Tuesday, April 21, 2026

இந்து வழிபாட்டுத் தலங்கள்: ஆலய இடத்திலும் பொருத்தமான கட்டுமானத்திலும் அக்கறை செலுத்துவீர்!

கணேஷ் பாபு கலா மண்டபத்தில் அறைகூவல்

சைவம், வைணவம், சாக்தம், கணபதியம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு சமயக் கொள்கைகளை முதன்மையாகக் கொண்ட பாரம்பரிய இந்து சமய வழிபாட்டுத் தலங்களை வழிநடத்தும் தலைவர்கள், முதன்முதலாக ஆலயத்திற்கான இடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மலேசிய இந்து சங்க தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபு கலா மண்டபத்தில் இன்று பேசினார்.

ஆலயம் அமைந்துள்ள இடத்தை எப்பாடுபட்டாவது நாம் உறுதிசெய்து விட்டால், யாரும் எவ்வித கேள்வியையும் எழுப்ப முடியாது; நாமும் இருந்த இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டிய அவசியமும் இருக்காது. ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்தே காலம் முழுவதும் நம் ஆன்மிக சேவை தொடரும்.

ஆலயத் தலைவர்கள், அடுத்து கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான அம்சம், ஆலயக் கட்டுமானம்.

ஆலய நுழைவாயில், சுற்றுவலம் வருவதற்கான இடம்; மூலமூர்த்தி நிலைகொள்ளும் இடம், கோபுரம், முன் மண்டபம், நந்தி அமைப்பு, நவக்கிரக கட்டமைப்பு, ஆலய அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் எந்தெந்த வகையில் அமைய வேண்டுமோ அந்தந்தக் கட்டமைப்பில் அமைய வேண்டும் என்பதை திருப்பணியின் தொடக்கத்திலும் சரி, இடையில் மறுசீரமைப்பு திருப்பணியை மேற்கொள்ளும காலக்கட்டத்திலும் ஆகம விதியிலும் ஆலயக் கட்டமைப்பு விதி குறித்து வரையறுக்கப்பட்டுள்ள அம்சங்களிலும் அனைத்துத் தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கணேஷ் பாபு கேட்டுக் கொண்டார்.

தேசியத் தலைவர் குறிப்பிட்ட அத்துணைக் கருத்தையும் தான் வழிமொழிவதாகக் கூறிய கணேஷ் பாபு, ஆலயங்களின் நிருவாகம் குறித்து எந்தச் சிக்கலும் இல்லை; அதைப்பற்றி பேசவும் நாம் இங்கே ஒன்றுகூட வில்லை.

ஏராளமான ஆலயங்கள் நிலப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர் என்கின்ற உண்மையை, இங்கே திரண்டிருக்கின்ற கூட்டமே சொல்லாமல் சொல்கிறது; ஆனாலும், நாம் ஒருவரையும் குற்றம் சொல்ல வேண்டியதில்லை; அதனால், எந்தப் பயனும் விளையப் போவதில்லை. எனவே, நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, ஒருமுகமாக அணிவகுத்து, ஒரேக் குரலாக ஒலித்து நாம் எதிர்கொண்டுள்ள ஆலயச் சிக்கலை கட்டம் கட்டமாக தீர்க்க பாடுபடுவோம் என்றார்.

அதேவேளை, ஆலயத் தலைவர்கள் மலேசிய இந்து சங்கத்தின்மீது முழு நம்பிக்கை வைத்து எங்களை அணுக வேண்டும். அப்பொழுதுதான், எங்களுக்கும் உண்மை நிலைமை என்னவென்று தெரியவரும். நாங்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆலய நிருவாகத் தரப்பினருக்கு துணைநிற்க முடியும்.

அதையெல்லாம் விடுத்து, ஆலய நிர்வாகத் தரப்பினரே முடிந்தவரை சமாளித்துவிட்டு, முடியாத கட்டத்தில் சிக்கல் பெரிதாக வெடிக்கும்போது அரசியல்-ஆன்மிகத் தலைவர்களும் ஊடகத்தினரும் அதில் கவனம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. அதனால், ஆலய சிக்கல் பேரளவில் பேசுபொருளாகிறது என்றெல்லாம் மலேசிய சர்வ சமய மன்றத்தின் துணைத் தலைவருமான கணேஷ் பாபு ஆலய சிக்கல் தொடர்பாக மலேசிய இந்து சங்க ஒருங்கிணைப்பில் கோலாலம்பூர கலா மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசினார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த இக்கூட்டம், திருமுறை ஓதி, கடவுள் வணக்கத்துடன் தொடங்கியது.

மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தலைமை உரை ஆற்றி தொடக்கி வைத்த இந்தக் கூட்டத்தில் கல்வியாளரும் சமயச் சான்றோருமான முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், அவரின் சீடரும இந்து தரும மாமன்றத் தலைவருமான அ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சமயத் தலைவர்கள், ஆலயத் தலைவர்கள், நிருவாகத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டிருக்கும் இந்தக் கூட்டம் தொடர்பில், மதிய அளவில் செய்தியாளர்க் கூட்டம் நடைபெற இருப்பதால், தமிழ் அச்சு-இணைய-காட்சி ஊடகத்தினர் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை