Sunday, October 11, 2026

‘கப்பின் மலேசியா’அமைப்பின் மலர் வெளியீடு!

9 பேருக்கு ‘கப்பின் பெர்டானா’ விருது வழங்கி கௌரவிப்பு!

மலேசிய இந்தியர் சங்கங்களின் சம்மேளனமான ‘கப்பின் மலேசியா’வின் 9ஆம் ஆண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் நேற்று சனிக்கிழமை நேதாஜி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கப்பின் மலேசியாவின் தலைவர் டத்தோ தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் சிறப்புரை ஆற்றினார்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, சமுதாயத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒன்பது பேருக்கு ‘கப்பின் பெர்டானா’ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ மு. சரவணன் விருதுகளை வழங்கி விருதாளர்களைப் பாராட்டினார்.

சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பங்களித்து வரும் சேவையாளர்களை அங்கீகரிக்கும் நோக்கில் இவ்விருதுகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கப்பின் மலேசியா அமைப்பு கடந்த 2011ஆம் ஆண்டு ஜொகூர் மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர், அமைப்பின் செயல்பாடுகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

இதன் மூலம் மலேசிய இந்தியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, சமூகத்தின் நலன் மற்றும் மேம்பாட்டுக்காகச் செயல்படுவதில் கப்பின் மலேசியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையில், கோலாலம்பூர், ஜாலான் காசிப்பிள்ளையில் சுமார் நான்கு லட்சம் ரிங்கிட் செலவில் கப்பின் மலேசியாவுக்கான அலுவலகக் கட்டடம் ரொக்கத்தில் வாங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோ தென்னரசு தெரிவித்தார்.

அமைப்பின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், எதிர்காலச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் அலுவலகக் கட்டடம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பின் மலேசியாவின் ஒன்பது ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அமைப்பின் சாதனைகளை நினைவுகூர்வதோடு, சமுதாயத்திற்குச் சேவையாற்றியவர்களைப் பாராட்டும் நிகழ்வாகவும் அமைந்தது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை