Monday, April 20, 2026

ரிமாண்ட் கைதி மீது அலட்சியம்: வெ.4லட்சத்து 90 ஆயிரம் நட்ட ஈடு வழங்க ஷா ஆலம் உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிறைச்சாலை ஊழியரின் அலட்சியம் ஒரு புறம் இருக்க ஆர். அனில்ராஜ் என்பவர் எலும்புருக்கி நோயால்(tuberculosis) பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்மீது மருத்துவரும் அலட்சியம் காட்டி இருக்கிறார் என்று ஷா ஆலம் உயர் நீதிமன்ற தீர்ப்பின் தெரிவிக்கப்பட்டது.

வாகன நிறுத்துமிட பணியாளரான ஆர். அணில் ராஜ், நீதிமன்ற ரீமாண்டில் இருந்தபொழுது இறந்திருக்கிறார்.

இறந்தவரின் தாய் ஆர். உதய சுந்தரியும் தந்தை ஆர். ரவிச்சந்திரனும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும் வாதத்தையும் முறையாக முன் வைத்துள்ளதாக நீதிபதி கதிஜா இட்ரிஸ் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் 2021 ஆம் ஆண்டு பெற்றோர் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், பிரதிவாதிகளாக சுங்கைபூலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், சிறைச்சாலை உயர் அதிகாரிகள், வார்டன் மற்றும் அரசத் தரப்பையும் சேர்த்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை எல்லாம் நிறைவு பெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது சிறைச்சாலை அதிகாரிகள், 1995 சிறைச்சாலை சட்டத்தின்படி தங்களின் சட்டபூர்வ கடமையிலிருந்து தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

தன் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கிற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி பிரதிவாதிகள் பெற்றோருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை செலவுத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பொது சுகாதார நிபுணரும் தனியார் பல்கலைக்கழக விரைவுரையாளருமான டாக்டர் எஸ் லீலாவதி, வாதிகளுக்கான ஆறு சாட்சிகளில் ஒருவராக இருந்தார்.

அதேபோன்று அரசாங்க சார்பு எட்டு சாட்சிகளில் ஒரு சுவாச சிறப்பு மருத்துவரும் அடங்கியிருந்தார்.

வழக்கறிஞர் பிஏ ஷெரோன் இந்தப் பெற்றோர் சார்பில் முன்னிலை ஆன நிலையில் பிரதிவாதிகள் தரப்பில் சித்தி ஷகிமா இப்ராஹிம் வழக்காடினார்.

போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 2018 ஏப்ரல் 11 முதல் சுங்கை பூலோ சிறைச்சாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், அதே ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் அவர் இறந்து கிடக்க காணப்பட்டார்.

ரிமாண்டில் வைக்கப்படுவதற்கு முன் தங்களின் மகனுக்கு எலும்புருக்கி நோய் எதுவும் இல்லை என்றும் சுகாதாரமான உடல்நிலையோடு இருந்தார் என்றும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரீமாண்டில் இருந்த காலகட்டத்தில் 2018 ஜூலை மாதம் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் மாத அளவில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதாக தெரிவிக்கப்பட்டது.

அணில் ராஜுக்கு நுரையீரல் காச நோய்க்கான தொற்று ஏற்பட்டு இருப்பதை அடையாளம் காணாமல் வயிற்றுப் பூச்சி மற்றும் சுவாச குழாய் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தவறாக அடையாளம் கண்டதாக பெற்றோர் தங்களுடைய வாதத்தின்போது தெரிவித்திருந்தனர்.

சிறையில் தூக்கத்திலேயே அனில் உயிர் பிரிந்த நிலையில், அவரின் அறைவாசி ஒருவர் அதை அறிந்து தகவல் சொன்னார்.

இதன் தொடர்பில் 2020 ஜூன் ஒன்றாம் நாள் இடப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையில் அணில் கடுமையான காசநோயினால் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை