Thursday, April 16, 2026

சந்தர்ப்பவாக கோணங்கிகள்!!!

பொதுவாக மனிதர்களுக்கு இயற்கையான குணநலன்கள் இருந்தாலும் இவை சில சமயங்களில் குடும்ப அளவிலும் சமூக வெளியிலும் மாறுபடுவது உண்டு.

தவிர, ஆன்மீக- அரசியல் நிகழ்வுகள் சார்ந்தும் ஆளுக்கு ஆள் பண்பு நலம் வேறுபடுவதும் உண்டு.

குறிப்பாக ஆசிரியர் என்றால் அவருக்கென்றே ஒரு குணம் இருக்கும்; அதைப்போல மாணவர்கள் என்றால் அவர்களுக்கென வகுப்பறையில் சில தனித்த புத்தியும் செயலும் இருக்கும்.

குடும்ப அளவில் மாமியார் என்றால் மருமகள் மீதான ஒரு பார்வை எப்போதும் இருக்கும்; அது போலவே மருமகள்களுக்கும்!

இத்தகைய மாறுபட்ட குண இயல்பு எல்லா உறவு முறையினருக்கும் இருப்பதைப் போல அனைத்து பணியாளர்களுக்கும் அமைந்திருக்கும்

காவல்துறையில் பணியாற்றுவோர், திருடர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், ஆன்மீகவாதிகள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப அவ்வப்பொழுது குண இயல்பும் பண்பு நலனும் மாறி மாறி வந்து போவதுண்டு.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் இருபத்து நான்காம் நாள் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சார்பில் பன்னாட்டு முருகன் மாநாடு நடத்தப்பட்டது.

அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு பருவப் பெண் தன்னுடைய மார்பகத்தில் திருமுருகக் கடவுளின் திருவுருவத்தை பச்சை குத்துதல் மூலம் பதிந்து கொண்டார்.

அந்தப் பெண் அந்த மட்டில் நிறுத்திக் கொள்ளாமல் அந்தக் காட்சியை காணொளி மூலம் பதிவிட்டு ஊருக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தினார். ஒரு பருவப் பெண்ணின் மார்பில் இன்னொரு இளைஞர் நேரடியாக அந்த உருவத்தை பதிக்கும் காட்சி காணொளிக் காட்சியின் மூலம் பரவியதைக் கண்டு பெரும்பாலானவர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்த பெண்ணியவாதியும் அரசியல் கருத்தாளரும் திராவிட இயக்க குடும்பத்தில் தோன்றி பொதுவுடமை சிந்தனைப் பாதையில் பயணிப்பவரும் பேராசிரியருமான முனைவர் சுந்தரவள்ளி இது குறித்து விமர்சிப்பவரை விமர்சித்திருந்தார்.

ஒரு பெண் தமிழ்க் கடவுள் முருகன்மீது கொண்ட பக்தியின் காரணமாக தன் உடலில் தனக்கு விருப்பமான ஓர் இடத்தில் பச்சை குத்திக் கொண்டார்.

இதில் எந்த ஆணுக்கு எந்த வகையில் பிரச்சனை எழுந்தது? இதை ஏன் விமர்சிக்க வேண்டும் என்று பேராசிரியர் சுந்தரவள்ளி மேலும் வனவி இருந்தார்.

ஒரு பெண்ணின் மார்பகம் என்பது தாய்மை சார்ந்தது; ஒரு தாய், தன்னுடைய குழந்தைக்கு பால் ஊட்டும்பொழுது, கருணையின் பிறப்பிடமாக அன்பின் வெளிப்பாடாக மார்பகம் என்ற உறுப்பு விளங்கும். ஓரோர்வேளை அந்தக் காட்சியை எதிர்பாராமல் காணநேரும் ஆண்கள்கூட மரியாதை கலந்த உணர்வோடு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கடந்து விடுவர்.

இது தமிழ்ச் சமூகத்திற்கேயுரிய பாரம்பரிய பண்பு நலன்.

அதேவேளை ஒரு பருவ மங்கை, தன்னுடைய மார்பை இன்னொரு இளைஞரிடம் காட்டி வெளிப்படையாக கடவுளின் உருவத்தை பதிவு செய்வதை காட்சிப்படுத்தி அதை உலகெங்கும் தெரியப்படுத்துவது என்ன நியாயம்?

