
மலேசியவாழ் இந்து சமூகத்தினர் ஒவ்வொருவரும் இனி, மலேசிய இந்து சங்கத்திற்கு பொறுப்புகூற கடமைப்பட்டவர்கள்;
அதைப்போன்று ஆலய நிர்வாகத்தினர், சமய இயக்கங்களை சேர்ந்தவர்களும் இனிமேல் “நீங்கள் யார் எங்களை கேள்வி கேட்க?” என்றெல்லாம் மலேசிய இந்து சங்கத்திடம் எதிர்க்கேள்வி எழுப்பமுடியாது .
மலேசியாவில் வாழ்கின்ற இந்து சமுதாய மக்கள், ஆலய நிர்வாகத்தினர், சமய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரும். மலேசிய இந்து சங்கத்துடன் ஒருங்கிணைந்து ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நல்ல சூழல் எழுந்துள்ளது

வரும் காலத்தில் எவ்வித சலசலப்புக்கும் நிர்வாக குளறுபடிக்கும் இடம் அளிக்காமல் ஒருமித்து சிந்தாமல் சிதறாமல் தெளிந்த நீரோடையைப் போல ஆன்மீக வழியில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அனைத்துத் தரப்பினரையும் ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைத்து சீராகவும் செம்மையாகவும் இந்து சமூகத்தை வழிநடத்தவும் இந்து சமயத்தை மேம்படுத்தவும் மலேசிய இந்து சங்கத்திற்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்க மத்திய கூட்டுரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்து சமய நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்தும் நோக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான இன்றைய மடானி- ஒற்றுமை அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்புதலுக்கான முன்னெடுப்பையும் ஒருங்கிணைப்பையும் அயராது மேற்கொண்டவர் ஒற்றுமையத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலமாக மலேசிய இந்து சமூகத்தில் பிரச்சனையும் சலசலப்பும் ஆலயங்களை மையப்படுத்தியே எழுகின்றன.
இதனால் பல இன மக்கள் வாழும் நாட்டில் இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்துக்களுக்கு பலவேளைகளில் சங்கடமும் சிக்கலும் நேர்கின்றன. ஆலயங்களை வழிநடத்துவோரில் குறிப்பிட்ட தரப்பினரே சமய அறிவிலும் தெளிவிலும் மேம்பட்டவர்களாக விளங்குவதுடன் சமூக மறுமலர்ச்சியிலும் அக்கறை கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் அவ்வாறு இருப்பதில்லை.

எடுத்துக்காட்டிற்கு அருள்மிகு முனீஸ்வரர் திரௌபதி அம்மன் கோயில் என்று ஓர் ஆலயத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருந்தால், அந்த ஆலயத்தின் மூலமூர்த்தி யார் என்னும் கேள்வி எழுகிறது; ஐயனா அல்லது ஐயையா என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.
சமயத் தெரிவு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் அள்ளித் தெளித்து எல்லாம் தெரிந்தவர்களைப் போல செயல்பட முற்படுகின்றனர். இது உள்ளபடியே ஆன்மீக நெறிக்கும் சமய மேம்பாட்டிற்கும் சறுக்களை ஏற்படுத்தக் கூடியதாகும்.
இப்படிப்பட்டவர்களை எல்லாம் ஒழுங்கு படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் இன்றைய சூழலில் மலேசிய இந்து சங்கத்தால் இதுவரை ஆகவில்லை.

அதைப்போல ஆலயங்களின் நிர்வாகத் தரப்பில் குடும்ப உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள், சாதிக்காரர்கள் என்றெல்லாம் குழுமனப்பான்மையில் இணைத்துக் கொள்வது; இரு தரப்பினராக பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொள்வது; ஆலய வழிபாட்டுத் தல சிக்கலை சங்க பதிவாகத்திடம் எடுத்துச் செல்வது, காவல் நிலையத்தில் புகார் செய்வது, நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வது என்றெல்லாம் தங்களுடைய தனி இலாபத்தை முன்வைத்து செயல்படுவோர், நம் ஆலயம் -நம் சமுதாயத்திற்குரிய வழிபாட்டுத் தலம் என பொது நோக்கில் சிந்திப்பதில்லை. இப்படிப்பட்ட தரப்பினரை ஒழுங்குபடுத்துவதற்கு மலேசிய இந்து சங்கத்திற்கு ஒரு அழுத்தமான பிடிமானம் இதுவரை இல்லாமல் இருந்தது.
அதைப்போல கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு, லட்சக்கணக்கான வெள்ளியை கையாடல் செய்வது என்றெல்லாம் செயல்படுவோரை நேரடியாக கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ தட்டிக் கேட்கவோ முடியாமல் இருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்து வழிபாட்டுத் தலங்களை சங்க பதிவகத்தில்(ஆர் ஓ எஸ்) பதிவு செய்யும்பொழுதும் உரிமத்தை புதுப்பிக்கும் பொழுதும் சம்பந்தப்பட்ட ஆலயம் சொந்த இடத்தில் இருக்கிறதா என்பதை ஒவ்வோர் ஆண்டும் சங்க பதிவகம் உறுதி செய்ய வேண்டும்; அதேவேளை, மலேசிய இந்து சங்கத்தின் பரிந்துரைக் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் சங்கப் பதிவகம் முறைப்படுத்த வேண்டும். அதற்கு மலேசிய இந்து சங்கம் உரிய ஆலோசனை வழங்க வேண்டும்; இன்னும் இதுபோன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மலேசிய இந்து சமுதாயத்தையும் இந்து வழிபாட்டு தலங்களையும் செவ்வனே வழிநடத்துவதற்கு மலேசிய இந்து சங்கத்திற்கு மத்தியக் கூட்டரசின் சார்பில் ஒப்புதலும் அனுமதியும் வழங்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.

சுதந்திர மலேசியாவில் நீண்ட காலத்திற்குப் பிறகு மலேசிய இந்து சங்கத்திற்கு இப்படிப்பட்ட ஒரு பெருமை, மகுடம் போன்ற தகைமை கிடைப்பதற்கு காரணம் ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி யின் ஒருங்கிணைப்பு- அக்கறை- முன்னெடுப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் ஒரு நாள்;
மலேசிய இந்து சங்க தலைமையகம், கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ(Sultan Azlan Shah)-வை ஒட்டியுள்ள கம்போங் காசிப்பிள்ளை என்னும் குடியிருப்புப் பகுதியில்(8 Jalan Duku) என்ற இடத்தில் செயல்பட்டு வந்தது.

வழக்கமாக காலை 11:00 மணி அளவில் அலுவலகத்திற்கு வந்து மாலை வரை இருந்து அலுவலைக் கவனிக்கும் அந்நாளையத் தலைவர் டத்தோ வைத்திலிங்கம் அம்பலவாணர், அந்த காலக்கட்டத்தில் நாட்டு மக்களுக்கு புதிதாக அறிமுகமாகி இருந்த நாட்டின் புதிய நிருவாக தலைநகரம் புத்ராஜெயாவிற்கு ஏதோ அலுவல் காரணமாக செல்ல வேண்டி இருந்ததால் இந்து சங்கத் தலைமையகத்திற்கு வர வாய்ப்பு இல்லை என்று தகவல் தெரிவித்து இருந்தார்.
ஆனாலும் அலுவலகத்திற்கு அவசரம் அவசரமாக அடித்துப் பிடித்துக் கொண்டு வரவேண்டிய சூழலை திடீரென்று முளைத்த ஒரு சூழல் ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட நாளில் காலை பத்தரை மணி அளவில் ஏராளமான தமிழர்கள் இந்து சங்கத்திற்கு முன்பு சாலையில் திரள ஆரம்பித்தனர்.
நேரம் ஆகஆக கூட்டம் அதிகரித்தது; உடனே டத்தோ வைத்திலிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரும் சென்ற வேலையை முடித்தும் முடிக்காமலும் இந்து சங்க தலைமையகத்திற்கு விரைந்தார்.
திடீரென ஏராளமானோர் அணி திரள்வதைக் கண்டு அங்கு வசிக்கின்ற மக்கள் வியப்பு மேலிட உற்று நோக்கினர்.
கூட்டத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஒரு சிலர் மட்டும் உள்ளே சென்று விவரம் கேட்டுக் கொண்டு வந்தனர்.
வைத்திலிங்கம் உள்ளே நுழைந்ததும் திரண்டு இருந்த பொதுமக்களும் தலைமையாக்கத்திற்குள் நுழைந்தனர்
டத்தோ வைத்திலிங்கம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் குழுமியிருந்தோர் தரப்பில் இருந்து பேசிய ஒருவர்,
“டத்தோ நீங்கள் மலேசியாவில் வாழ்கின்ற அனைத்து இந்துக்களுக்கும் நீங்கள் பொறுப்புதாரரா அல்லது இந்து சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் நீங்கள் பொறுப்புதாரியா? என்று உரக்கப்பேசி வினா எழுப்பினார்.
வைத்திலிங்கம் சற்று தடுமாறித்தான் போனார். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு “இல்லீங்க; நாங்கள் எங்கள் இந்து சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் பொறுப்பு கூற கடமைப்பட்டவர்கள்” என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார்
அப்படி என்றால், டாக்டர் எஸ்.எஸ்.கேப்ரியல் வழிநடத்தும் மனவள பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்துப் பெண்கள் தங்களின் தாலியை கழற்றும் படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று நீங்கள் எப்படி அறிக்கை வெளியிட முடியும் என்று சம்பந்தப்பட்டவர் மேலும் வினவினார்.
அந்தப் பயிற்சியில் தாலியைப் பற்றி குறிப்பிட்டு பேசுவதில்லை. ஆனால், ஆண்- பெண் சமத்துவம் குறித்து சில கருத்துக்கள் பரிமாறப்படும். அதன் அடிப்படையில் ஒரு சில பெண்கள் தாமாக முன்வந்து, தாலி என்பது பெண் அடிமைச் சின்னமாக இருப்பதாகக் கருதி அதைக் கழற்றினர் என்பதுதான் உண்மை.
