
பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகள் மற்றும் பதாகைகளில் இடம்பெற்றுள்ள ‘DIWALI’ என்ற சொல்லை ‘DEEPAVALI’ என மாற்ற வேண்டும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்றத் தவறினால், கூட்டரசுப் பிரதேச மஇகா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ள டத்தோஸ்ரீ சரவணன், மலேசிய இந்திய சமூகத்தின் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையினர் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்மொழியைப் பேசுபவர்கள் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், ‘DEEPAVALI’ என்ற சொல் மலேசிய இந்திய சமூகத்தின் மொழி மற்றும் கலாச்சாரப் பின்னணிக்குப் பொருத்தமானது என்றும், ‘DIWALI’ என்பது இந்தி பேசும் வடஇந்திய சமூகத்தினரிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மேலும், மலேசியாவில் தீபாவளிப் பண்டிகை ‘DEEPAVALI’ என்ற பெயரிலேயே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசிய இந்திய சமூகத்தின் கலாச்சார அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் வகையில், ‘DIWALI’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘DEEPAVALI’ என்று பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அடுத்த மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கூட்டரசுப் பிரதேச மஇகா கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் கூட்டரசுப் பிரதேச அமைச்சரை நான் குறைக்கூறவில்லை. அவர் சீனர், அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் அவரின் கட்சியில் தமிழர்கள் இருப்பதாக நான் நம்புகிறேன். ஆகையால் உடனடி மாற்றம் தேவை என அவர் சொன்னார்.


