
அன்பின் உறைவிடமாகத் திகழும் ஒரு மனிதர் அரசியலில் சாதிக்கும் தலைவராகவும் விளங்க முடியும் என்பதை மலேசிய அரசியலில் நிகழ்த்திக் காட்டியவர் ‘நினைவில் வாழும்’ துன் அப்துல்லா அகமது படாவி.
நாட்டின் ஐந்தாவது பிரதகராகவும் அம்னோ கட்சியின் ஆறாவது தலைவராகவும் செயல்பட்ட துன் அப்துல்லா, அண்மை காலமாக உடல் நலம் பாதிப்புற்று இருந்த நிலையில் நிலையில், நேற்று ஏப்ரல் 14 ஆம் நாள் முன்னிரவில் காலமானர்.
மலேசிய அமைச்சரவையில் பாதுகாப்பு, உள்துறை உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகளை வகித்த துன் அப்துல்லாவிற்கு பிரதமர் பதவி என்னும் மகுடத்தைச் சூட்டியவர், துன் மகாதீர்.

டத்தோஸ்ரீ அன்வாரை பிரதமர் இருக்கைப் பக்கம் அண்டவிடக் கூடாதென்னும் கங்கணத்தில், மகாதீர் இந்த ஏற்பாட்டைச் செய்தாலும், துன் அப்துல்லாவை அவரின் போக்கில் நிம்மதியாக ஆட்சி செய்ய விடாமல், தொடர்ந்து ஏதாவது நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தவரும் இதே மகாதீர்தான்
துன்அப்துல்லா பிரதமராக பதவியேற்ற அடுத்த ஆண்டிலேயே அவர் எதிர்கொண்ட நாட்டின் 11-ஆவது பொதுத் தேர்தலில், எந்தப் பிரதமரும் அடையாத மாபெரும் வெற்றியை எட்டினார்.
220 தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இவரின் தலைமையிலான தேசிய முன்னணி 198 இடங்களை கொத்தாக அள்ளியது. இவர் தலைமை வகித்த அம்னோ கட்சி மட்டுமே 109 இடங்களை வென்று, தனிப் பெரும்பான்மையைத் தொட்டு நின்றது.
துன் அப்துல்லாவின் புகழ் உச்சத்தைத் தொட்டது.

இவரின் போதாத காலம் 2007-ஆம் ஆண்டில் ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணியை எதிர்கொள்ள நேரிட்டது. உண்மையில், இதை, துன் மகாதீர் எதிர்கொண்டிருக்க வேண்டும். அவருக்கான நல்வாய்ப்பாக, அவர் பதவியில் இல்லாமல் போனார்.
மதமாற்றம், ஆலய உடைப்பு, இந்திய இளைஞர்களுக்கான கல்வி-வேலை வாய்ப்பில் தேக்க நிலை, வீட்டுடைமை சிக்கல், போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் என்றெல்லாம் ஏராளமான சிக்கல் இந்திய சமுதாயத்தை சூழ்ந்திருந்ததன் விளைவாக ஏற்பட்ட அந்தத் தன்னெழுச்சிப் போராட்டத்தை துன் அப்துல்லா, சற்று முற்போக்காக கையாண்டிருக்கலாம்.
இந்திய சமுதாயத்தின் ஒற்றைத் தலைவராக இருந்த துன் சாமிவேலுவிடம் பிரச்சினையை ஒப்படைத்த அப்துல்லா, அந்தமட்டில் தன்னை வரையறுத்துக் கொண்டார். இந்திய சமுதாயத்தில், குறிப்பாக தமிழர் மனங்களில் ஆழப் பதிந்திருந்த காயத்திற்கான மருந்து குறித்து, அப்துல்லா கடந்து சென்றார்.

அதேவேளை, மலேசிய இந்திய வர்த்தக தொழில் சங்க சம்மேளனத்தில் உறுப்பியம் பெற்றிருந்த முக்கியமான 14 வர்த்தக சங்கங்கள் எதிர்கொண்ட தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு வெளிநாட்டு தொழிலாளர்களே அமர்த்திகொள்ள அனுமதி அளித்தார். இதன்தொடர்பில் துன் சாமிவேலு எடுத்து முன்னெடுப்பும் குறிப்பிடத்தக்கது
துன் சாமிவேலு, 2008 மார்ச் 08 பன்னிரண்டாவது பொதுத் தேர்தலின் போது, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அடைந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பின், ஹிண்ட்ராஃப் தரப்பினர் முன்வைத்த கோரிக்கையில் ஒருசில நியாயம் இருப்பதாக பட்டும்படாமல் ஒத்துக்கொண்டார்..

அதைத் தேர்தலுக்கு முன்பே சொல்லி இருந்தால், அவர் கரைசேர்ந்திருப்பார்;
மாறாக, ஹிண்ட்ராஃப் தரப்பினர் சொல்வதில் பொருளில்லை; ஏதோ ஏழெட்டு பேர், குறை கூறிக் கொண்டிருப்பதாக சொல்லி அலட்சியப்படுத்தினார்.
விளைவு, 2004 பொதுத் தேர்தலில் முடிசூடா மன்னரைப் போல வாகை சூடிய அப்துல்லா, 2008 பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையை இழந்ததுடன், இவரின் தலைமையிலான தேசிய முன்னணி அரசியல் கூட்டணி, நாட்டில் முதல் முறையாக சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பேராக், பினாங்கு, கெடா ஆகிய ஐந்து மாநிலங்களின் ஆட்சியையும் பறிகொடுத்தது.

இந்த சந்தர்ப்பத்தை டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கும் டான்ஸ்ரீ முகைதீன் யாசினும் வகையாகப் பயன்படுத்திக் கொண்டு, அப்துலாவிற்கு எதிராக ஓங்கு முழங்கி குரல் எழுப்பினர்.
ஹிண்ட்ராஃப் பிரச்சினை நாட்டின் பிரச்சினை என்பதை மறந்து, அப்துல்லாவின் தலைமைதான் சரியில்லை என்று ஓயாமல் கலகக் குரல் எழுப்பி வந்ததால் இந்த அமைதித் தலைவர், காதும்காதும் வைத்தாற்போல ஒதுங்கிக் கொண்டார். பிரதமர் பதவியையும் 2009 ஏப்ரல் இரண்டாம் நாள் துறந்தார். பன்னிரண்டாவது பொதுத் தேர்தலுக்குப் பின் ஓர் ஆண்டு கழிந்து அடுத்து ஒரு மாதம்கூட அவரால் பிரதமர் பதவியில் தொடரமுடியாத அளவிற்கு கட்சிக்குள் கலகக் குரல்கள் அதிகமாக ஒலித்தன.

இதில், நஜீப்பைவிட, அதிகமாக கொக்கரித்தவர் முகைதீன்தான். அண்ணன் எப்போது இடம்பெயர்வான்; திண்ணை அப்போது காலியாகுமே என்ற மனப்பான்மை அவரிடம் இருந்தது. அப்துல்லா பதிவி விலகினால், அம்னோ துணைத் தலைவரும் துணைப் பிரதமருமான நஜீப் பிரதமர் ஆவார்; தாம் துணைப் பிரதமர் ஆகலாம் என்ற வேட்கை, அதில் பொதிந்திருந்தது.
நாட்டில் வடபுலத்தைச் சேர்ந்த அப்துல்லா, புக்கிட் மெர்தாஜம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். அவரின் அரசியல் பயணத்தில், ஏற்றத் தாழ்வுகள் ஏராளமாக இருந்தன. அம்னோவில் தலைமைப் போராட்டம் எழுந்த நேரத்தில், துன் மூசா ஈத்தாம், துங்கு ரசாலி பக்கம் சேர்ந்து, மகாதீர் எதிரணி பக்கம் நின்றார்.
பின்னர் மீண்டும் மகாதீருடன் இணைந்துகொண்டார்.

2009-ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய நாட்டின் 12-ஆவது பொதுத் தேர்தலை, ஓராண்டிற்கு முன்பாகவே துன் அப்துல்லா ஏன் நடத்தினார் என்ற காரணமும் அக்கால அரசியல் சூழலும் தெரியவில்லை.
ஹிண்ட்ராஃப் எழுப்பிய கோரிக்கைகளை நிதானமாக பரிசீலித்து, அவற்றை ஒன்றுக்கு பாதியென்ற அளவிலாவது நிறைவேற்றி, ஒருவேளை, 2009-இல் பொதுத் தேர்தல் நடைபெற்றிருந்தால், துன் அப்துல்லா, பிரதமர் பதவியில், இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீடித்து நாட்டை வழிநடத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணவும் இடம் இருக்கிறது.
எது, எவ்வாறாக இருந்தாலும் அவரின் புகழ், மலேசிய மக்களின் மனதில் நிலைத்திருக்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த நவம்பர் 26, துன் அப்துல்லாவிற்கும் பிறந்த நாள். 1939-இல் பிறந்த துன் அப்துல்லா, 86 வயதை எட்டியிருந்த நிலையில், அவர் காலமாகி இருக்கிறார்.
அவருக்கான நிறைவு மரியாதை, அரச மரியாதையாக இன்று பகலில் நடைபெற்றது; முன்னதாக, அந்தப்பெருமகனாரின் நல்லுடல், பொதுமக்களும் பெருமக்களும் மரியாதை செலுத்துவதற்காக கோலாலம்பூர் தேசிய பள்ளிவாசல் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது
தன்னுடைய அரசியல் பயணத்தில் விவேகியாக விளங்கியவர் துன் அப்துல்லா அகமது படாவி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவருக்கு புகழ் மாலை சூட்டி உள்ளார்.

பினாங்கு கப்பளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியை ஏறக்குறைய ஒரு தலைமுறை காலத்திற்கு தன்வசம் வைத்திருந்த அந்த மக்கள் நலத் தலைவரின் பொன் உடல் மறைந்தாலும் அவரின் பெயரும் புகழும் மலேசிய கூட்டு சமுதாயத்தில் என்றென்றும் நிலை பெற்றிருக்கும்!
வாழ்க ‘பாக் லா’!



நிறைய செய்திகளை விரிவாக எழுதியுள்ளீர்கள்…. நன்று.. நன்றி