Thursday, August 6, 2026

கைக்கு எட்டியது வாய்க்கெட்டாமல் போனது!

ஆனாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது மஇகா-விற்கு!.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா-விற்கு(மலேசிய இந்தியர் காங்கிரஸ்) ஆட்சி மன்றத்தில் இரு இடங்கள்(EXCO) உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் களத்தில், ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மஇகா வேட்பாளர் அச்சுதன் அழகனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ முனைவர் அகமது ஜாஹிட் அமிடி, ஆகஸ்ட் 01 நெகிரி சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அமையக்கூடிய புதிய ஆட்சி மன்றத்தில்(மாநில அமைச்சரவையில்) இரு உறுப்பினர்களுக்கு (மாநில அமைச்சர்களுக்கு) வாய்ப்பளிக்கப்படும் என்று பெருகரவொலிக்கிடையே அறிவித்தார்.

இதனால், உற்சாக வெள்ளத்தில் திளைத்தது மஇகா.

இருந்தபோதும், இரு தொகுதிகளையும் இழந்த மஇகா, பெரும் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது, இப்பொழுது.

18 ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுதுதான், மீட்சிபெறத் தொடங்கியது, நாட்டின் மிகமூத்த அரசியல் இயக்கமான மஇகா.

மலேசிய அரசியல் வரலாற்றில், எண்ணற்ற சிறப்பும் பெருமையும் இந்தக் கட்சிக்கு உண்டு. அவை காலந்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். அந்தக் கடமையை இந்தக் கட்சி ஏனோ செய்வதில்லை என்பது, இந்த அரசியல் பேரியக்கத்திற்கு ஒரு பின்னடைவுதான்.

அத்தகைய பெருமைக்கூறுகளில் ஒன்றுதான், 100% தேர்தல் வெற்றி.

அனைத்துத் தேர்தலிலும் இது சாத்தியமில்லை என்றபோதும் அதிகமான தேர்தல்களில் எண்ணிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளிலும் வென்று நூறு விழுக்காட்டு வெற்றியை நிலைநாட்டிய ஒரேக் கட்சி மஇகாதான். மலேசிய அரசியல் வரலாற்றில் மஇகா-விற்கென்று உள்ள தனிச் சிறப்பு இது.

குறிப்பாக, கட்சியின் மேநாள் தலைவர் ‘நினைவில் வாழும்’ துன் ச. சாமிவேலனார் காலத்தில் இது, அதிகமாக சாத்தியமாயிற்று.

இந்த அரசியல் பெருமை அவராலேயே..,அவர்தம் கண் முன்னாலேயே குலைந்துபோனது; 2008 பொதுத் தேர்தலில் அவரே வெற்றிக்கோட்டை எட்டத் தவறினார்.

அப்போதைய அரசியல் சூழலையும் ஹிண்ட்ராஃப் எழுச்சியின் தாக்கத்தையும் சற்று நிதானமாக அவதானித்து, பிரதமர் ‘நினைவில் வாழும்’ துன் அப்துல்லா படாவியிடம் உண்மை நிலையை எடுத்தியம்பி, சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, சில அறிவிப்புகளையும் பிரதமர்வழி வெளியிடச் செய்திருந்தால், கனன்று கொண்டிருந்த ஹிண்ட்ராஃப் நெருப்பை நீர்த்துப்போக செய்திருக்கலாம்.

துன் சாமிவேலு ஏனோ அப்படி சிந்திக்கவில்லை.

சாமிவேலுவிடம் இருந்த அலட்சிய மனநிலையோ அல்லது தகவல் துறை முன்னாள் அமைச்சர் ‘நினைவில் வாழும்’ டத்தோஸ்ரீ ஜைனுடின் மைடின் போன்றவர்கள் உசிப்பி விட்டதால் எழுந்த பெரும்போக்கோ என்னவோத் தெரியவில்லை.

“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க; ஹிண்ட்ராஃப் கூப்பாடெல்லாம் சும்மா பத்து பேரு கூவிட்டிருக்கிறாங்க” என்று வெகு அலட்சியமாக சொன்ன சாமிவேலு, பன்னிரண்டாவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தபின் ஹிண்ட்ராஃப் இருப்பை ஏற்றுக் கொண்டார். அவர்கள் எழுப்பும் குரலில் சில நியாயம் இருக்கு என்று பட்டும்படாமல் ஒத்தும் கொண்டார்.

அப்போது பறிபோன நூறு விழுக்காட்டு தேர்தல் வெற்றிப் பெருமையை இப்போதுதான் அதன் நிகழ்காலத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேசுவரன் மீட்டெடுத்தார்.

மஇகா-வின் 18 ஆண்டு நிதான அரசியல் பயணத்திற்குப் பின் இது சாத்தியமாயிற்று. கடந்த ஜூலைத் திங்கள் 11-ஆம் நாள் நடைபெற்ற ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், 100% வெற்றியை நிலைநாட்டி, இன்ப வெள்ளத்தில் திளைத்திருந்தது மஇகா.

அடுத்த இருபது நாட்களில் இது பறிபோனதால், மஇகா தற்பொழுது திகைத்து நிற்கிறது.

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் மஇகா சந்தித்த 100% தோல்வியை எவரும் எதிர்பார்க்கவில்லை.

சில தினங்களுக்குமுன் செலாயாங் தொகுதி சார்பில் கொண்டாடப்பட்ட ‘மஇகா 80ஆம் ஆண்டு விழா’வில் அது அப்படியேப் பிரதிபலித்தது.

மஇகா சிலாங்கூர் மாநில மேநாள் தலைவரும் செலாயாங் தொகுதி மேநாள் தலைவருமான டத்தோ எம்பி ராஜாவின் பெருமுயற்சியில் நடந்த அந்த விழாவில், மஇகா-வினரிடையே அரசியல் சோகம் இழையோடியது;

வட்டார தொகுதி-கிளைத் தலைவர்களைப் பாராட்டும் முகமாக நடைபெற்ற அந்த விழாவை ஒருவழியாக சமாளித்துக் கொண்டாடினர்.

அதில் சிறப்புரை ஆற்றிய டத்தோ த. முருகையா, பட்டசைப் போல வெடிக்கா விட்டாலும் மத்தாப்பைப் போல எரிந்தார்.

கூட்டணிக் கட்சிகளையும் கூட்டணித் தலைமையையும் மெலிதாக சாடினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மாநிலம் முழுக்க மஇகா-வினர் அந்தந்தத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கும் தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் பரப்புரை மேற்கொண்டு வெற்றிக்கு துணை நின்றனர்.

ஆனால், மஇகா களம்கண்ட சிரம்பான் ஜெயா, ஸ்ரீ தஞ்சோங் தொகுதிகளில் மஇகா-வின் வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகள் துணை நில்லாமல் காலாட்டிக் கொண்டிருந்தனர் என்று பொறிந்துத் தள்ளிய டத்தோ முருகையாவின் கூற்றில் உண்மை இல்லாமலில்லை.

காரணம், கடந்த இரு வாரங்களாக மஇகா வெற்றிக்காக அவர் பட்டபாடு அப்படிப்பட்டது.

குறிப்பாக, இந்தத் தேர்தலில் சிரம்பான் ஜெயா தொகுதியில் களம்கண்ட ரா.தினாளனின் ஊக்கத்தையும் முன்னடுப்பையும் பாராட்ட வேண்டும்.

சீன வாக்காளர்கள் மிகப் பெரும்பான்மையாக உள்ள அந்தத் தொகுதியில், ஜசெக-விற்கு எதிராக களமிரங்கிய கெராக்கான், மசீச கட்சிகளைச் சேர்ந்த சீன வேட்பாளர்களைவிடவும் மஇகா-வின் இந்திய வேட்பாளரான தினாளன் பெற்ற வாக்குகள், சதவீத அடிப்படையில் அதிகம்.

சீன வாக்காளர்கள் ஏறக்குறைய பாதி அளவில்(47%க்கும் மேல்) இருக்கும் சிரம்பான் ஜெயா தொகுதியில், தினாளன் பெற்ற வாக்கு சுமார் 37%.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் ஜசெக-வை எதிர்த்து தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கெராக்கான் சீன வேட்பாளர் Gary Lee Ban Fatt பெற்ற வாக்கு 20% மட்டுமே; அதற்கு முன்னம் 2018 சட்டமன்றத் தேர்தலில் இதே சிரம்பான் ஜெயா தொகுதியில் ஜசெக-வை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மசீச(மலேசிய சீனர் சங்கம்) சீன வேட்பாளர் Choong Vee Hing பெற்ற வாக்கு இன்னும் குறைவானது; 19%தான்.

இத்தகைய சூழலில் புனைகாவியமான மகாபாரத்து அபிமன்யு தனியாக போர்முனை புகுந்ததைப் போல, இந்தத் தேர்தலில் மஇகா மட்டுமே பரப்புரை மேற்கொண்டது. தினாளன் தேசிய முன்னணி வேட்பாளர் என்பதற்கான அடையாளம் தென்பட வில்லை;

தேசிய முன்னணியின் நாட்டாண்மை அம்னோ, உறுப்புக் கட்சி மசீச ஆகியவற்றின் மேல்மட்டத் தலைவர்கள் தினாளனுக்காக பிரச்சாரம் செய்யாவிட்டாலும் வட்டார தொகுதி-கிளைத் தலைவர்கள் என மலாயரோ, சீனரோ பெரும்பாலும் தென்படவில்லை.

மசீச-வினர், சீனர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தினாளனை அழைத்துச் சென்று வாக்கு வேட்டையாடினரா என்ப்து கேள்விக் குறிதான்.

இதற்கான முன்னெடுப்பை மஇகா-வோ அல்லது தினாளனோ ஏன் பேரளவில் முன்னெடுக்கவில்லை என்பதும் புதிராக உள்ளது.

அப்படி இருந்தும், சீனர்களை மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரம்பான் ஜெயாவில், ஜசெக-வை எதிர்த்துப் போட்டியிட்ட சீன வேட்பாளர்களைக் காட்டிலும் தினாளன் பெற்ற வாக்கு அதிகம்தான் என்றலும், வெற்றி கைவசமாக வில்லையே?

வென்றால், மாநில ஆட்சிக் குழுவில் இடம் என்ற சூழலில் மஇகா தலைமை இன்னும் பல்முனை போராட்டம் நடத்தி சிரம்பான் ஜெயா தொகுதியைப் கைப்பற்ற முனைந்திருக்க வேண்டும்.

கடந்த 2025 ஆம் ஆண்டு நெடுகிலும் மாநிலத் தலைமைகளை ஏவிவிட்டு தேசிய முன்னணி தலைமையையும் அம்னோ கட்சியையும் வசைபாட வைத்தது மஇகா தலைமை

தங்களை மதிக்காத தேசிய முன்னணியில் இருந்து விலகவும் பெரிக்காத்தான் கூட்டணியில் இணையவும் போவதாக தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாநில ஆண்டு கூட்டத்திலும் இந்த நிலைமை தொடர்ந்த நிலையில் அதை தேசிய தலைமை நமட்டுச் சிரிப்புடன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

மஇகாவின் இந்த நிலை தேசிய அளவில் அரசியலில் மட்டுமல்ல; ஊடகத்திலும் பேரளவில் எதிரொலித்தது; பிரதிபலித்தது.

இந்த நிலை முற்றியதால் ஒரு கட்டத்தில் அம்னோ மிகவும் சங்கடத்திற்கு ஆளானது. அம்னோ கட்சியும் தன்னிடம் இருந்த சில சண்டைக்கோழி தலைவர்களை ஏவி விட்டு மஇகாவை வசைபாட வைத்தது.

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு அம்னோ தலைமை திட்டமிட்டு மஇகாவை சிரம்பான் ஜெயா தொகுதியில் போட்டியிட வைத்து நெருக்கடியில் தள்ளியதா என்பதும் புரியவில்லை.

இங்குதான் இப்படி என்றால் வெற்றி வாய்ப்பு நெருங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ தஞ்சோங் தொகுதியும் மஇகா வசமாகாமல் போனது இன்னொரு பின்னடைவாகும்.

இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான ஜாகிட் ஹமிடி, அச்சுதனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில் அச்சுதன் அழகன் எப்படியும் வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது.

அப்படி இருந்தும் அந்த தொகுதியை சொற்ப வாக்கு வேறுபாட்டில் அச்சுதன் கைப்பற்றத் தவறியது ஏனென்றுதான் விளங்கவில்லை.

இதன் தொடர்பில் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் உள்ள மஇகாவினரிடையே கருத்து பேதம் இருந்ததாகவும் அவர்கள் முழு மனதோடு அச்சுதனை ஆதரிக்கத் தவறிவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.

அப்படி ஒரு நிலை இருந்தால் அதை முன்கூட்டியே அவதானித்து தேசிய தலைமை அந்த நிலையை சீர் செய்து அச்சுதனையை வெற்றி கோட்டிற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும்.

இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் அச்சுதனும் தேசிய தலைமையின் உதவியை நாடி இருக்க வேண்டும்.

இப்படி எதுவும் நடக்காமல் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியையும் இழந்து மஇகா இப்பொழுது கையறு நிலையில் இருக்கிறது. மஇகா-வின் அரசியல் பயணத்தில் இதுவொரு பின்னடைவுதான்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை