
இலட்சியக் கனவிலிருந்து ஆட்சிவரை…
மலேசிய அரசியலில் சில மனிதர்கள் பதவி யால் உயர்வதில்லை. மாறாக, அவர்கள் கடந்து வந்த பாதையால் உயர்கின்றனர்.
அத்தகைய அரசியல் ஆளுமையரில் முக்கிய மானவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
மலேசியாவின் 10-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தபின், இன்று ஐந்தாவது ஆண்டை எட்டுகிறார் அவர்.
இந்த நான்கு ஆண்டுகள் வெறும் ஆட்சிக் காலம் அல்ல;
காத்திருப்பு, போராட்டம், நம்பிக்கை, ஏமாற்றம், சாதனை, விமர்சனம் ஆகிய அனைத்தும் கலந்த அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டும்.
ஒருகாலத்தில் துணைப் பிரதமராக இருந்த-வர். பின்னர் அதிகார மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
சிறை வாழ்க்கையைச் சந்தித்தவர். அரசியல் ரீதியாக முடிந்துபோனவர் என்று எதிரி-களால் எழுதப்பட்டவர்.
ஆனால் மீண்டும் எழுந்து நாட்டின் உயரிய அரசியல் பதவியை அடைந்தவர். இந்த எழுச்சிதான் அன்வாரின் அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய அத்தியாயம்.
2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பல்வேறு அரசியல் சமரசங்கள் மற்றும் கூட்டணிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியை அடைந்தார் அன்வார்.
அந்தத் தருணம் அவரின் தனிப்பட்ட வெற்றியாக மட்டுமல்ல; இரண்டு தசாப்தங்களாக அவர் முன்னெடுத்த ‘ரெபோர்மாசி’ அரசியல் முழக்கத்தின் வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.
ஆனால், பிரதமரான மறுநாளே மக்களின் எதிர்பார்ப்புகள் வானளவு உயர்ந்தன.
ஊழல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
விலைவாசி குறையும் என நம்பப்பட்டது.
நிர்வாகம் வேகமாக மாறும் என மக்கள் எண்ணினர்.
இன, மத அரசியல் பின்னுக்குத் தள்ளப்படும் என பலர் கருதினர்.
இந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுவது எந்த அரசுக்கும் கடினமான காரியம். அன்வார் அரசுக்கும் அதுவே நடந்தது.
ஒருபுறம் அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தது. மறுபுறம் பொருளாதார வளர்ச்சியையும் முதலீடுகளையும் ஈர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதேவேளையில் வாழ்க்கைச் செலவுகளின் உயர்வு சாதாரண மக்களின் அதிருப்தியை அதிகரித்துக் கொண்டே இருந்தது; இருக்கிறது.
இருப்பினும் ‘மடாணி’ முழக்கத்துடன் இயங்கும் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்தது என்று கூற முடியாது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. நிதி ஒழுங்கைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிறுவன மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தேசிய ஒற்றுமை மற்றும் அரசியல் நிலைத்தன்மை என்ற இலக்குகள் முன்வைக்கப்பட்டன.
அதேநேரத்தில், அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகளில் சில இன்னமும் நிறைவேறவில்லை என்பது உண்மை. இதை பக்காத்தான் ஹராப்பான் தலைமையும் மறுக்கவில்லை.
விமர்சனங்களைக் கேட்க வேண்டும், குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்று கூட்டணித் தலைவர்களே ஒப்புக்கொள்கின்றனர்.
அன்வாரின் நான்காண்டு ஆட்சியை ஒரு சொல்லில் வரையறுக்க வேண்டுமெனில், அது ‘அடித்தளம் அமைத்த காலம்’ என்பதாக இருக்கும்.
ஏனெனில் இன்று அவரே கூறுவது போல, ஒரு நாட்டின் முன்னேற்றம் புள்ளிவிவரங்களில் மட்டுமல்ல; குடும்பங்களின் வாழ்க்கை மேம்படுகிறதா, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறதா, குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது.
அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முந்தைய இறுதி ஆண்டாக இருப்பதால், இந்த அடித்தளம் உண்மையான பலன்களாக மாறுகிறதா என்பதே இனி மக்களின் கேள்வியாக இருக்கும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அன்வார் தன் அரசியல் கனவை நிறைவேற்றினார்.
இப்போது அந்தக் கனவை மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் உணரக்கூடிய மாற்றமாக மாற்றிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
வரலாறு அவரை ஒரு “போராடி வென்ற தலைவர்” என்று ஏற்கனவே பதிவு செய்துவிட்டது.
இனி அவர் “மாற்றத்தை நிகழ்த்திய பிரதமர்” என்றும் பதிவு செய்யப்படுவாரா என்பதற்கு இந்த ஓராண்டே பதில் சொல்லும்.!