இது, காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவருமா இல்லையா? உள்ளபடியே இந்த சம்பவம் பக்தியின்பாற்பட்டது என்றால் அந்த பெண்ணுக்கும் முருகனுக்கும் இடையில் என்ற அளவில் எல்லைக்கட்டி இருக்க வேண்டும். அதுதானே முறை; பேராசிரியர் சுந்தரவள்ளி அதைப் பற்றியெல்லாம் எதுவுமே குறிப்பிடாமல் ஆண்கள் பக்கம் தனது விமர்சனத்தை திருப்பி, இது பெண் உரிமை என்று நிறுவினார்.

பெண்ணுரிமை என்பதற்கு என்னதான் அடையாளம்? எதுதான் அளவுகோல் என்று தெரியவில்லை. உள்ளபடியே அந்த நேரத்தில் திருமுருக மாநாடு நடைபெற்றது. உலகெங்கும் தமிழ் சமுதாயத்தில் திருமுருக புகழ் பாடப்பட்டது. அதனால், ஒருவேளை மனப்பிறழ்வுக்கு ஆளாகினாரோ என்னவோ, தன்னை பிரபலப்படுத்துவதற்காக இந்தப் பெண் செய்த அலங்கோல கூத்து இது. அந்த பெண்ணுக்கு இருந்தது முருக பக்தி அல்லது பித்து என்பதை விட, தன்னை பச்சையாக படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்ற மாறுபட்ட எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்.

அந்தப் பெண்ணை சார்ந்த யாராவது இந்தக் காட்சி காணொளியாக பதிவு செய்யப்பட்டதையும் அதை வான வீதியில் பதிவேற்றம் செய்யப்பட்டதையும் தடுத்து இருக்க வேண்டும்; உரிய ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ இது நிகழாமல் போனது.

எல்லைமீறி விட்ட நிலையில், இதை பெண்ணியவாதியராவது கண்டிக்காவிட்டாலும் சாடியிருக்க வேண்டும். மாறாக பெண் உரிமை என்று வகைப்படுத்தியது, பெண்ணுரிமைவாதிகள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்பதை தெரியப்படுத்தியது.

அதைப்போல இப்பொழுது 2025ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் இன்னும் இரு தினங்களில் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் நேற்று பிப்ரவரி 8 ஆம் நாள் மலேசியாவின் பிரபல ஆன்மீகத் தலமும் புகழ்மிகு சுற்றுலா மையமும் ஆன திருமுருகத் திருத்தலத்தில் யாரோ ஏதோ ஒன்று, வாயில் அலகு குத்தி தன் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு அந்தமட்டில் தன் ஆன்மீகக் கடனை நிறுத்திக் கொள்ளாமல் வாயில் குத்தப்பட்ட அலகுடன் ரயிலில் பொதுமக்கள் பல இனத்தவரும் பயணிக்கும் தொடர் வண்டியில் இதுவும் பயணித்திருக்கிறது.

பல இன, பல சமய, பல மொழி பேசும் மக்கள் பயணிக்கின்ற ஒரு பொது போக்குவரத்து வாகனத்தில் பக்தியின் அடையாளமான மஞ்சள் வண்ண கீழ் ஆடையை மாற்றாமல் மேலாடையும் அணியாமல் அரை நிர்வாணத்தில் பயணம் செய்த இந்தப் பிறவிக்கு, முருக கடவுளின்பால் தனக்கு இருக்கும் பக்தியை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் அதை ஊருக்கும் உலகுக்கும் காட்ட வேண்டும் என்ற கீழான குணம் இருந்திருக்கிறது.

இது பார்ப்போரை மற்ற இனத்தவரை- சமயத்தவரை சங்கடத்துக்கு உள்ளாக்குமே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அருவருப்பு புத்தி கொண்ட இதுகளை எல்லாம் பருவகால அல்லது சந்தர்ப்பவாத கோணங்கிகள் என்ற வகையில் சேர்க்க வேண்டி இருக்கிறது.

இரண்டு நிகழ்வுகளும் தமிழ்க் கடவுள் திருமுருகன் சம்பந்தப்பட்டது.

வாழ்க ஆன்மீகம்!
வளர்க கௌமாரக் கொள்கை!!
ஓங்குக திருமுருகப் புகழ்!!
!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை