
பெரும்பாலான உலகத் தலைவர்கள் லெவன்ஸ்கி பக்கம்..!
1971-இல் உலக வரைபடத்தை மாற்றியமைத்த இந்திய-பாகிஸ்தானியப் போரின்பொழுது அதிபர் ரிச்சர்ட் நிக்சன் எப்படி நடந்துகொண்டாரோ அதைப்போல எள்முனையளவும் மாறாமல் இன்றைய அதிபர் டோனால்ட் டிரம்பும் நடந்து கொள்கிறார்.
பச்சையான பக்கசார்பாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வவதில் டிரம்ப் கொஞ்சமும் மனம்கூசவில்லை; அமெரிக்காவின் குடியரசுக் கட்சித் தலைவர்கள் என்றாலே இப்படித்தான் இனவாதியாக இருப்பார்கள் போலும்.!
தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து உலகம் அறியும். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகுதியாக வாழும் தமிழ் மக்களுக்கும் சிங்கள பேரினவாத கொழும்பு அரசுக்கும் இடையே ஏற்பட்ட சிக்கல் அது;
மலேசியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான பேராக் மாநிலத்து தலைநகரம் ஈப்போவில் பிறந்த தந்தை செல்வா, இலங்கையின் வட-கிழக்குவாழ் தமிழர்களின் அரசியல்-சமூக-பொருளாதார-கல்வி உரிமைக்காக ஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்கு மேற்கொண்ட ஜனநாயக முறையிலான அறவழிப் போராட்டம் கடுகளவும் பயனளிக்காத நிலையில், தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது.
அது ஆயுதந்தாங்கிய கொரில்லாப் போர் முறையில் தொடங்கி, பின்னர் இராணுவ மரபுவழி யுத்தமாக மாறியது.
இந்தச் சூழலில், முழுநேர விமானியாக இருந்து, தன் தாயின் அகால படுகொலையின் விளைவாக, இந்திய தேசிய அரசியலில் அதிரடியாக களம் இறக்கப்பட்ட ராஜீவ் காந்தி, சிங்கள ஆதிக்க அரசியல்வாதிகளுக்கும் தமிழீழ மக்களுக்குமான சிக்கல் தொடர்பில் இலங்கை-இந்திய அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயெவர்த்தனேவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார்.

அதில், பிரச்சினைக்குரிய தமிழீழத் தரப்பினரை ஒதுக்கிவைத்துவிட்டு, ஜெயெவர்த்தனேவும் ராஜீவ் காந்தியும் பக்கசார்பாக முடிவெடுத்தால், அது எப்படி சரியாக இருக்கும்?. ஆனாலும், 1987 ஜூலை 29-இல் ராஜீவும் ஜெயேவும் அத்தகைய ஒப்பந்தந்தில் கைச்சாத்திட்டனர்.
தமிழீழ மக்கள் அரசியல் வலிமை பெறுவதற்காக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்படு ஒரே மண்டலமாக அறிவிக்கப்படும் என்று இலங்கை-இந்திய அமைதி ஒப்பந்தத்தில் மேலோட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில், இந்திய, இலங்கை நலனே முகாந்திராமக இருந்தது; இது, ஏறக்குறைய இரு பெருங்குரங்குகள் அப்பத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு, இளைத்த குரங்கை ஏமாறவைத்து தவிக்கப்பட்டதைப் போல இருந்தது.

இந்த ஒப்பந்தத்தில் சான்று கையொப்பமிடும்படி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மேதகு பிரபாகரனை ராஜீவ் கட்டாயப் படுத்திய கதையைப் போலத்தான், ரஷ்ய-யுக்ரேனியப் போர் குறித்த சிக்கலில், யுக்ரேனிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் நடத்திய விதமும் அமைந்துள்ளது.
பேச்சு நடத்த திம்பு நகருக்கு வரும்படி பிரபாகரனை தந்திரமாக அழைத்து, பின் புதுடில்லி அசோகா தங்கும் விடுதியில் சிறைவைத்து ஜெயெவர்த்தனேவும் ராஜீவும் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாக சான்று கையொப்பமிடும்படி பிரபாகரன் கட்டாயப்படுத்தப்பட்டார்.
பெயர்தான் அமைதி ஒப்பந்தமேத் தவிர, இது தங்களுக்கு இருக்கின்ற கொஞ்ச அமைதியையும் கெடுக்கிற பாதக ஒப்பந்தம்; தங்கள் இலக்கான தமிழீழ தனித் தாயகம் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதால், இதில் கையொப்பமிட இயலாது என்று பிரபாகரன் மறுத்தார். அந்த நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உதவியையும் ராஜீவ் நாடினார்.

