Sunday, May 3, 2026

மலேசியாவின் 2024 பொருளாதார செயல்திறன் நிகழும் ஆண்டிற்குரிய பொருளாதார நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது: -சிவகுமார் நம்பிக்கை!!

2024ஆம் ஆண்டு மலேசிய பொருளாதாரத்திற்கு மற்றொரு சிறந்த சாதனையைப் பதிவு செய்தது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை நிலையான பொருளாதார மீட்சியை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு மலேசியா தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதற்கான வலுவான சான்றாகும் என்று ஜாசேக தலைவர்களில் ஒருவரும் மனிதவளத்துறை முன்னாள் அமைச்சர்ருமான வி சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் மொத்த வர்த்தகம் RM2.139 டிரில்லியனை எட்டியது, இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட RM2 டிரில்லியனைவிட அதிகமாகும். இந்த அதிகரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், மலேசியாவின் பொருளாதார போட்டித்திறன் வலுவாக உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி மக்கள் பிரதிநிதியுமான சிவக்குமார்.

இந்த வளர்ச்சி பெரும்பாலும் வர்த்தகத் துறையில் ஏற்பட்ட அதிகரிப்பு, உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மீட்சி மற்றும் அதிகரித்து வரும் வலுவான வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றால் உந்தப்படுகிறது. மலேசியாவின் ஏற்றுமதி வளர்ச்சியின் முதுகெலும்பாக மின்னணுவியல், பாமாயில் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறைகள் தொடர்ந்து பங்களிப்பு நல்குகின்றன.

கூடுதலாக, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதில் அரசாங்க முயற்சிகள் அதிக முதலீட்டை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால் நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்படுகிறது. சேவைத் துறையின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் நுகர்வோர் செலவினத்தைத் தூண்டுவதற்கும் பங்களிக்கிறது. இது உள்நாட்டுத் தேவையை அதிகரிப்பதில் முக்கிய உந்துதலாக இருப்பதாக சிவகுமார் தெரிவித்தார்.

மேலும்,2024 ஆம் ஆண்டில் ஊக்கமளிக்கும் சாதனைகளுடன், 2025 ஆம் ஆண்டிற்கான நம்பிக்க அதிகரித்து வருகிறது.

மொத்தத்தில், மலேசியா நிலையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொருளாதார துறைசார்ந்து சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்யலாம். ஏற்றுமதி மற்றும் முதலீட்டுத் துறைகளில் வலுவான போட்டித்தன்மையுடன், நாடு RM2.5 டிரில்லியனுக்கும் அதிகமான வர்த்தக அளவை அடையும் திறனைக் கொண்டுள்ளது.

மலேசியாவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது, குறிப்பாக உலகளவில் தொடர்ந்து வளர்ந்து வரும் பசுமை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் துறைகளில் அது சாத்தியப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி, அதிகரித்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் வேலைவாய்ப்பு சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவை ஒரு மூலோபாய முதலீட்டு இடமாகப் பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புதிய வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் வருமானமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நுகர்வோர் தரப்பின் வாங்கும் திறன் அதிகரிப்பு, சில்லறை விற்பனை மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சியில் நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

இருப்பினும், ஒரு புதிய ஆண்டை எதிர்கொள்ளும்போது, உலகளாவிய பொருளாதார சவால்களை புறக்கணிக்க முடியாது. நிதிச் சந்தை ஏற்ற இறக்கம், வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள், பணவீக்கம் மற்றும் சர்வதேச அளவில் புவிசார் அரசியல் சூழல்கள் ஆகியவை மலேசியாவின் வர்த்தகத்தைப் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

எனவே, பொருளாதார தன்மையை பேணுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உலகப் பொருளாதார சூழ்நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நிவர்த்தி செய்ய ஒரு நெகிழ்வான தூரநோக்கு மற்றும் மீள்தன்மை கொண்ட பொருளாதார உத்திகளை வகுப்பதில் முனைப்பும் தீவிரமும் காட்டப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் முன்வைத்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை