட்டு செயல்படுகிறார்களா என்பது தெரியவில்லை; இதுகுறித்து நாட்டு மக்களே எண்ணிப் பார்க்கட்டும்; தீர்மானிக்கட்டும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை