
தீபாவளி பண்டிகையின் பெயரை ‘DIWALI’ எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘DEEPAVALI’ எனப் பயன்படுத்த வேண்டும் என்றும் தீபாவளி சந்தையின் நுழைவாயில் பதாகையில் தமிழ் மொழிக்கும் உரிய இடமளிக்க வேண்டும் என்றும் கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் வலியுறுத்தியுள்ளார்.
சமயம், மொழி மற்றும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் ஹன்னா இயோவின் ஏற்பாட்டில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சந்தையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள பதாகையில், ‘DEEPAVALI’ என்பதற்குப் பதிலாக ‘DIWALI’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தீபாவளி சந்தையின் நுழைவாயில் பதாகையில் ‘DEEPAVALI’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதுடன், தமிழ் மொழியையும் இணைக்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என டத்தோ ராஜா சைமன் குறிப்பிட்டார்.
மேலும், நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இரு தூண்களிலும் ‘DIWALI’ என்ற சொல் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது ஒரு தூணில் மயில் படம் வைக்கப்பட்டு அந்த எழுத்துகள் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மற்றொரு தூணில் ‘DIWALI’ என்ற சொல் இன்னமும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மொழி மற்றும் சொற்களின் பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் அதிகாரப்பூர்வமான வழிகாட்டுதல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட டத்தோ ராஜா சைமன், மலேசிய மொழி மற்றும் நூலகக் கழகமான Dewan Bahasa dan Pustaka வெளியீடுகளிலும் ‘DEEPAVALI’ என்ற சொல்லே குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, தீபாவளி பண்டிகையை அடையாளப்படுத்தும் வகையில் ‘DEEPAVALI’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதுடன், தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவத்தையும் மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த அமைதிப் போராட்டத்தில் பொது அமைப்புகள், மக்கள் முற்போக்குக் கட்சியான பிபிபி (PPP), ஐபிஎஃப், மலேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சமயம், மொழி, கலாசாரம் ஆகியவற்றின் அடையாளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த அமைதிப் போராட்டம் நடைபெற்றது.


