
எட்டு மாநிலங்களில் எழுபது கிளைகளுடன் 2025-ஆம் ஆண்டில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்விப் பயணம்
மலேசிய இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக இடைநிலைக் கல்வி மாணவர் வட்டத்தில் கடந்த 43 ஆண்டுகளாக எழுச்சியுடன் செயல்பட்டுவரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இதுவரை ஏறக்குறைய 30 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கிய பெருமையுடன், சமூக வீதியில் செம்மாந்து நடை பயில்கிறது.
இந்த சூழ்நிலையில், நிதிச் சிக்கலும் வறுமை நிலையும் நம் மாணவர்களின் கல்விப் பயணத்தில் தடையாக இருக்கக் கூடாது என்னும் சிந்தனையில் இந்த ஆண்டு ஒரு புதுமைத் திட்டத்தை ஸ்ரீ முருகன் நிலையம்- எஸ்எம்சி அறிவித்துள்ளது.
நம் மாணவர்களின் கல்விப் பயணத்தில் உற்ற உதவி நல்கிவருகின்ற ஸ்ரீ முருகன் கல்வி நிலையம், பி-40 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு கட்டணம் இன்றி கல்விப் பயிற்சியை வழங்க முன்வந்துள்ளது.

இந்த ஆண்டில் சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டுரசு வளாக மாநிலங்களுடன் கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா ஜோகூர் உட்பட எட்டு மாநிலங்களில் எழுபது கிளைகளுடன் ஸ்ரீ முருகன் நிலையம் பீடு நடை போடுகிறது.
குறிப்பாக, இந்திய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் கிளைகளை நிறுவி வாராந்திர வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ள எஸ்.எம்.சியின் சமூக நோக்கு பாராட்டிற்குரியது.
தவிர மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கம், சிந்தனைத் திறன் பட்டறை, தன்முனைப்பு பயிற்சி வகுப்பு, இடைநிலைக் கல்வி தொடர்பான கையேடுகள் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் 2025-ஆம் ஆண்டு கல்விப் பயணத்தை தொடங்க ஸ்ரீ முருகன் மையம் அணியமாகியுள்ளது.
இதன் தொடர்பில் இன்று பிப்ரவரி 16 ஞாயிற்றுக்கிழமை காலையில் தலைநகரத்து விவேகானந்தர் தமிழ்ப் பள்ளி கந்தையா மண்டபத்தில் பேரளவிலான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஸ்ரீ முருகன் நிலைய பொறுப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் அரங்கு கொள்ளா அளவிற்கு திரண்டனர்.
‘ZEROB40‘
இந்தக் கூட்டத்தில் இந்த ஆண்டியின் முக்கிய அம்சமாக ZEROB40 என்று அடையாளம் இடப்பட்ட நலிந்த இந்திய குடும்ப மாணவர்களுக்கு கட்டணம் இல்லாத கல்வியை வழங்கும் திட்டத்தை அறிவித்த போது பெற்றோர்கள் மாணவர்கள் தரப்பிலிருந்து கரவொலி மூலம் எழுந்த ஒருமித்த ஆதரவு அரங்கை அதிர வைத்தது.
தவிர நாடு முழுவதும் இயங்குகின்ற ஸ்ரீ முருகன் நிலையங்களில் ‘ஈ-காசே’ சமூக நல திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், பள்ளிப் படிப்பு முடியும் வரை கட்டணம் இல்லாமல் கற்கும் வசதியையும் ஏற்பாடு செய்துள்ளது
இந்திய சமுதாயத்தின் எதிர்கால மறுமலர்ச்சி கல்வி மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியமாகும் என்பதால் வறுமை நிலை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்னும் சமூகநலப் பார்வையுடன் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் சமூக நலம் சார்ந்த திட்டங்களை இந்த ஆண்டில் அறிவித்துள்ளது.
ஆரம்பக் கல்வியை முடித்துள்ள மாணவர்கள் தங்களின் இடைநிலை கல்வியை 2025 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக தொடங்கும் நோக்கில் இன்றைய நிகழ்ச்சிக்கு. எஸ்எம்சி ஏற்பாடு செய்திருந்தது.
நான்காம் தொழில் புரட்சி தொடர்பாக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பகுப்பாய்வு என்னும் சிந்தனைத் திறன், தீர்வு காணும் ஆற்றல், மதிப்பிடல் உள்ளிட்ட ஆற்றலை நம் சமுதாய மாணவர்கள் வளர்த்துக் கொள்ளும் வகையில் இந்த ஆண்டில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக இன்றைய நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்எம்சி கல்வி மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரும் பிரிக் பீல்ட்ஸ் மண்டல ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீகணேஷ் தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் மொழி ஆளுமை பெற வேண்டும் என்பதற்காக தாய் மொழியான தமிழ், தேசிய மொழியான மலாய், பன்னாட்டு மொழியான ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெறுவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
‘STEM’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கணிதம் ஆகிய பாடங்களில் நம் சமுதாய மாணவர்கள் மேம்பாடு காண்பதற்கான சிறப்பு வகுப்புகளும் எஸ்எம்சி பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன என்றும் ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக ஸ்ரீ முருகன் நிலையத்தில் பயின்று மருத்துவம், பொறியியல், பட்டையகணக்கியல, சொந்தமாக தொழில் முனைவோர், கல்வித்துறை சார் பணிகள், அரசாங்க பொது சேவைப் பிரிவு உள்ளிட்ட துறைகளில் சாதனை புரியும் முன்னாள்(எஸ்எம்சி) மாணவர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இத்தகைய மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகத் கருதப்படுகின்றனர் என்று எஸ்.எம்.சி யின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மகளிர் பிரிவு தலைவியுமான புகனேசுவரி தெரிவித்தார்.
முன்னதாக எஸ் எம் சி இளைஞர் பிரிவு பொறுப்பாளர் அசோகன் வேலு, தொடர்ந்து எஸ்எம்சி இணை இயக்குனர் சுரைன், என்று புகனேஸ்வரி உள்ளிட்டோரும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எழுச்சி உரை ஆற்றினர்.


