Thursday, April 2, 2026

‘ஆயர் கூனிங்’ சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்: எம்.ஏ.பி. கட்சி பவானிக்கு ஆதரவு

முனைவர் குமரன்

ஏப்ரல் 26-ஆம் நாள் நடைபெறவுள்ள ‘ஆயர் கூனிங்’ சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலையில் முடிவடைந்துள்ள நிலையில், மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி, சோசலிசக் கட்சி வேட்பாளர் கே.பவானியை ஆதரிப்பதாக எம்ஏபி தேசிய உதவித் தலைவர் முனைவர் அ. குமரன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுத்தாக்கலுக்குப் பின், ஆயர் கூனிங் இப்பொழுது ஆயர் பனாசாக மாறியுள்ள நிலையில் இத்தொகுதியின் வாக்காளர்கள், அதிகார வேட்கைக்கு ஆட்படாத மூன்றாம் தரப்பு பிரதிநிதியாக வழக்கறிஞர் பவானியைத் தேர்ந்தெடுப்பன் மூலம், வழக்கமான வாக்களிப்பாக இல்லாமல், தங்களின் ஜனநாயக அதிகாரத்தை நிலைநிறுத்தும் இடைத்தேர்தலாக இதை மாற்ற முடியும்.

அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொள்ளும் ஆபத்தான போக்கு இன்றைய அரசியலை சூழ்ந்துள்ளது. இதன் பக்கவிளைவை பொதுமக்கள்தான் எதிர்கொள்-கினறனர். தவிர, அதிகாரக் குவிப்பு, காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகள், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றின் எதிர்விளைவையும் மக்கள்தான் அனுபவிக்கின்றனர் என்பதை இந்த வேளையில் மலேசிய முன்னேற்றக் கட்சி வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறது.

மலேசிய சோசலிசக் கட்சியில் இணைந்து நீதி, சமத்துவம், அடித்தட்டு மக்களுக்கான அதிகாரம் ஆகியற்றுக்காக பாடுபட்டுவரும் கே.பவானி, மலேசிய அரசியலில் வளர்ந்து வரும் மூன்றாவது சக்தியின் பிரதிநிதியாக விளங்குகிறார். பிரதான அரசியல் கட்சிகள், எளிய மலேசியர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்-கவலையைப் பற்றி அக்கறை கொள்ளாத நிலையில், பவானியும் அவர் பயணிக்கும் சோசலிசக் கட்சியும் ஒரு துணிச்சலான, கொள்கை ரீதியான மாற்று அரசியலை முன்னெடுக்கின்றனர் என்பதை மலேசிய முன்னேற்றக் கட்சி குறிப்பிடுகிறது.

சுதந்திரமான, கொள்கை அரசியலை முன்னெடுக்கின்ற, அதிகார மட்டத்திற்கு அடிபணியாத அரசியல் சக்தி, முன்பைவிட தற்பொழுது நமக்கு மிகவும் அவசியமாகிறது. மறுசுழற்சி அரசியல்வாதிகளும் அவர்களின் வெற்று வாக்குறுதியும் போதும்போதும் என்றாகிவிட்டது.

எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டிய பொன்னான தருணம் இது என்பதை ஆயர் கூனிங் தொகுதியின் இளம் வாக்காளர்கள் உணர வேண்டும். தங்களுக்காக போராடிக்கொள்ளும் தலைவர்களை ஒதுக்கி, மக்களுக்காக களமாடும் தலைவர்களைப் பற்றி இளைய சமுதாயம் எண்ணிபபார்க்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி வலியுறுத்துகிறது.

அனுபவமிக்க மூத்த வாக்காளர்களோ, தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து பசப்புமொழி பேசி, பொய் வாக்குறுதிகளை அள்ளிவிடும் அரசியல்வாதிகளை நன்கு அறிந்திருப்பதால், இந்த முறை தங்களின் வாக்கு ‘சும்மா இல்லை’ என்பதை நிரூபிக்க வேண்டும்.

எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் பேராக் மாநில அரசியலிலும் ஆட்சியிலும் எந்த மாற்றமும் நிகழாது என்பது உண்மைதான் என்றாலும் வாக்காளர்கள் தங்களின் வாக்கு வலிமை எத்தகையது என்பதை நிரூபிக்கும் களம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் முனைவர் அ. குமரன் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை