Monday, April 20, 2026

வாயாடி கதவும் வம்புக்காரி சன்னலும்!

ந்தா வம்புக்காரி, அடியே வம்புக்காரீ..,
என்ன நீ இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கே; உன்னையெல்லாம் வெளியூர் அமைச்சராக நியமிச்சு என்ன பிரயோசனம்? சலித்துக் கொண்டாள் வாயாடிக் கதவு.

ஏனக்கா, என்னை என்ன தூங்குமூஞ்சின்னு நினைச்சியா நீ? நேத்து மலேசியாக்கினி பக்கம் போயிட்டு அதன்பிறகு புத்ராஜெயாவுக்கும் ஒரு எட்டு எடுத்து வச்சிட்டு திரும்பினேனா? அந்த களைப்புதான் அக்கா கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். என்ன போயி எழுப்பிட்டியே; என்னக்கா நீ? உனக்கு கொஞ்சம் கூட.. . என்று அத்துடன் நிறுத்திக் கொண்டாளேத் தவிர கதவக்காமீது செல்லமாக கோபம் காட்டினாள் வம்புக்காரி சன்னல்.

நந்தகுமார் லஞ்சம்பெற முயன்றதாக அவரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் வளச்சிபுடிச்சிருக்கே அது உண்மையான்னு உன்னைக் கேட்டு தெயரிஞ்சுக்கலாமேண்ணுதான் மனசு தவியா தவிச்சுது; உன்னையும் நேத்து ராத்திரி ரொம்போ நேரமா காணலையா; எனக்கும் தூக்கம் வரலியா? அதனாலத்தான் கொஞ்சம் யோசிக்காம உன்னை எழுப்பிட்டேன். நீ என்னவோ இப்படி கோவிச்சுக்கிறியே சன்னல்?

ஏன் சன்னல், ஒருவேளை நந்தகுமாருக்கு கண்ணி விரிக்கப்பட்டிருக்கலாம்னு ஒரு பேச்சு ஓடிக்கிட்டிருக்கே, அதப்பத்தியாவது உனக்கு ஏதாச்சும் தெரியுமா?

மொதல்ல வாயை மூடுக்கா; உனக்கு உடம்புதான் பெரிசேத் தவிர, அந்த அளவுக்கு மூளையெல்லாம் என்னாட்டம் இல்லைக்கா உனக்கு.

ஊழல் தடுப்பு ஆணையம்னா சும்மா இல்லை தெரியுமா? எல்லாம், நீதிமன்ற ஒப்புதலோடு, லஞ்சம்பெற முயன்ற சாட்சியோடுதான் நந்தகுமாரை வளைச்சிருக்கிறதா அந்த ஆணையத்தோட தலீவரு சொல்லியிருக்கிறார். அவர் எந்தக் காலத்தில் யாரால் நியமிக்கப்பட்டவர் என்பதை மொதல்ல மனசுல நிறுத்துக்கா?

ஆமாமாம், யாரோ ஒருத்தரோட மருமகன் வெளிநாட்டுல யார் கண்ணுக்கும் படாதமாதிரி இருந்தாரா இருக்குறாரான்னு தெரியல; அந்த மருமகனோட மாமாக் காலத்துலதான் இவரு நியமிக்கப்பட்டாருங்கிறது தெரியும்.

அதெல்லாம் இருக்கட்டும் வம்புக்காரீ, பெரியவங்களை மதிக்கணுங்கிற தன்மை ஓங்கிட்ட கொஞ்சமாச்சும் இருக்காவெனக் கேட்டு வம்புக்காரி சன்னலைக் கண்டித்தாள் வாயாடி கதவு.

இந்தாபாரு, உனக்கு எனக்கும் ஒரே வயசுதான்; நீ சாப்பிட்டு சாப்பிட்டு ஒரே இடத்துல அலுங்காம, குலுங்காம சோம்பேரியாக இருந்து உடம்பு கொஞ்சம் ஊதிக்கெடக்கு; அதுக்காக நீ பெரிய மனுசியா என்னா? போனால் போகுதுன்னு அக்கான்னு கூப்பிட்டா, ரொம்மத்தான் மிதக்குறாய் நீ!

சன்னல் தங்கைக்கு பதில் சொல்லமுடியாத கதவக்காள், பேச்சை திசைதிருப்பினாள்.

பி நந்தகுமார் தமிழ், ஆங்கிலம், தேசிய மொழி ஆகிய மும்மொழி செய்தித் தளங்களிலும் ஆற்றல் மிக்கவர்; புதிய செய்திகளை புதுமையான முறையில் முந்திக்கொண்டு வழங்குவதில் எந்த நேரமும் முனைப்பு காட்டக்கூடியவர்.

தற்பொழுது ‘மலேசியாகினி-Malaysiakini’ இணைய ஊடகத்தில் முழுமையாக ஈடுபட்டு வரும் செய்தியாளரான இவர்,

ஊடகத் துறையில் முடிந்தவரை அறக்கூறுகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நாட்டமுடையவர்; கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒருமுறை அவருடன் பல கதைகளையும் பேசிக் கொண்டிருந்தபொழுது மலேசிய தமிழ் ஊடகத்தைப் பற்றிய பேச்சும் இணைந்தது.

அப்பொழுது தமிழ் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் நாட்டின் அரசியல் மறுமலர்ச்சி-பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற நிலையில் பொருள் ஆதாரமோ வாழ்க்கை நிலையோ அடைய முடியாமல், குறைந்தபட்சம் இன்றைய வாழ்க்கைச் சுமையை சமாளிக்கக் கூடிய அளவிற்கான வருமானம் பெரும்வகையிலோ இல்லை என்பது வருத்தத்திற்குரியது என்றார்.