பிரபாகரன், தங்கள் நிலையை எம்ஜிஆரிடம் ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டதால் இதில் எம்ஜிஆரும் பின்வாங்கினார்.
1975-இல் இந்திரா காந்தி அமுல்படுத்திய அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து, ஒரேயொரு மாநிலம் மட்டும் திர்மானம் நிறைவேற்றியது. இதனால் வெகுண்ட பிரதமர் இந்திரா காந்தி, அதை மீட்டுக்கொள்ளும்படி முதல்வர் கலைஞருக்கு கோரிக்கை வைத்தார்.
‘வேலையைப் பார்’ என்ற விதமாக, கலைஞர் அடியோடு மறுத்ததை ஏற்க முடியாத இந்திரா, “I’ll Crush the DMK” என்று கொக்கரித்தார்; அதைப்போல, இலங்கை-இந்திய அமைதி ஒப்பந்த விவகாரத்தில் பொறுமை இழந்த ராஜீவும் ‘தொலைத்து விடுவேன்’ என்று பிரபாகரனை மிரட்டினார்.
கடைசியில், இந்த ஒப்பந்தம்தான் ராஜீவின் உயிரைக் குடித்தது; தமிழீழ விடுதலைப் போரும் முள்ளி வாய்க்காலில் நிலைகுத்தி நிற்கிறது. மொத்தத்தில் பலனடைந்தது, ராஜ(நரித்)தந்திரி ஜெயெவர்த்தனேவும் சிங்கள பேரினவாதமும்தான்.
யுக்ரேனுக்கு எதிராக போர்த் தொடுக்கவில்லை; மாறாக, வெறும் இராணுவ நடவடிக்கைதான் என்று ரஷ்ய ஆக்கீரமிப்பு அதிபர் விளாடிமிர் புதின் தலுக்காக சொன்னாலும், நேட்டோ அமைப்பில் உறுப்பியம் பெற முயன்ற யுக்ரேனுக்கு எதிரான உண்மையான போரைத்தான் ரஷ்யா நடத்திவருகிறது.

