Monday, April 20, 2026

கோலாலம்பூர் செந்தூல் ஈப்போ சாலை அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய திருக்குடமுழுக்கு விழா

நாட்டின் மையப் பகுதியில் வாழ்கின்ற தமிழர் வழிபாட்டு தலங்களில் மிகவும் பெயர் பெற்ற தலமான கோலாலம்பூர் செந்தூல் வட்டாரத்தில் ஈப்போ சாலையை(Jalan Sultan Azlan Shah) ஒட்டி அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி நகரத்தார் ஆலயத்தில் சற்று முன்பு (3-2-2025) ஏழாவது திருக்குட நன்னீராட்டு விழா இறைமனம் கமழ நடைபெற்றது.

அருள்நலமும் பொருள்வளமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இந்த மலைத்திரு நாட்டில் நகரத்தார் பெருமக்களின் பராமரிப்பில் எண்ணற்ற திருமுருக தலங்கள் இருந்தாலும் செந்தூல் முருகன் கோவில் என்று அழைக்கப்படும் கோலாலம்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம், புகழ்பெற்ற கௌமார வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் 1893ம் ஆண்டு தொடங்கப்பட்டதாக இந்த தமிழ் வழிபாட்டுத் மையத்தின் தலவரலாறு தெரிவிக்கிறது.

இவ்வாலயத்தில் முதல் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 1902-இல் நடைபெற்றுள்ளது. அதுமுதல், காலக் கணக்கு தப்பாமல் மாமாங்கம்தோறும் ஒருமுறை என ஆலயத்தில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குத் திருவிழாவும் நடைபெற்று வந்துள்ளன.

அன்று முதல் இன்று வரை கோவில் நல்ல முறையில் நிருவகிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆறாவது கும்பாபிஷேக விழா 1.3.2013இல் நடைபெற்றுள்ளது.

இந்தக் கோயிலின் பெருமை, அருமையாக அமையப்பெற்ற கருவறையாகும். பக்தப் பெருமக்களை கவர்ந்திழுக்கும் வண்ணம், அருளாட்சி நிறைந்த திருமுருக திருக்கடவுளின் அருட்தோற்றம் அமைந்துள்ளதால், ஈப்போ சாலையின் வெளியே இருந்தவாறே மெய்யன்பர்கள் இறைவனை தரிசிக்க முடியும்.

அத்தகைய ஆலயத்தில் இன்று நடைபெற்ற ஏழாவது திருக்குட நன்னீராட்டு விழாவை நிறைவேற்றி வைப்பதற்காக தமிழ்நாட்டின் பிள்ளையார்பட்டி தலத்திலிருந்து அண்மையில் வருகை தந்த சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் இந்த திருக்குட நன்னீராட்டு விழா, காலை 10:20 மணி அளவில் தொடங்கி 11:20 மணி அளவில் நிறைவுற்றது.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய உதவி தலைவர்களில் ஒருவரான டத்தோ த. முருகையா, தாமரைக் குழும இயக்குனர் வாரியத் தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், பாவலர் சீராகி உள்ளிட்ட தமிழ் இலக்கிய வட்டத்தினர், ஏராளமான பொதுமக்கள், தமிழ் ஊடக நண்பர்கள், ஆலய நிர்வாகத்தினர், குறிப்பாக நகரத்தார் பெருமக்கள் என திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

சுற்று வட்டார இறையன்பர்களுக்கு மிகவும் அணுக்கமான இந்த அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான இறையன்பர்கள் புடைசூழ இன்றைய திருக்குட நன்னீராட்டு விழா, இனிதே நிறைவேறி உள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை