
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய பன்னாட்டு மக்களில் 205 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
உயர் வருமானம், மேல்தட்டு வாழ்க்கை போன்றவற்றை இலக்காகக் கொண்டு இந்தியாவிலிருந்து ஏராளமானவர்கள் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைகள் சார்ந்து பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முறையான குடி நுழைவு அனுமதியுடன் அங்கு பணிபுரிகின்றனர்.
அதேவேளை சட்டவிரோதமாகவும் பல நாடுகளையும் சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு உள்ளனர்.
குறிப்பாக இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குச் செல்ல விரும்புபவர்களை அனுப்பி வைப்பதற்காக நேரடியாகவும் கமுக்கமாகவும் முகமை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட முகமை அலுவலகங்களின் பிரதிநிதிகள் நகர்ப் பகுதி, கிராமப் பகுதிகளுக்கு எல்லாம் சென்று, அமெரிக்காவிற்கு செல்ல விரும்பும் இளைஞர்களை குறிவைத்து வளைக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் இத்தகைய நிலை மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
அடையாள ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்த கொலம்பிய நாட்டவர்கள் கடந்த வாரத்தில் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் அமெரிக்க ராணுவத்தின்மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்

இந்த வாரம் அப்படிப்பட்ட இந்தியர்கள் மீது ட்ரம்பின் நிர்வாகம் கவனத்தை திருப்பி உள்ளது.
அந்த வகையில் நேற்று செவ்வாய்க் கிழமை காலையில் 205 சட்டவிரோத இந்தியர்களை ஏற்றிக்கொண்ட அமெரிக்க ராணுவ விமானம் இடைநில்லாமல் ஏறக்குறைய 25 மணி நேரம் பறந்து இன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குரு ராம் தாஸ்ஜி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சு.ஜெய்சங்கர் மட்டும் கலந்து கொண்டார்.
ஜெய்சங்கர் அமெரிக்காவில் இருந்தபொழுது அமெரிக்காவில் வசிக்கும் சட்ட விரோத கொடியேற்ற வாசிகள் சம்பந்தமான பிரச்சனை எழுந்தது. இந்தியாவும் இதை விரும்பவில்லை என்று அப்போதே வாஷிங்டனில் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், அப்படிப்பட்ட இந்திய குடிமக்களை இந்தியா திருப்பி அழைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்
பிரதமர் மோடி, ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நிலையில், கடந்த வாரத்தில் ட்ரம்ப் மோடியுடன் தொலைபேசி வழியே உரையாடினார்.
அடுத்த ஒரு வாரத்தில் அமெரிக்கா இத்தகைய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
அமெரிக்கா நாடு கடத்திய 205 இந்தியர்களைப் பற்றிய எந்த விவரமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே, கொலம்பியாவைத் தவிர, குவாட்டமாலா, பெரு, ஹொண்டுராஸ் ஆகிய இடங்களுக்கும் சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
.
இதற்கு இடையில் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை எதிர்த்து அமெரிக்காவின் பல இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.