ஆண்டுக் கணக்கில் நீடிக்கும் இந்தப் போருக்கு தீர்வு காண்பேன்; அதை முடித்து வைப்பேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்ட டிரம்பிற்கு, புதினை நன்கு பிடித்திருக்கிறது; தன்னைப் போலவே புதினும் இனவாதியாகவும் ஆக்கிரமிப்புத் தலைவராகவும் இருப்பது காரணமாக இருக்கலாம்.
இதை ஓரளவிற்கு அவதானித்திருந்த செலன்ஸ்கியும், போரை உடனே நிறுத்துவதற்கான எந்த முன்னெடுப்பும் வெள்ளை மாளிகைத் தரப்பிலிருந்து எடுக்கப்போவதில்லை; தனக்கும்(யுக்ரேனிற்கு) எந்த அணுகூலமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும், அமெரிக்கா ஆர்வம் காட்டும் கனிம வள ஒப்பந்தத்தை மட்டும் மளமளவென்று முடித்துக் கொண்டு தாயகம் திரும்புவோம் என்ற எண்ணத்துடன்தான் வெள்ளை மாளிகைக்குப் புறப்பட்டார்.
அதற்கு ஏற்ப, யுக்ரேனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் முனைப்பும் ஈடுபாடும் காட்டுவதற்குப் பதிலாக, வெள்ளை மாளிகைக்கு வரவழைக்கப்பட்ட செலென்ஸ்கியிடம், வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஜாக்சன் பேசியதைப் போல, செலன்ஸ்கியின் நிருவாக நடைமுறை-அரச தந்திர முன்னெடுப்பு குறித்தெல்லாம் விமர்சிக்கும் தன்மையில் அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ் பேச ஆரம்பித்ததும் செலென்ஸ்கி கொதிநிலைக்குச் சென்றார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சார களத்தில், செப்டம்பர் மாதத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையை செலன்ஸ்கி பார்வையிட்டதோடு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸையும் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியதை மனதில் வைத்து, ஜெ.டி.வான்ஸ் இவ்வறு நடந்துகொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக, ரஷ்யாவுடனான போரில் யுக்ரேனுக்கு ஆதரவாக் அமெரிக்க இதுவரை 350 மில்லியன் டாலர் அளவிற்கு உதவி இருக்கிறது. இதன் தொடர்பில், செலன்ஸ்கியிடம் நன்றியுணர்வு வெளிப்படவில்லை என்று மேலும் இடித்துரைத்ததும், செலன்ஸ்கி எதிர்க்க்கருத்தாடத் தொடங்கினார்.
அப்பொழுது, செலன்ஸ்கி அருகில் அவரை பார்த்தபடி அமர்ந்திருந்த டோனால்ட் டிரம்ப், எடுத்த எடுப்பிலேயே முட்டாள் என அழைத்தார். எங்கெங்கு போர் நடந்தாலும் அங்கெங்கெல்லாம் அமெரிக்கா “கொட்டி அழவேண்டி” இருக்கிறது. முன்னாள் முட்டாள் அதிபர்(ஜோ பைடன்)கூட, இப்படித்தான் மில்லியன் கணக்கான வெள்ளியை ரஷ்ய-யுக்ரேனிய போர்முனையில் கொட்டித் தீர்த்திருக்கிறார் என்றெல்லாம் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே டிரம்ப் மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்காவிற்கு, யுக்ரேன் நாட்டில் உள்ள கனிம வளத்தின்மீது ஒரு கண் இருக்கிறது. அதன் தொடர்பில் வந்திருந்த செலன்ஸ்கியிடம் ஆக வேண்டியது குறித்துப் பேசாமல், அவரையே சாடியதும் குறைகூறியதும், ‘கொண்டபின் குலம் பேசும்’ கீழ்த்தரமானது.
யுக்ரேன்மீது போர் தொடங்கியது முதல், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி இருக்கிறது. பொருளாதார தடைகூட விதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் முடித்து வைத்து, ரஷ்யாவை ஆசுவாசப் படுத்த வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியத்தை பலவீனப்படுத்த வேண்டும்; அப்படியே போகிறபோக்கில் யுக்ரேனை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்பதெல்லாம் டிரம்பின் மறைமுக உத்தியாக(Hidden Ajenda) இருக்கலாம்.
கடைசியில் நறுக்கென்று நாலு வார்த்தைப் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறி விட்டார் செலன்ஸ்கி.
இந்த நிலையில், பெரும்பாலான உலக நாடுகள் இந்தச் சம்பவக் குறித்து கருத்து தெரிவித்துள்ளன; அதிகமான நாடுகள், செலன்ஸ்கி பக்கம் அணிவகுத்துள்ளன.

அண்மைக் காலத்தில், உலக நாடுகள் அதிரடியாக அக்கறைக் காட்டிய விவகாரமாக இது பார்க்கப்படுகிறது.
கனடா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், ஸ்பெயின், ஹங்கேரி, நார்வே, ஸ்விட்சர்லாந்து, செக் குடியரசு, டச்சு நாடு உள்ளிட்ட அதிகமான மேலையுலக நாடுகள், யுக்ரேனையும் அதன் நிருவாகத் தலைவர் செலன்ஸ்கியையும் ஆதரித்து குரல்கொடுத்து வருகின்றன.
ரஷ்ய-யுக்ரேனியப் போரை நிறுத்தும் எண்ணம் டிரம்பிறகு இருந்தால், இருநாட்டுத் தலைவர்களையும் உள்ளடக்கிய அமைதிப் பேச்சை முன்னெடுக்க வேண்டும்; அதைவிடுத்து, இருவரிடமும் தனித்தனியாகப் பேசும் டொனால்ட், புதினிடம் பேசுவது ஒன்றாகவும் செலன்ஸ்கியிடம் பேசுவது வேறொன்றாகவும் இருக்கிறது.
எளிய, சிறிய நாடுகளின் தலைவர்களை அணுசரித்துப் பேசுவதுதான் அமெரிக்க போன்ற பெரிய நாடுகளின் தலைவர்களுக்கு அழகு; ஜனநாயகப் போக்கும் அதுதான்; மாறாக நசுக்கவும் ஒடுக்கவும் சூட்சியாக செயல்படுவதும் அப்பட்டமான அதிகார அத்துமீறல் தன்மை உடையதாகும்.
தற்பொழுது லண்டனில் இருக்கும் செலன்ஸ்கி, இங்கிலாந்தின் பிரதமர், மன்னரையெல்லாம் சந்தித்து அலவளாவி வருகிறார். தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்திலும் இருக்கிறார்.
யுக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரால் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றாலும், இதற்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இதற்கான முக்கியத்துவத்தை கூட்டியிருக்கிறது.
யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு மற்றும் அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உறவு குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.


