
கோலாலம்பூர், அக்.13:
மியான்மர் அகதிகளை மலேசியா தொடர்ந்து பெருமளவில் நாடுகடத்தி வருவது, பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது அமைச்சரவையினர்மீது கடுமை யான சர்வதேசக் குற்றவியல் பொறுப்புகளைத் தனிப்பட்ட முறையில் சுமத்தும் நிலையை உருவாக்கக்கூடும் என்று மனித உரிமை வழக்கறிஞர் பொன்.வேதமூர்த்தி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சருமானன பொன் வேதமூர்த்தி, அரசாங்கத்திற்கு எழுதியுள்ள அதிரடியான திறந்த மடலில், மியன்மார் நாட்டிற்கு ரொஹிங்கியா மக்களை திருப்பி அனுப்பும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி யுள்ளார். இந்தக் கொள்கையானது சர்வதேச நடைமுறைச் சட்டத்தையும் மலேசியாவின் உள்நாட்டுச் சட்டங்களையும் நேரடியாக மீறுவதாக சட்ட வல்லுநருமான அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை சுமார் 10,000 மியான்மர் நாட்டவர்கள் தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 2,00,000 பேர் மிகக் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கி யுள்ளனர். இந்தப் பின்னணியிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியான்மரின் இராணுவ ஆட்சியாளர் களிடமிருந்து பெறப்படும் பாதுகாப்பு குறித்த ‘இராஜதந்திர உத்தரவாதத்தை’ மலேசிய அரசாங்கம் நம்பியிருப்பதையும் அந்தத் திறந்த மடல் வன்மையாக நிராகரிக்கிறது. இத்தகைய உத்தரவாதங்கள் சட்ட ரீதியாக உண்மையான பாதுகாப்பை உறுதிப்படுத்தாத வெறும் கற்பனையான வாக்குறுதிகள் என்றும் பொன் வேதமூர்த்தி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மர் இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவரான மூத்த தளபதி மின் ஆங் லாய்ங், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின்(ICC) கைது ஆணையை எதிர்கொண்டுள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட மியான்மருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திர விசாரணை புலனாய்வுப் பிரிவின்(IIMM) அறிக்கை, பொதுமக்களை இலக்காகக் கொண்டு மியான்மர் இராணுவம் திட்டமிட்ட முறையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதை உறுதிப்படுத்தி யுள்ளதாகவும் முன்னாள் அமைச்சருமான பொன். வேதமூர்த்தி பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


