
செரண்டா தமிழ் பள்ளி குறித்து பேரளவில் வாக்குறுதி அளித்த நம்பிக்கை கூட்டணி, குறிப்பாக பி கே ஆர் இந்திய தலைவர்கள் இந்த நான்காண்டு கால ஆட்சியில் அதைப் பற்றி எதுவுமே செய்யவில்லை என்று டத்தோ த. மோகன் சாடினார்
ஆட்சியில் இல்லாவிட்டாலும் இந்திய மக்களுக்கு மஇகா தொடர்ந்து சேவையாற்றும்என்று மேனாள் செனட்டருமான டத்தோ டி.மோகன் கூறினார்
“டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வந்துவிட்டால் செராண்டா தமிழ்ப்பள்ளி கண்டிப்பாகக் கட்டப்படும் என்று வழங்கப்பட்ட வாக்குறுதி என்னவானது”.
செராண்டா தமிழ்ப்பள்ளி தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அப்பள்ளியின் எதிர்காலம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி முன்பு மஇகாவின் வசம் இருந்தபோது, அப்பகுதி இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், இன்று அந்த நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அப்பகுதி இந்திய மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது யார் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஇகா ஆட்சியில் இருந்தால் மட்டுமே இந்திய மக்களுக்குச் சேவையாற்றும் கட்சி அல்ல என்று குறிப்பிட்ட டத்தோ டி.மோகன், ஆட்சியில் இல்லாத காலத்திலும் மக்களுக்கான தனது சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்.
அரசியல் அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவையாற்றுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம். இருப்பினும், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அந்த வகையில், உலு சிலாங்கூர் வட்டாரத்தில் இந்திய மக்களின் நலனுக்காக மஇகா தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, டத்தோ கே.சுரேஷ் தலைமையில் அப்பகுதி இந்திய மக்களுக்குப் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருவதை டத்தோ டி.மோகன் பாராட்டினார்.

இதுவரை மக்களின் பல்வேறு தேவைகளுக்காகவும் உதவிகளுக்காகவும் சுமார் வெ.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத சூழலிலும் மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது பாராட்டத்தக்க செயலாகும் என்று அவர் கூறினார்.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், குடும்பங்களின் தேவைகள் மற்றும் சமூக நலன் சார்ந்த விவகாரங்களில் கவனம் செலுத்தி உதவிகளை வழங்குவது, அரசியல் கட்சிகள் மக்களுடன் கொண்டுள்ள தொடர்பை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்தும் டத்தோ டி.மோகன் கவலை தெரிவித்தார்.
தமிழ், தமிழ்மொழி, தமிழ்க்கல்வி என்று மேடைகளில் முழங்கும் பலர், தங்களுடைய பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்துப் பேசுபவர்கள், முதலில் தங்கள் குடும்பங்களிலிருந்தே அதற்கான முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மட்டுமே போதாது. பெற்றோர்களின் பங்களிப்பும் சமூகத்தின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றார்.
ஒருபுறம் தமிழ்மொழியையும் தமிழ்க்கல்வியையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு, மறுபுறம் தங்களுடைய பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்கத் தயங்கினால், அப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை எவ்வாறு அதிகரிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம், உலு சிலாங்கூர் இந்திய மக்களின் நலத்திட்டங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் ஆகியவை சமூகத்தின் கவனத்திற்குரிய முக்கிய விவகாரங்களாக உள்ளன.

இந்திய மக்களின் நலனுக்காக வழங்கப்படும் வாக்குறுதிகள் வெறும் அரசியல் அறிவிப்புகளாக இல்லாமல், நடைமுறைச் செயல்களாக மாற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும் என அவர் சொன்னார்.
உலு சிலாங்கூர் தொகுதி மஇகா ஏற்பாட்டில் நடைப்பெற்ற தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டாவாறு கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களுக்காக மோட்டார் சைக்கிள் உட்பட விலையுயர்ந்த அதிரஷ்ட குலுக்கு பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் மூன்று குடும்பங்களுக்காக 3 மோட்டார் சைக்கிள்களை உலுசிலாங்கூர் மஇகா வழங்கியது குறிப்பிடத்தக்கது.


