
மலேசிய இந்திய சமுதாயத்தின் அரசியல் தளம், பாதுகாப்பு கவசம், தாய்க்கட்சி மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா சிலாங்கூர் மாநிலக் கிளையின் சார்பில் அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் டத்தோ சங்கர ஐயங்கார் தெரிவித்துள்ளார்.
மஇகா நிருவாக இயந்திரத்தின் மொத்த கவனமும் மலாக்கா மாநிலத் தேர்தல் பக்கம் திரும்பி உள்ள நிலையில், நம் பாரம்பரிய பண்டிகையான தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறோம். அடுத்த வாரம் இந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
மஇகாவைப் பொறுத்தவரை, காடேக் சட்டமன்றத் தொகுதி வெற்றி, தீபாவளிக் கொண்டாட்டத்தைவிட மேலானது. அதை நோக்கி கட்சி பயணிக்கும் இந்த வேளையில், தீபாவளித் திருநாள் இன்பத்தில் திளைத்திருக்கிறோம்.
அதேவேளை, பொருளாதார நிலையையும் பொருள் விலையேற்றத்தையும் கருத்தில் கொண்டு சிக்கனமாகவும் சீராகவும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவது சிறப்பு. ஏறக்குறைய இன்னும் ஒரு மாத காலத்தில், பிள்லைகளை அடுத்தக் க்லவி ஆண்டிற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடப்பாடு இருப்பதை அனைத்துப் பெற்றோரும் க்கருத்தில் கொள்வது நலம்.
சிலாங்கூர் மாநில மஇகா, இந்திய சமுதாயத்தின் கல்வி-பொருளாதார-சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழ்ப் பள்ளி மாணவர்கள்-இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தும் முக்கிய கடமையையும் மாநிலத் தலைமை ஆற்றி வருகிறது.
இவை அனைத்திற்கும் உறுதுணையாக விளங்கும் மாநில நிருவாகியர், தொகுதி-கிளைகளின் பொறுப்பாளர்கள், இளைஞர்-மகளின் அணியினர், உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவிப்பதுடன் தீபாவளி வாழ்த்தையும் தெரிவிப்பதாக டத்தோ சங்கரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“காலம் பல மாற்றங்களை நிகழ்த்தினாலும், மனிதநேயமும் ஒற்றுமையும் மட்டுமே சமூகத்தின் நிலையான தூண்களாகத் திகழ்கின்றன. அந்த வகையில், நம் மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் அன்பையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேண்”.
விரிந்த வானத்திற்கு எல்லை இல்லாததைப்போல, உழைப்புக்கும் உயர்வுக்கும் எல்லை இல்லை. நம்பிக்கையை விதைத்து, ஒற்றுமையை வளர்த்து, சேவையை சுவாசமாகக் கொண்டு பயணிக்கும் சமூகம் என்றும் வெற்றிக் கனிகளை அறுவடை செய்யும்.
“இந்த இனிய தருணத்தில், மலேசியத் தமிழ்ச் சமூகத்தினர், இளைஞர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி மலரட்டும்; முயற்சியில் வெற்றி குவியட்டும்; வாழ்வில் அமைதியும் வளமையும் நிலைத்திருக்கட்டும்.
‘ஒன்றுபட்ட மனங்கள் உருவாக்கும் சாதனைகளே வரலாறாகின்றன’ என்பதனை மனதில் கொண்டு, நாம் அனைவரும் கைகோர்த்து சமுதாய முன்னேற்றப் பாதையில் உறுதியுடன் பயணிப்போம்” என்று டத்தோ சங்கரன் தன் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