மற்றபடி எவரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அறிக்கை வெளியிட்டு எங்களை சிறுமைப்படுத்துகிறீர்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
அந்தச் சூழலை டத்தோ வைத்திலிங்கம் அற்புதமாக கையாண்டார்;சமாளித்தார்.
உண்மையில் தாலி என்பது பக்தி மார்க்கத்திற்கும் இந்துக்களின் ஆன்மீக நெறிக்கும் தொடர்பு இல்லாதது; அது பண்பாடு சார்ந்தது; இருந்தபோதிலும் எடுத்த எடுப்பிலேயே இந்து சங்கத்தினரைப் பார்த்து நீங்கள் யார் என்று அன்று இருந்ததைப் போல இனிமேல் கேட்க முடியாத ஒரு சூழலும் பொறுப்புகூற வேண்டிய நிலையும் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை அடைவதற்காக மலேசியந்து சங்கத்தின் இன்றைய தலைவர் சிவநெறி செல்வர் தங்க கணேசன் பல கட்டங்களைக் கடந்து, ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு இருந்தார்.
மலேசியாவில் வாழ்கின்ற இந்து சமயத்தவர் தவிர, இந்து ஆலய நிர்வாகத்தினர், இந்து அமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் மலேசிய இந்து சங்கத்திற்கு பொறுப்புகூறவும் விளக்கம் அளிக்கவும் கடமைப் பட்டுள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் நவம்பர் 30ஆம் நாள் மலேசிய இந்து சங்க முன்னெடுப்பில் ஆலயங்களுக்கான ஒருங்கிணைப்பு மாநாடு தேசிய அளவில் பெட்டாலிங் ஜெயாவில் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகவும் அரசப் பிரதிநிதியாகவும் ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
நாட்டில் உள்ள ஆலயங்களை ஒருமுகப்படுத்தி, நிர்வாக அளவில் கட்டுக்கோப்பையை கடைபிடிக்கவும் சமய – சமூக சேவையை ஒருமுகப்படுத்தவும் மலேசிய இந்து சங்கத்திற்கு சில அடிப்படை உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என்றெல்லாம் கேட்டு 12 தீர்மானங்களை நிறைவேற்றி அதை அரசின் கவனத்திற்கு சரஸ்வதி மூலம் கொண்டு சென்றது மலேசிய இந்து சங்கம்.
அந்த 12 தீர்மானங்களும் எட்டு தீர்மானங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த மார்ச் திங்கள் 12ஆம் நாள் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒற்றுமைத்துறை அமைச்சகத்தின் சார்பில் முன் வைக்கப்பட்டதாகவும்
ஒரு வாரம் கழித்து மார்ச் 19 ஆம் நாள் நடைபெற்ற அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலா மண்டபத்தில் சரசுவதி விளக்கம் அளித்தார்.
மலேசியாவில் செயல்படுகின்ற இந்து அமைப்பினர், இந்து சமய வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகியர் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தி ஆன்மீகப் பயணத்தில் பயணிக்க மலேசிய இந்து சங்கத்திற்கு தேசிய அங்கீகாரம் அளிப்பது என கொள்கைளவில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக சரஸ்வதி கந்தசாமி அப்போது மேலும் விளக்கம் அளித்தார்.
அண்மைக் காலமாக இந்து ஆலயங்களின் இடப் பிரச்சனை சம்பந்தமாக, குறிப்பாக அண்மையில் நாட்டில் பேரளவில் பேசப்பட்ட கோலாலம்பூர் ஜலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தேவி பத்திரகாளி அம்மன் ஆலய விவகாரம் எழுந்த பொழுது, ஆலய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கவும் அவற்றை ஒருங்கிணைக்கவும் தேசிய அளவில் மீண்டும் ஒரு கூட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை-ஏப்ரல் ஆறாம் நாள் கோலாலம்பூர் கலா மண்டபத்தில் இந்து சங்கம் கூட்டியது.
அதில் கலந்து கொண்டு விளக்கம் அளித்த துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இந்த விபரங்களை தெளிவுபடுத்தினார்.