மலேசியத் தமிழ் அச்சு-இணைய ஊடகமும் அதற்கு ஏற்றாற்போல நலிந்த நிலையில்தான் இருக்கிறது என்பதையும் ஒத்துக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைப் பற்றிய பேச்சு வந்தபொழுது செய்தி சேகரிப்பதற்காக வெளியில் செல்லும்பொழுது அவ்வப்பொழுது, அல்லது ஓரோர் இடத்தில் அல்லது வேளைகளில் அன்பளிப்பு கொடுப்பதும் பெறுவதும் இடம்பெறுகிறது.

இது இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆனாலும் இது நல்லது அல்ல என்று நந்தகுமார் கூறினார்.

இத்தகைய நிலை தொடர்ந்தால் செய்தியாளர்களின் வீரியம் மங்கி போகும்; ஒரு செய்தியாளர் ஒரு கருத்தைப் பற்றி தான் சொல்ல வேண்டிய மொத்த கருத்தையும் வெளிப்படுத்து இயலாமல் போகும். இது பத்திரிகை அறம் வளர துணை புரியாது என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் என்று தொடர்ந்த வம்புக்காரி கதவை இடைமறித்த சன்னல்,

நிறுத்துக்கா, நிறுத்துக்கா.. நிறுத்தூ.. .. என்று கூச்சலிட்டு குறுக்கே வந்த வம்புக்காரி சன்னலைப் பார்த்து, மேல்முச்சும் கீழ்மூச்சும் வாங்கியபடி நிறுத்திய கதவுக்காரி,

இல்ல சன்னல், ஒரு புலனக் குழுவுல வந்த செய்தியை உனக்கு படிச்சுக் காட்டினேன். ஆனா கொஞ்சம் வேகவேகமா படிச்சிட்டேன்; இன்னும் கொஞ்சந்தான் இருக்கு. ஒனக்கு அப்படி வேகமா படிக்க வராதுன்னு பொறாமப்பட்டு இப்படி குறுக்கேவந்து நிக்குறே. எனக்குத் தெரியாதா ஒன்னப்பத்தி..;

சரி, சரி, சொச்சத்தையும் படி..,

அப்படிப்பட்ட நந்தகுமார் வெளிநாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் ஒரு முகவரிடம் லட்சக்கணக்கில் லஞ்சம்கோரி பேரத்தில் ஈடுபட்டிருப்பாரா என்று சற்று சிந்திக்க வைக்கிறது;

அண்மையில் பாகிஸ்தானில் இருந்து தொழிலாளர்களை நாட்டிற்குள் கள்ளத்தனமாக கொண்டு வரும் முயற்சியில் ஒரு முகவக்குழு முயன்றதாகவும் அதற்கு மலேசிய குடிநுழைவுத் துறை ஓய்வுபெற்ற அதிகாரி ஒத்திசைவாக இருப்பதாகவும் செய்தி வெளிவந்தது.

இத்தகைய செய்தியை மேலும் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் தனக்கு ஒரு இலட்ச வெள்ளி கையூட்டு கொடுக்க வேண்டும் என்று நந்தகுமார் கேட்டதாகவும் அதன் அடிப்படையில் நந்தகுமார் 20 ஆயிரத்திற்கு படிந்து, அதைப் பெற்றபோது நந்தகுமார் பொறிவைத்து வளைக்கப்பட்டதாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வெளிநாட்டு தொழிலாளர் சம்பந்தப்பட்ட முகவர்கள் எத்தகைய நாணயத்தை கடைபிடிப்பார்கள் என்பது ஊரும் உலகம் அறிந்தது. அப்படிப்பட்டவர்கள் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தை அணுகியதும் சம்பந்தப்பட்ட முகவர் காவல்துறையை நாடாமல் நேரடியாக ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடியதும் சிந்திக்கவைக்கிறது.

இதையெல்லாம் கூட்டி, கழித்து அவதானிக்கும்பொழுது ஏதோ, எங்கோ இடிக்கிறது.

எது எவ்வாறாக இருந்தாலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்றிருக்கிறது. விசாரணையின் முடிவில் முழு உண்மையும் தகவல் உலகிற்கும் நாட்டிற்கும் தெரியவரும்; மேலும் ஒருவேளை, இந்த விவகாரம் நீதிமன்ற படிக்கட்டுகளை எட்டினால் முழு உண்மை இன்னும் தெளிவாக தெரிய வரும்.

ந்தாக்கா, க்கா, கொஞ்சம்னு சொல்லிட்டு, ஓம்பாட்டுக்கு இழுத்துக்கிட்டேப் போறியே.

முடிஞ்சுது, முடிஞ்சிட்டு வாயாடி, அவ்வளவுதான்.

அக்கா, நான் மாலேசியாவின் பாரம்பரிய தலைநகரத்தையும் புதிய நிருவாக தலைநகரத்தையும் ஒரு சுத்து சுத்தி வந்துட்டேன், இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், வீட்டுக்குள்ளே இருக்குற உனக்குமட்டும் எப்படிக்கா நாலா வட்டத்து தகவலும் வந்துசேருது?.

சமாளிக்க நினைத்த வாயாடிக்கதவு, “ந்தாபாரு சன்னல், ஒனக்கு கண்ணெல்லாம் பொங்கியிருக்கு; வாயும் மணக்குது. மொதல்லபோயி முகத்தைக் கழுவு; எனக்கும் பசிக்குது, சூடா ஒரு கொவல சுவை நீர் குடிச்சிட்டு வருகிறேன்” என்றது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை