Thursday, April 2, 2026

நாட்டில் வேரூன்றிவிட்ட இன- மதவாதத்திற்கு ஒற்றுமை அமைச்சரின் பதவி விலகல் தீர்வாகாது: பொன் வேதமூர்த்தி

ஒற்றுமைத் துறை அமைச்சர் ஏரோன் அகோ டகாங் பதவி விலக வேண்டும் என்று முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி தேசியத் தலைவர் பொன். வேதமூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஒற்றுமைக்கும் சீர்திருத்தத்திற்கும் ஆதாரமாக இருந்த. பிரதமர் அன்வார் இப்ராகிம், இப்பொழுது திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இனவாதத்தை களைவதற்கும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் உரிய சரியான கொள்கையை வகுக்கத் தவறிவிட்டார்.

தேசிய மலாய் தலைமை, மலாய் சமுதாயத்துக்குரிய சிறப்பு உரிமையை நிலைநாட்டும் அதேவேளை, அது அரசியல் சாசனத்தில் வகுத்துள்ளபடி அனைத்து மக்களுக்குமான உரிமையையும் நிலைநாட்டும் பொழுதுதான் நாட்டில் உண்மையான ஒற்றுமை மலரும் என்று ஹிண்ட்ராஃப் சரித்திர இயக்கத்தின் தலைவருமான பொன். வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

மாறாக அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் இதைப் புறக்கணிப்பதுடன் தங்கள் நிலையை தற்காத்துக் கொள்வதற்காக பெரும்பான்மைவாத அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்பதால் மக்களிடையே அச்சமும் பேதமும் தொடர்ந்து வளர்கிறது.

பொதுச் சேவைத் துறை, காவல் துறை, இராணுவம், கல்வித்துறை போன்ற முக்கியமான தலங்களில் இனபேதம் ஆழமாக வேரூன்றிவிட்ட நிலையில் நாட்டில் ஒற்றுமை குறித்த முன்னெடுப்பு வெற்று முழக்கமாகவே இருக்கிறது.

மாற்றத்திற்கான பொறுப்பு பெரும்பான்மையினரிடமே உள்ளது. அவர்கள் இனவாதத்தை தகர்ப்பதிலும் உள்ளடக்கத்தை வளர்ப்பதிலும் முன்னிலையில் இருக்க வேண்டும்.

மௌனமும் செயலற்ற தன்மையும் பாகுபாடு நீடிக்கவே அனுமதிக்கின்றன. ஒற்றுமை அமைச்சரை பலிகடா ஆக்குவதற்குப் பதிலாக சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் நேர்மை, சமத்துவம் மற்றும் நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் துணிச்சலான தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பொருளாதார கொள்கைகளும் நாட்டின் நிதிநிலை அறிக்கைகளும் நாட்டு வளத்தை அனைத்து மக்களுக்கும் சமமாக பகிர்வு செய்வதாக அமைய வேண்டும்; தவிர கலாச்சார பாதுகாப்பும் அனைவருக்குமான சம வாய்ப்பும் இடம்பெறும்பொழுதுதான் நாட்டில் உண்மையான ஒருமைப்பாடு வளரும் என்று மேனாள் ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்

.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை