
தமிழ்நாட்டு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்குச் சென்ற தமிமுன் அன்சாரி, தான் தலைமை வகிக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி-மஜக பொதுச்செயலாளர் எஸ் முகம்மது நாசர் உள்ளிட்ட மஜக முக்கியத் தலைவர்களுடன் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக-வின் முக்கிய தலைவர்களான பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி ஆர் பாலு, கொள்கைப் பரப்பு செயலர் ஆ. ராசா, ஆகியோரையும் சந்தித்து மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.

அந்தமட்டில் நில்லாது, மூத்த அமைச்சர்களான எ.வ.வேலு, கே,என், நேரு, பொன்முடி, எம் ஆர் கே பன்னீர் செல்வம், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், சட்ட அமைச்சர் எஸ் ரகுபதி உள்ளிட்டோரையும் சந்தித்தனர்.
தமிழக சட்டமன்ற நட்பின் அடிப்படையில் தொடர்ந்து அனைவரும் மனம் விட்டுப் பேசி நீண்ட நேரம் அண்ணா அறிவாலயத்தில் செலவு செய்துள்ளனர்.
அதற்கு முதல் நாள் பிப்ரவரி 28-இல், சென்னை YMCA திடலில் திமுக சார்பில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றபோது, மு தமிமுன் அன்சாரி அதிலும் கலந்து கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
அந்த மேடையில், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரான மு.தமிமுன் அன்சாரியும் மேடையில் முதல்வரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
புது டில்லி நடுவணரசின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் தென்புலத்து தலைவராக உருவாகி இருக்கும் மாண்புமிகு மு.க. ஸ்டாலின், கூட்டாட்சித் தத்துவம், மனிதநேய மாண்பு, அனைத்து மக்களுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி, சமதர்ம சமுதாயம் குறித்தெல்லாம் ஓங்கி முழங்கி குரல் எழுப்புபவராகத் திகழ்கிறார் என்றும் தமிமுன் அன்சாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.


