
பத்து மலை வளாகத்தை நாட்டின் முதல் நிலை சுற்றுலா தலமாக மத்தியக் கூட்டுரசு வகைப்படுத்தி இருந்தாலும் பத்துமலை தற்போது ஒரு பக்தி மலையாக உருமாறி இருக்கிறது என்று கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் கோயில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
இந்த மாதம் 11 ஆம் நாள் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நேற்று திங்கள் கிழமை மாலையில் மாநில மந்திரிபெசார்(முதல் அமைச்சர்) டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்தார். அவரை எதிர்கொண்டு வரவேற்ற நடராஜா ஆலய வளாகத்தை சுற்றிக் காண்பித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பத்துமலை திருத்தலம் ஆண்டுதோறும் மறுமலர்ச்சி கண்டு வருகின்ற நிலையில் தற்பொழுது அங்கு நிறுவப்பட்டுள்ள கலாச்சார பண்பாட்டு மையமும் பல்நோக்கு மண்டபமும் இங்கு மேலும் பெருமை சேர்க்க கூடியவை என்றார்.

இந்த நிலையில் மாநில அரசிடம் முன்வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகளை பற்றி செய்தியாளர்களிடம் விவரித்தார் நடராஜா.
பத்து மலையில் நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்காக கடந்த மாத பிற்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் தொடர்பில் இப்பொழுது சிலாங்கூர் மாநில அரசு சார்பில் அனுமதி அளித்திருப்பதாகத் தெரிகிறது.
அமிருடின் ஷாரி வருகையின் போது அவருடன் மாநில முதல்நிலை அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். அதேபோல தேவஸ்தானத்தின் சார்பில் அதன் அறங்காவலர் டத்தோ சிவக்குமார் உள்ளிட்டோருடன் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.


