
கோலாலம்பூர் செந்தூல் வட்டாரத்தில் புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமான
அருள்மிகு காளியம்மன் கோயில் பகுதியில் சாலை ஓரத்தில் எல்ஆர்டி இலகு ரயில் தண்டவாளத்திற்குக் கீழே நீண்ட காலமாக வர்த்தகம் செய்கின்ற சிறு வியாபாரிகளுக்கு இன்று பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப. பிரபாகரன் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (டிபிகேஎல்) வர்த்தக உரிம சான்றிதழையும் வாணிகக் கூடாரத்தையும் வழங்கினார்.
செ. தனசீலன், அ. நிர்மலா, அ. குணாளன், வ.ரமேஷ், ச. சுரேந்திரன், சே. சுகுணேஸ்வரி, விக்னேஷ் (எ) விமல், வே. விஜயலட்சுமி, ர. ரங்கநாதன் ரெட்டி, த. மகேசன் உள்ளிட்ட 15 பேருக்கு பிரபாகரன் சான்றிதழையும் கூடாரத்தையும் வழங்கினார்.

சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு முன்பு டிபிகேஎல்- இடம் வர்த்தக உரிமம் கோரி பலமுறை விண்ணப்பம் செய்தும் கிடைக்காத நிலையில், சட்டவிரோத வர்த்தகர்கள் என்ற முத்திரையுடன் சங்கடத்துடன் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து உள்ளனர்.
பூக்கடை, சிற்றுண்டிக் கடை மதிய உணவு இரவு உணவுக் கடைகள் சுவைபான கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வந்த இவர்களிடம் அடிக்கடி டிபிகேஈல் அதிகாரிகள் விசாரணை நடத்தி அதன் மூலம் தொல்லைக்கு ஆளானதும் உண்டு.
இந்த நிலையில் மடாணி அரசு தாமாக முன்வந்து இது போன்ற சிறு வர்த்தகர்களுக்கு வர்த்தக உரிமை அளித்து அவர்களை சட்டப்பூர்வ சிறு வியாபாரிகளாக அங்கீகரித்து அவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஒத்துழைக்கும் முடிவை எடுத்துள்ளது.

பத்து தொகுதியை பொருத்தவரையில் பிரபாகரன் அதற்கு பொறுப்பு ஏற்றுள்ளார்.
இதன் தொடர்பில் இத்தகைய பணியை ஒருங்கிணைக்கும் படி கூட்டரசுப் பிரதேச நலத்துறை அமைச்சர் ஹன்னா இயோ கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இதை செய்ததாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக இத்தகைய சமூக நல பணிக்கு 2 லட்சம் வெள்ளியை ஒதுக்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு நன்றி சொல்வதாகவும் பிரபாகரன் இன்று காலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சான்றிதழையும் வணிக கூடாரத்தையும் அளித்தபின் சம்பந்தப்பட்ட சிறு வர்த்தகர்கள் தத்தம் இடங்களில் சுத்தமாகவும் சூழலுக்கு ஏற்பவும் பராமரித்து மற்ற வியாபாரிகளுக்கு இடையூறு செய்யாத வகையிலும் தத்தம் வியாபாரத்தை தொடர்ந்து முன்னேறும் அதேவேளை, கோலாலம்பூர் மாநகர் மன்ற நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும்படியும் பிரபாகரன் கேட்டுக்கொண்டார்.


