Monday, September 28, 2026

55 மலேசியர்களைக் காணாமல் 33 நாட்களாக கலங்கிநிற்கும் குடும்பங்கள்: -இறப்பு சான்றிதழ் வேண்டியும் பிரதமரை சந்திக்கவும் கோரிக்கை! -98 பேரின் மரபணு மாதிரி நேப்பாள அரசிடம் ஒப்படைப்பு!!

நேப்பாளத்தின் ரசுவாகதி பகுதியில் கடந்த ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் நாள் ஏற்பட்ட திடீர் வெள்ள பேரழிவைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள், புத்ராஜெயாவில் விஸ்மா புத்ராவால் கூட்டப்பட்ட நேற்றையக் கூட்டத்தை வரவேற்றாலும் புதிய தகவல் ஏதும் கிடைக்காமல் சலிப்படைந்ததுடன் ஆக்கப்பூர்வ அறிவிப்போ நடவடிக்கையோ இல்லையென்று ஒரு சிலர் பாதியில் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

இந்தக் குடும்பங்கள் உடனடி நிவாரணத்தை எதிர்பார்க்கின்றனர்; குறிப்பாக, வீட்டுக் கடன்-வாகனக் கடன் தொடர்பான தவணைப் பணத்தைச் செலுத்துவதில் தற்காலிக சலுகையை(Moratorium) எதிர்பார்க்கின்றனர்.

55 பேரைப் பற்றி ஒரு மாதத்திற்கும் மேலாக தகவல் இல்லாத நிலையில், அவர்கள் இல்லாமல் போனதை துயரத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களின் இறப்பு சான்றிதழ் கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட 55 பேரில் பெரும்பாலானவர்களுக்கு வங்கிக் கடன் நிலுவையில் உள்ளது. ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் காணாமல் போயுள்ளனர். அவர்களின் சிறு வயது பிள்ளைகளை இதுவரை பராமரித்து வந்த உறவினர்களும் நண்பர்களும், தற்பொழுது அந்தப் பிள்ளைகளை சிறார் பராமரிப்பு மையங்களில் சேர்ப்பதைப் பற்றி எண்ணி வருகின்றனர்; காரணம், அவர்களுக்கும் சொந்தக் கடமையும் கடப்பாடும் இருப்பதால், தொடர்ந்து பொருளாதார சுமையை அவர்களால் ஏற்க இயலாது என்ற உண்மை நிலையை ஒரு சிலர் எடுத்துக் கூறினர்.

இன்னொரு குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் காணாமல் போன பெருந்துயரம் நேர்ந்துள்ளது. தவிர, தொடர்ந்து கலங்கி நிற்பதால் பசியும் தீராது; வருமானமும் இராது என்பதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் துயரத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர முற்பட்டுள்ளனர்.

55 பேரில் அதிகமானோருக்கு கடன் இருப்பதைப் போல, பலருக்கு சொத்து இருக்கிறது; வங்கியில் பணமும் இருக்கிறது; இந்த நிலையில், காணாமல் போனோரின் இறப்பு சான்றிதழ் இன்றி, கூடும்ப உறுப்பினர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில், அவர்களின் இறப்புச் சான்றிதழ் தேவைப்படும் நெருக்கடி குறித்தும் நேற்றையக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையுடன் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணுதல், தூதரக ஈடுபாடு, சட்ட செயல்முறைகள், வங்கிக் கடன், காப்பீடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்த நடவடிக்கைத் தேவைப்படுவதாக நேற்று விஸ்மா புத்ரா கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

நேப்பாளத்தின் தற்போதைய சட்டத்திட்டத்தின்படி, இதுபோன்ற பேரிடர்களில் காணாமல் போனோரின் இறப்பை உறுதிப்படுத்த மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என்று குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது; இருப்பினும், இந்தக் கால அளவைக் குறைக்க முடியுமா என்பது குறித்து நேப்பாள அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

காணாமல் போனோரின் இறப்பு குறித்து நேப்பாள அரசு உறுதிப்படுத்தும் ஆவணம் கிடைக்காவிட்டால், மலேசியச் சட்டத்தின்கீழ் தனிப்பட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 1957-ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின்(சட்டம் 299) பிரிவு 24-ஏ மற்றும் 1950-ஆம் ஆண்டு சாட்சியச் சட்டத்தின் பிரிவு 108 உள்ளிட்ட சட்ட விதிகள் குறித்து தேசிய பதிவு அலுவலகத்தின் சார்பில்(JPN) விளக்கம் அளிக்கப்பட்டது; இச்சட்டங்களின்படி, நீண்ட காலம் காணாமல் போன ஒருவரின் இறப்பு குறித்த அனுமானம் (presumption of death) உருவாவதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம்.

எனவே, நேப்பாள அரசு, சம்பந்தப்பட்டவர்களின் இறப்பு குறித்த உறுதிப் படுத்துதலை உடனடியாக வழங்காத சூழலில், காணாமல் போன 55 மலேசியர்களின் சட்டப்பூர்வ நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது.

ஒருவர் ‘காணாமல் போனவர்’ எனத் தொடரும் நிலையில், சம்பந்தப்பட்ட வரின் வீடு மற்றும் சொத்துக்கான கடன்; வாகனக் கடன்; தவணைமுறை கொள்முதல்(hire-purchase); தனிநபர் கடன்கள்; ஆயுள் காப்பீடு; எண்டோவ்மென்ட்(endowment) பாலிசி; பயணக் காப்பீடு; பிற காப்பீட்டு கோரிக்கை; ஒப்பந்தக் கடமை; சட்ட மற்றும் நிதி விவகாரங்கள் ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமான வழிகாட்டுதலைப் பெறும் வகையில், தேசிய சட்டத்துறை ஆணையர் அலுவலகம் (AGC) மற்றும் தேசிய வங்கி (பேங்க் நெகாரா) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்(NOK) கோரினர்.

நேற்றையக் கூட்டத்தில், தேசிய சட்டத்துறை அலுவலகம், தேசிய வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், சட்டம், நிதி சார்ந்த விளக்கங்களை நேரில்பெற இயலவில்லை.

முன்னதாக, தேடுதல் மீட்பு தொடர்பான மலேசிய விவேகக்(SMART) குழுவினர், நேப்பாளத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விளக்கமளித்தனர். அப்போது, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இடத்தைவிட்டு வேறு இடத்தில் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் கேட்கப்பட்ட நிலையில், நேப்பாளக் குழுவினரின் ஆலோசனைபடி செயல்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

காணாமல்போன 55 பேரின் குடும்பங்களைச்சேர்ந்த 98 பேரிடம் சேகரிக்கப் பட்ட மரபணு(டி.என்.ஏ.) மாதிரிகள் பதப்படுத்தப்பட்டு, நேப்பாளத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் செப்டம்பர் 24-இல் ஒப்படைக்கப்பட்டுள்ள விவரத்தை காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேப்பாள அரசாங்கம் மரபணு(DNA) மாதிரிகளை சரிபார்க்கும் செயல்முறையை ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய இருப்பதாகக் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட பொருத்தங்கள் கண்டறியப்படும்போது, அதுகுறித்த முடிவுகள் அவ்வப்போது வெளியிடப்படுமா அல்லது ஒட்டுமொத்த செயல்முறையும் முடிந்த பின்னரே வெளியிடப்படுமா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.

தங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த உறுதியான தகவலுக்காக ஏற்கெனவே ஒரு மாதத்திற்கும் மேலாகக் காத்திருக்கும் குடும்பத்தினருக்கு இந்த நிச்சயமற்ற நிலை கவலையாக உள்ளது என்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் முனைவர் மணிவண்ணன் இரெத்தினம் தெரிவித்தார்.

நேப்பாள அரசாங்கம், வெள்ளப் பேரழிவு ஏற்பட்ட இடத்தில் மறு கட்டமைப்புப் பணியை மேற்கொள்ள இருப்பதால், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகத தெரிவிக்கப் பட்டது. இருப்பினும், அதற்கான காலவரம்பு குறித்து இன்னும் தெரிவிக்க வில்லை என்ற தகவலையும் நேற்றையக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

தங்கள் அன்புக்குரியவர்களின் சட்டப்பூர்வ நிலை தீர்க்கப்படாத நிலையில், குடும்பங்கள் கூடுதல் நிதி நெருக்கடி, தாமதமாக கட்டணம் செலுத்துவலால் ஏற்படும் பின்விளைவு, கடன் வசூல் நடவடிக்கை உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்வதைத் தடுப்பதற்கான தற்காலிகப் பாதுகாப்பு மற்றும் தெளிவான நடைமுறையை அவர்கள் கோருகின்றனர். ஆனால், நேற்றையக் கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகளுக்கு இவ்விகாரங்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை தெரிவிக்கப்பட்டது.

தேசிய சட்டத்துறை அலுவலகம்(AGC), பேங்க் நெகாரா, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள், காப்பீடு தொடர்பான அதிகார அமைப்புகள், போலீஸ் படை, தேசிய இரசாயன ஆய்வகம், தேசிய பதிவுத் துறை, விஸ்மா புத்ரா உள்ளிட்ட அமைச்சகங்கள், துறைகள் மற்றும் முகமைகள் இணைந்து ஓரிட சேவை மையமாக செயல்படுவதை உறுதி செய்தால், ஒவ்வொரு தகவலுக்கு ஒவ்வொரு அலுவலகமாக அலைய வேண்டி இருக்காது என்றும் கருத்து கூறினர்.

காணாமல் போன 55 மலேசியர்களின் சட்டப்பூர்வ நிலை தீர்க்கப்படும் வரை, அவர்களுடன் தொடர்புடைய கடன்கள் மற்றும் நிதிப் பொறுப்புகளுக்கு உடனடித் தடை அல்லது அதற்கு இணையான தற்காலிகப் பாதுகாப்பை வழங்குவது குறித்தும் கோரிக்கை வைத்தனர்.

இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, பிரதமரை நேரில் சந்தித்து முறையிட விரும்புவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை