Monday, April 20, 2026

பினாங்கு இந்து அறவாரியத் தலைமைக்கு சுந்தரராஜு சோமு பொருத்தமானவர்

பினாங்கு மாநில அரச நிருவாகத்தின்கீழ் செயல்படும் பினாங்கு இந்து அறவாரியத்தில், ஜூலை மாதத்திற்குப்பின் தலைமை மாற்றம் நிகழ்ந்தால், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சோ.சுந்தரராஜு அந்த சமய அமைப்பிற்கு பொருத்தமானவராக இருப்பார்.

நாட்டின் ‘கேபினட்’ அமைச்சர் பதவி, தமிழரிடம் இருந்து பறிபோய்விட்டது; ஹிண்ட்ராஃப் வரலாற்று எழுச்சிக்குப் பின் பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது துணை முதல்வர் பதவி தமிழருக்கென்று உருவாக்கப்பட்டது; பேசியும் முடிக்கப்பட்டது; அதுவும் தமிழருக்கு இல்லையென்றாகிவிட்டது. இவ்விரு பதவிகளையும் ஜனநாயக செயல் கட்சி-ஜ.செ.க. வை சேர்ந்த ஒரேக் குடும்பத்தின் அண்ணனும் தம்பியும் அலங்கரிக்கின்றனர்.

பினாங்கு மாநில துணை முதல்வர்(2) பொறுப்பிலிருந்து ஒரு இராமசாமி அகற்றப்பட்டால், அந்த இடத்திற்கு இன்னொரு கந்தசாமியோ அல்லது ஒரு இராவணசாமியோத்தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்; மாறாக, ஒரு சீக்கியரை நியமித்தது எந்தவகை நியாயம்?

இந்த விவகாரத்தில் மக்கள் நீதிக் கட்சியும்(பிகேஆர்) ஜனநாயக செயல் கட்சியும் கூட்டு சேர்ந்து மலேசியத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. இந்த இரு கட்சிகளும் இப்பொழுதைப் போலவே எப்பொழுதும் ‘மஞ்சள் குளித்துக் கொண்டிருக்க’ முடியாது.

இவர்களுக்கும் ஒரு ‘080308’ தேர்தல் முடிவு வரும்!!

இந்தச் சூழலில், பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் பதவியையும் தமிழரிடம் இருந்து தட்டிப் பறிக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இதற்கு, ஒருசில தமிழரும் துணைபோவதுதான் வேதனையானது. இது, அப்பட்டமான இனத் துரோகம்; நம் சமூக-சமய எல்லைக்குள் இழைக்கப்படும் வஞ்சகம்.

உண்மையில், சீக்கியர்கள், தங்களை இந்திய சமுதாய எல்லைக்குள் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்கள்; தாங்கள் இந்தியர் அல்லர் என்றும் தங்களுக்கு தனித்த இன அடையாளம் இருக்கிறது; இனம் சீக்கியம்; மொழி சீக்கியம்; சமயமும் சீக்கியம் என்று சொல்லிக் கொள்ளும் சீக்கிய சமுதாயத்தினர் தங்களின் அடையாள அட்டையில்கூட இனம் என்னும் இடத்தில் இந்தியர் என்பதற்குப் பதிலாக ‘சீக்கியர்’ என்று பதிவிடுவதில் தேசிய பதிவுத் துறையுடன் மல்லுக்கு நிற்பவர்கள்.

இப்படிப்பட்ட நிலையில், நாட்டில் அரசாங்கத்தின் சார்பில் இயங்கும் அதுவும் மாநில அளவில் செயல்படும் ஒரேயொரு சமய அமைப்பான இந்த இந்து அறவாரியத்திற்காவது, ஓர் இந்துத் தமிழர் தலைமை ஏற்பதுதான் பொருத்தமாக இருக்கும்.


நாட்டின் வடபுலத்தில் உள்ள இந்த பாரம்பரிய சமய அமைப்பை தற்பொழுது வழிநடத்துகின்ற ஆர்.எஸ்.என். ராயர், பார்ப்பனியத்திற்கு அடிபணியும் ஒரு சனாதனியாக இருந்தாலும் பினாங்கு இந்து அறவாரிய நிருவாகத்தைப் பொருத்தவரை சீரும் சிறப்புமுற வழிநடத்துவதாகத்தான் தெரிகிறது.

மலேசிய நாடாளுமன்றத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியுமாக இருக்கும் ராயர், இந்து அறவாரியக் கூட்டங்களை நடத்தும்பொழுது தானே திருமுறையை ஓதித்தான் கூட்டத்தைத் தொடங்குகிறார். அந்த அளவிற்கு சமயநெறி வழுவாமல் இவ்வறவாரியத்தை செம்மையுற வழிநடத்துவதாகத் தெரிகிறது.

தவிர, இந்த சமய அமைப்பை ஒரு சமூக மையமாக உருவாற்றும் வகையில், வட்டார மக்கள்நலம் சார்ந்து கல்வி-சமூக-பொருளாதார நலத்திட்டங்களையும் மேற்கொள்வதாகத் தெரிகிறது. பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிருவாகக் கூட்டங்கள் நடைபெறும் பொழுதெல்லாம், அதன் அறங்காவாலர்களுக்கு ஊக்கத்தொகை அல்லது படிச்செலவு வழங்கப்பட்டுவந்த நிலையில், ராயர் தலைமைப் பொறுப்பேற்றதும் அதை மாற்றி, ஆயிரக் கணக்கான அந்த நிதியைக் கொண்டு ஏதும் சமய-சமூக மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று சீர்திருத்தம் செய்திருக்கிறார்.

ஒரு வாதத்திற்காக ராயரே வேண்டாமென்றால், பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் இருக்கிறார்; அவரும் அதே அறவாரியத்தில் அறங்காவலராகவும் பொருளாளராகவும் இருந்து சிறப்பாகத்தானே செயல்படுகிறார்?.

பிறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு(சுற்றுச்சூழல், வீட்டுவசதி) உறுப்பினருமான டத்தோஸ்ரீ சோ. சுந்தரராஜு இந்தப் பொறுப்பிற்கு இன்னும் பொருத்தமானவர்.

ராயருக்கான தவணைக் காலம் இன்னும் முடியாதபொழுது, ஒருவேளை அவரே நீட்டிக்கபடும் வாய்ப்பும் இருக்கும்பொழுது, இப்பொழுது அவரை அகற்ற வேண்டும் என்னும் முனைப்பும் துணிவும் துளிர்விட்ட மையப்புள்ளி எது? அது, ஜசெக உயர்மட்ட தேர்தல் முடிவு.

பினாங்கு இந்து அறவாரியம், அடிப்படையில் ஒரு சமய அமைப்பு; இதில் அரசியலும் அதிகாரமும் ஊடுறுவி இருக்க வேண்டிய அவசியம் இல்லைதான்; ஆனாலும் இது நேர்ந்துவிட்டது. இதைத் தொடக்கிவைத்தது மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா-தான்.

தேசிய முன்னணியின் கடும்பிடியில் பினாங்கு மாநிலம் இருந்தவரை, பினாங்கு இந்து அறவாரியத்தை மாநில மஇகா, தன் கைப்பிடியில் வைத்திருந்தது; அந்த வட மாநிலத்தில் தேசிய முன்னணி அகற்றப்பட்டு, நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்த 2008 முதல், மஇகா வழிகாட்டலைப் பின்பற்றி, ஜசெக-வும் அந்த அக்கப்போரான வேலையை மேற்கொண்டு வருகிறது.

மாநில ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்து அறவாரியத்தில் நேரடி ஆளுமை செலுத்தும்போக்கு தொடர்கின்ற நிலையில், நாமும் நடுநிலையாளர்களும் சொல்ல விழைவது, ஆன்மிக எல்லையில் அரசியல் நுழைவது நல்லதில்லை; நல்லதில்லை; நல்லதில்லை!

ஆனாலும், நாட்டை ஆளும் பிரதமரும் இதில் தலையிட்டு, ராயரை பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக நியமித்தார். இந்தச் சூழலில், கடந்த மார்ச் மாதம் 16-ஆம் நாள் நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலின்போது, 30 பேர் கொண்ட மத்திய நிருவாகக் குழுவிற்குப் போட்டயிட்ட ஆர்.எஸ்.என். ராயர், அதில் இடம்பெறத் தவறிவிட்டார்.

எம்பி-ஆகவும் இந்து அறவாரியத் தலைவராகவும் இருக்கும் ராயர், தான் துடிப்புடன் இயங்கும் கட்சியின் தேசிய நிருவாகக் குழுவில் இடம்பெறாததால், அவருக்கு கட்சியில் ஆதரவும் செல்வாக்கும் இல்லையென முடிவுகட்டிய ஒரு கூட்டம் சமயம் பார்த்து, மாநிலத் துணைமுதல்வராக இருக்கும் சீக்கியருக்கு பல்லக்குத் தூக்கும் அதேவேளை ராயரையும் காலைவாறிவிடலாம் என்ற தீய எண்ணத்தில் ஒரேக் கல்லில் இரு மாங்காய் அடிக்கும் வேலையை ஒருசேர மேற்கொண்டுள்ளது. இந்து அறப்பணி வாரியத் தலைவராக ஒரு சீக்கியர் வரக்கூடாதென்று சட்டம் மறுக்கவில்லை என்று சப்பைக்கட்டு கட்டும் வேலையையும் புரிகிறது.

எல்லாவற்றையும் சமுதாயம் கணக்கில் கொள்ளும்; அதேவேளை, காலமும் இதற்கான தீர்ப்பைத் தீர்மானிக்கும்

நிறைவாக, பினாங்கு இந்து அறவாரியத் தலைமைக்கு ஒரு தலையாய வேண்டுகோள்; அறவாரிய சின்னத்தில், அறவாரியத்தின் பெயரைத் தமிழிலும் பொறியுங்கள்; அப்பொழுதுதான், இந்த இடம் தமிழருக்கானது என்னும் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் எல்லாம் சமய எல்லையில் பயணித்தால், தாய்த் தமிழைப் புறக்கணிக்க வேண்டுமா என்ன? இந்த எண்ணத்தை எங்கிருந்து பெற்றீர்கள். ஓம் என்னும் ஓங்கார ஓசைக்கான ‘ஓம்’ என்னும் தமிழச் சின்னம் இருக்கும்பொழுது, சமஸ்கிருத ஓம் அடையாளத்தை இடம்பெறச் செய்திருப்பது, கனி இருக்க, வெம்பிய பிஞ்சைக் கடிப்பதற்கு சமம். இது, மலேசிய இந்து சங்கத்திற்கும் பொருந்தும்!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை