
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் மகளிர் பிரிவுகளால் பெண் குலம் மறுமலர்ச்சி காணவில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்தகைய பிரிவுகள் ஆண்களின் மேலாண்மைக்கு மேலும் துணைபோவதால் அனைத்துக் கட்சிகளும் மகளிர் பிரிவை கலைக்க வேண்டும் என்று புதுமைப் பெண் அம்பிகா சீனிவாசன் குரல் எழுப்பியுள்ளார்.
‘மந்திரி’ என்னும் அரசுசாரா அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், பெண்களை வேறொரு பிரிவுக்கு மாற்றும் நேரத்தில், ஆண் பிரிவுதான் தலைமைப் பொறுப்பில் இருப்பதாக ஆண்கள் சொல்லாமல் சொல்கின்றனர்; பெண்களுக்காக ஒரு பிரிவை வழங்குகிறோம், ஆனால், அவர்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள் என்று ஆண்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இத்தகைய கட்டமைப்புகளால், அரசியல்வெளியில், பெண்களுக்கு சமமான நிலை ஏற்படவில்லை என்றும் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
நாட்டின் புதிய கட்சியான மூடா, அத்தகைய மகளிர் பிரிவை ஏற்படுத்தாமல், பெண்களை சமநிலையில் வைத்திருப்பது பாராட்டிற்குரியது என்று மலேசிய வழக்கறிஞர் மன்ற மேநாள் தலைவருமான அம்பிகா குறிப்பிட்டிருக்கிறார்.
மலேசிய அரசியலில் பெண்கள் மிகவும் குறைவாகவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர் என்றும் 222 நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளில் 15% க்கும் குறைவாகவே பெண்கள் இடம்பெற்றிருப்பதையும் அம்பிகா சுட்டிக்காட்டினார்.
அதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் வேட்பாளர்களை நிறுத்தும்பொழுது, 30% பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அத்தகைய நடவடிக்கை அரசியலில் பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
“நாங்கள் கேட்பது முப்பது சதவீதம் மட்டுமே,” என்று கூறிய அம்பிகா, உண்மையான சமத்துவத்தை பெண்கள் கோருவதாக இருந்தால், 50 விழுக்காட்டு இடத்தைக் கேட்க வேண்டும்; இந்த நிலையில் 30% என்பது ஒரு சாதாரண கோரிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.
2022 நவம்பர் 19இல் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில்(GE15), மொத்த வேட்பாளர்களில் 13.4% மட்டுமே பெண்கள்; அப்போது களமிறங்கிய 945 நாடாளுமன்ற வேட்பாளர்களில் 127 பேர் மட்டுமே பெண்கள் என்று அப்போது ஊடகத் தகவல் தெரிவித்திருந்தது.
பக்காத்தான் ஹராப்பான்(நம்பிக்கைக் கூட்டணி) அதிகபட்சமாக 18% பெண் வேட்பாளர்களை நிறுத்தியது, அதைத் தொடர்ந்து தேசிய முன்னணி 11%, பெரிகாத்தான் நேஷனல்(தேசியக் கூட்டணி) 9.3% என்ற அளவிலும் பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கியதாக அம்பிகா மேலும் குறிப்பிட்டார்.


