மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் விழித்தெழும் நேரம் இது. நாம் நீண்ட காலம் பொறுமையாகவும் அதிக நம்பிக்கையுடனும் இருந்து வருகிறோம்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்ததும் அன்வார் இப்ராகிம் ஆட்சியைப் பிடித்ததும் நாம் நீண்டகாலமாக சந்தித்துவரும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்பினோம். சீர்திருத்தம், நீதி, அனைவருக்குமான உள்ளடக்கம் என்றெல்லாம் வீசப்பட்ட வாக்குறுதியை நம்பினோம். ஆனால் இன்று, உண்மை வெளிப்படுகிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி கெடா மாநிலத் தலைவர் விவேகானந்தன் அம்மாசி தெரிவித்துள்ளார்.
பிரதமர் அன்வாரின் அணுகுமுறை வேறாக இருக்கிறது; இதுவரை இருந்த பிரதமர்களிலேயே நம் உரிமையை பந்தாடுபவராக இருக்கும் அன்வார், என்ன விலை கொடுத்தாவது மலாய் வாக்கு வங்கியை வசப்படுத்தினால் போதும் எனக்கருதுகிறார்.
நாம் உதவி கேட்கவில்லை. மற்றவர்களுக்குச் சொந்தமானதையும் கேட்கவில்லை. நமக்குச் சொந்தமானதை உரிமையுடன் கேட்கிறோம். நம் முன்னோர், நம்பிக்கையுடன் கட்டிய கோயில்கள், காலனித்துவ காலத்தில் நமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம், நம் வரலாறு, நம் அடையாளம், இந்த தேசத்தில் நமக்கான இடம் ஆகியவற்றைப் பற்றி குரல் எழுப்பினால், அவற்றுக்கான அங்கீகாரத்திற்குப் பதிலாக, நமக்குக் கிடைப்பது நொறுக்குத் தீனிதான்.
பக்கத்தான் கூட்டணி மற்றும் தேசிய முன்னணியில் உள்ள இந்தியத் தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்; அதேநேரத்தில் நம் சமூகம் துண்டு துண்டாக சிதைக்கப்படுவதைக் கண்டு நம் இந்தியத் தலைவர்கள் மௌனம் காக்கின்றனர்; இந்த மௌனம் சமூக துரோகம் ஆகும்.
உண்மையான மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. மலேசிய சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் மற்றும் அதன் அரசியல் பிரிவான மலேசிய முன்னேற்றக் கட்சி-MAP மட்டுமே உங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக தொடர்ந்து போராடுகின்றன. நாங்கள் ஒருபோதும் அரசியல் ஆதாயத்திற்கு அடிபணிந்ததில்லை. இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்தை புறந்தள்ளி, எங்கள் சொந்த நலனை நாங்கள் ஒருபொழுதும் பொருட்படுத்தியதில்லை. உங்களுக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். மலேசிய முன்னேற்றக் கட்சியின் தாரக மந்திரமும் இதுதான்.
வெற்று வாக்குறுதிகளால் நாம் தொடர்ந்து தவறாக வழிநடத்தப்படுவதை இனியும் அனுமதிக்கக்கூடாது.
எனவே, நமக்கு கொள்கை ரீதியான தலைமை தேவை. அரசியல் போராட்டத்தில் தளராத ஓர் இயக்கம் தேவை. நம் குழந்தைகளின் எதிர்காலம், நம் கலாச்சாரம் மற்றும் நம் அடையாளம் யாவும், நாம் இப்போது தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தது என்று விவேகானந்தன் மேலும் தெரிவித்துள்ளார்..


