
மலேசிய இந்து சங்கத்தின் அடுத்த தேசியத் தலைவராக இளைய தலைமுறையைச் சார்ந்த முனைவர் முரளிதரன் பொறுப்பேற்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய இந்து சங்கத்தின் 49 ஆவது ஆண்டுக் கூட்டம் வரும் 19-ஆம் நாள் (ஜூலைத் திங்கள்) ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா அருள்மிகு சுப்பிர மணியர் ஆலயத்தில் சங்கத்தின் தற்போதைய தலைவர் கணேசன் தங்கவேலு தலைமையில் நடைபெற இருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் வழக்கம் போல ஒன்பது பேர் மூன்றாண்டு தவணை முடிந்து புதிதாக 9 பேர் மத்திய நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கணேஷ் பாபு அணியின் சார்பில் பினாங்கு மாநிலத்தை சேர்ந்த மா. முனியாண்டி, பேராக் மாநிலத்தைச் சேர்ந்த சிவம், பாலகிருஷ்ணன், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த க. மாணிக்கவாசகம், திருமதி எஸ்.பாலா மணி, மலாக்கா மாநிலத்தை சேர்ந்த கு.ஜெகசீலன்,
தினேஷ் வர்மன் குருக்கள், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரேமலா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2025 ஜூலை மாதம் நடைபெற்ற இந்து சங்கத்தின் 48 வது ஆண்டுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழுவின் சார்பில் இதுவரை ஏறக்குறைய 10 கூட்டங்கள் நடந்து முடிந்தாலும் அத்தனை கூட்டங்களிலும் சலசலப்பும் சச்சரவும் தவறாமல் இடம்பெற்றுள்ளன. பிடிக்காதவர்களை நீக்குவது புதிதாக ஆள் சேர்ப்பது என்னும் அணிப்பினி இந்து சங்கத்தை விட்டு அகலவே இல்லை.
இந்து சங்கத்தின் இன்றைய நேரடி தலைவர் டி. கணேசன், மறைமுகத் தலைவர் மோகன் சண்முகம் இருவரும் ஏற்பாடு செய்கின்ற மத்திய செயலவைக் கூட்டங்களில் ஒற்றுமை என்பது சிறிதும் நிலைநாட்டப்பட வில்லை என்பதால் தேசிய அளவில் சலிப்படைந்த மலேசிய இந்து சங்க உறுப்பினர்கள் புதிய நிருவாகத்தையும் இளம் தலைவரையும் விரும்புவதாகத் தெரிகிறது.

அதன் அடிப்படையில் கணேஷ் பாபு அணியை சேர்ந்தவரும் இந்து சங்க மத்திய செயலவையில் ஏற்கெனவே இடம்பெற்று உள்ள வரும் கல்வியாளரும் இளம் தலைவரும் ஆன்மீக நெறியாளரும் இந்து சங்க காஜாங் வட்டாரப் பேரவை தலைவரு-மான முனைவர் முரளிதரன் புதிய தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்து சங்க உறுப்பினர்கள் மத்தியில் பரவலாக கருத்து பரிமாறப்படுகிறது.


