
மலேசிய ஆயுர்வேத நிபுணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘செரிமான நலனுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைகள்’ (Integrative Approaches to Digestive Wellness) என்ற கருப்பொருளில் மிகப்பெரிய கருத்தரங்கு நேற்று
ஞாயிற்றுக்கிழமை பெர்ஜெயா டைம்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரக உயர் ஆணையத்துடன் இணைந்து, பெர்ஜாயா குழுமத்தின் ஆதரவுடன் இந்த
நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆயுர்வேத, பாரம்பரிய மற்றும் துணை மருத்துவத் துறைகளின் சிறப்பு விருந்தினர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் முறைப் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு, கருத்துப் பரிமாற்றம்
மற்றும் ,பட்டறிவுப் பகிர்வு அமர்வில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இந்தியத் தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் டாக்டர் விவேகானந்த், டாக்டர் சுஹைலா பிந்தி இஸ்மாயில் (Dr. Suhaila binti Ismail), மலேசிய சுகாதார அமைச்சின் பாரம்பரிய மற்றும் துணை மருத்துவப் பிரிவின் இயக்குநர்,
MAPA அமைப்பின் கௌரவப் புரவலர் சையத் அலி ஷாகுல் ஹமீத், (பெர்ஜாயா பிராப்பர்ட்டி பெர்ஹாட் நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரியின் பிரதிநிதி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
MAPA ஆயுர்வேத சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு
இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.
மலேசியாவில் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மற்றும் துணை மருத்துவத் துறைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், மலேசிய சுகாதார அமைச்சின் பாரம்பரிய மற்றும் துணை மருத்துவப் பிரிவின் முன்னாள் இயக்குநரான டாக்டர் கோ சோங் சூனுக்கு ஆயுர்வேத சிறப்பு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இம்மாநாடு, ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறைகளில் பட்டறிவுப் பகிர்வு, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறைகள் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி வித்யா மனோகரன்
(மலேசிய ஆயுர்வேத நிபுணர் சங்கத்தின் தலைவர்) ஆற்றிய வரவேற்பு உரையில்
மலேசிய ஆயுர்வேத நிபுணர் சங்க மாநாட்டிற்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள், மருத்துவப் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் வரவேற்கிறேன் என்றார்.

இம்மாநாட்டின் கருப்பொருள் “குடல் ஆரோக்கியம்: செரிமான நலனுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைகள்” (Gut Health: Integrative Approaches to Digestive Wellness) என்பதாகும்.
இந்தத் தலைப்பு மிகுந்த சிந்தனையுடனும் புரிதலுடனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இந்த நேரத்தில் குடல் ஆரோக்கியத்தைப் பற்றிய புரிதல் மிகவும் அவசியமானதாகும்.
ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் இம்மாநாட்டில் அறிந்துகொள்ள இருப்பதுபோல், பெரும்பாலான நோய்கள் முறையற்ற அல்லது பாதிக்கப்பட்ட செரிமானத்திலிருந்து தொடங்குகின்றன.
நோய் ஏற்பட்ட பிறகு அதற்குச் சிகிச்சையளிப்பதில் நாம் அடிக்கடி கவனம் செலுத்துகிறோம்.
ஆனால், MAPA அமைப்பில், அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு உரையாடல் அதைவிட முன்னதாகவே தொடங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதாவது, நோய் ஏற்படுவதற்கு முன்பே தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தினர் தங்களுடைய ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ளவும், சரியான தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றவும் எவ்வாறு கல்வியறிவூட்டலாம் என்பதே அந்த உரையாடலாகும்.
செரிமானம், ஊட்டச்சத்து, அன்றாடப் பழக்கவழக்கங்கள் மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றிற்கு நாம் கணிசமான முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தொடர்ந்து விரிவடைந்து வரும் ஆராய்ச்சிகள், செரிமான ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு குறித்த நமது புரிதலை மேலும் மேம்படுத்துகின்றன.
இந்த வெவ்வேறு கண்ணோட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஒரு சிறந்த வாய்ப்பு உருவாகிறது என்று அவர் சொன்னார்.
மேலும் இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
(செ. வே. முத்தமிழ் மன்னன்)


