Thursday, April 2, 2026

சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின்மூலம்.. மலேசிய இந்தியரின் உண்மை வரலாற்றை பகிரங்கப்படுத்த வேண்டும்: -பொன்.வேதமூர்த்தி பிரதமர் அன்வாருக்குக் கடிதம்

கோலாலம்பூர், மார்ச் 26:
மலேசியாவில் தற்பொழுது பேசுபொருளாகி உள்ள அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோயில் மற்றும் இந்து கோயில்கள் தொடர்பான பரந்த பிரச்சினைகள் குறித்து பேசவும் மலேசிய இந்திய சமூகத்தின் உண்மையான வரலாற்று ஆவணப் பதிவுகளை பகிரங்கப்படுத்தவும் மடானி-ஒற்றுமை அரசாங்கம் ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை உடனே நடத்த வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் ஆலயம் இடமாற்றம் செய்யப்பட இருப்பதன் தொடர்பில், “சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும்”என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று மார்ச் 25, காலையில் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் மதியமே சுடச்சுட பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மலேசிய சரித்திர சாதனை இயக்கம்-ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி மேற்கண்ட கோரிக்கையை மலேசிய இந்திய சமுதாயத்தின் சார்பில் முன்வைத்துள்ளார்.

மலேசிய இந்திய சமுதாயம், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் குறித்து உண்மையை மறைப்பது அல்லது அரைகுறை தகவலைக்கூறி பொய்த் தோற்றத்தைக் கட்டமைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பின்வரும் வினாக்களுக்கு விடைகாணவும் குறிப்பாக, பல்வேறு சுல்தான்களுக்கு ஆலோசகர்களாகச் செயல்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்திய தோட்டப்பாட்டாளிகள் குடியமர்த்தப்பட்டது, அது குறித்த கொள்கை முடிவு, வரலாற்று பதிவுகள் குறித்த உண்மை ஆகியவற்றை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று பொன்.வேதமூர்த்தி இந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலாயாவின் பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு தமிழர்களையும் தென்னிந்தியர்களையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இங்கு குடியமர்த்திய வரலாற்றுச் சூழல், 1800-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி முதல் 1900-ஆம் ஆண்டுகளின் மையப்பகுதிவரை சிலாங்கூர் சட்ட சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஆவணப் பதிவுகள், தோட்டங்களிலும் வசிப்பிடங்களிலும் தோட்டத் தொழிலாளர்கள் ஆலயத்தை கட்டமைக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வழங்கிய ஒப்புதல், மெர்டேக்காவிற்கு முந்தைய பிரிட்டிஷ் மலாயாவில் 1956-ஆம் ஆண்டு தேசிய கணக்கறிக்கையில் 70% வருமானம் தமிழர்கள் பாடுபட்ட தோட்டத்துறை மூலம் கிடைத்தது குறித்தெல்லாம் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டும்.

1957சுதந்திரத்திற்குப்பின், ஒரு மில்லியன் தமிழ்ப் பாட்டாளிகள் தொடர்பான இடமாற்றம், மலாயாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் கட்டுமான மேம்பாட்டிற்கும் பெரும்பாடாற்றிய பாட்டாளிகள் இந்த மண்ணிலேயே வேர்கொண்டு மூன்றாம்-நான்காம் தலைமுறையை எட்டியபின்னும் இவர்களை இன்னமும் கைவிட்டு புறக்கணிப்பது குறித்தெல்லாம் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒளிவுமறைவின்றி விவாதித்து நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளந்தலைமுறையினருக்குத் தெரிவிக்க வேண்டும்.

பிரிட்டிஷ் நிர்வாக அனுமதியுடன் கட்டப்பட்ட இந்து கோயில்கள், சுதந்திர மலாயாவில் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டன?

1955-1957 காலக்கட்டத்தில் இடம்பெற்ற மெர்டேக்கா அரசியலமைப்பு மாநாடுகளின்போது (4), (5) மற்றும் (6) ஆவது பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, கோயில் அங்கீகாரம் மற்றும் இந்திய சமூகத்தின் நிலை விவாதிக்கப் பட்டதா அல்லது ரீட் அரசியலமைப்பு ஆணையத்திடம் (Reid Constitutional Commission) சமர்ப்பிக்கப்பட்டதா போன்றவையும் பக்கசார்பின்றி ஆலோசிக்கப்பட்டு அவை வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

மலேசிய ஐந்தாண்டு பெருந்திட்டங்களில் இந்து ஆலயங்களின் நிலை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

இதுவரை நிறைவேற்றப்பட்ட 12 பெருந்திட்டங்களில் இந்திய சமுதாயமும் இணைத்துக்கொள்ளப்பட்டதா என்பதெல்லாம் சிறப்பு அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிப்படைத் தன்மையுடன் ஆலோசிக்கப்பட்டு, அவைகுறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக மலேசியாவை ஆண்ட கூட்டணியான தேசிய முன்னணி எம்.பி.க்களையும் உள்ளடக்கிய ‘மடானி’ அரசாங்கம், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதிக்கான அர்ப்பணிப்புடன் இந்த விசயங்களை ஆலோசிக்குமாறும் நம் நாட்டின் அடிப்படைக்கூறுகளான சமூக ஒற்றுமையும் பரஸ்பர மரியாதையும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு அனுப்பியுள்ள விரைவுக் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை