
அமெரிக்க மேனாள் அதிபர்களான பராக் ஒபாமா, பில் கிளின்டன், அண்மையில் பதவி இழந்த ஜோ பைடன் போன்றவர்கள் பதவி இழந்த பிறகு அடுத்து வரும் அதிபர்கள்மீது எவ்வித குற்றச்சாட்டையோ அல்லது விமர்சனத்தையோ பெரும்பாலும் வைக்க மாட்டார்கள். ஆனாலும் இந்த அரசியல் பண்பு நலனை, ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்களிடம் மட்டும்தான் காணமுடியும்.
குடியரசுக் கட்சியை சேர்ந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ், இன்றைய அதிபர் டோனால்ட் ட்ரம்ப் போன்றவர்களிடம் அத்தகைய அரசியல் நாகரிகத்தைப் பார்க்க முடியாது.
பொதுவாக அரசியல் பண்பாடும் நாகரிகமும் மிக்கவர்கள் பதவி இழந்த பிறகு அல்லது துறந்தபின் அடுத்து வருகின்ற ஆட்சியாளர்கள் மீது எவ்வித விமர்சனத்தையோ குறை கூறல்களையோ வைக்க மாட்டார்கள்.
ஏதோ ஓரொரு வேளையில் எல்லைமீறிய சம்பவம் ஏதும் நிகழ்ந்தால், அதுவும் அரசியல் விமர்சனமாக கருத்து தெரிவிப்பது நனிசிறந்த நாகரிகம்.
மலேசிய முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இந்த பண்பு நலனை அடியோடு தொலைத்தவர்.

இவர் பதவியை வகித்தபொழுதும் சரி, பதவி விலகிய பொழுதும் சரி, எந்த தலைவரையும் நிம்மதியாக விட்டுவைத்ததில்லை; தவிர மாற்றிப் பேசுவதிலும் மனம் அறிந்து பொய்யுரைப்பதிலும் புரட்டிப் பேசுவதிலும் மகாதீருக்கு நிகரான தலைவர் அவரேதான்.
அந்த வகையில், இவர், அண்மையில் சொன்ன ஒரு புதுபொய், ‘நினைவில் வாழும்’ துன் அப்துல்லா அகமது படாவி, தானாக பிரதமர் பதவியைத் துறந்தார் என்றதுதான்.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த பொழுதுதான் மகாதீர் அவ்வாறு சொன்னார்.
அப்துல்லா பிரதமராக இருந்த பொழுது அவரைப் படாதபாடு படுத்தியதுடன் நாள்தோறும் அவருக்கு எதிரான விமர்சனத்தையும் குற்றச்சாட்டையும் சொல்லி, ஊடகத்தில் விமர்சன அறிக்கையையும் விட்டுக் கொண்டே இருந்தவர் துன் மகாதீர் .
இத்தனைக்கும், முன்வரிசையில் இருந்த டத்தோஸ்ரீ நஜீப்பை ஒதுக்கிவிட்டு படாவியை பிரதமர் பதவியில் அமர்த்தியதே இவர்தான்.

ஆனாலும் தான் நினைத்தபடியும் தனக்கு இசைவாகவும் படாவி நடந்து கொள்ளவில்லை என்ற எரிச்சலில் மனம் புழுங்கிய மகாதீர், நாள் தவறாமல் படாவிக்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்துக் கொண்டிருந்தார்.
தவிர, நாட்டின் நலம் கருதியும் மலேசிய கூட்டு சமுதாய மக்களின் மேம்பாடு கருதியும் அப்துல்லா படாவி, தன்னிச்சையாக ஆட்சி புரிந்ததை மகாதீர் விரும்பவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் தான் ஹிண்ட்ராப் எழுச்சிப் பேரணி 2007 நவம்பர் 25ஆம் நாள் நடைபெற்றது.
ஏற்கெனவே நெருக்கடிக்கு ஆளாகியிருந்த துன் அப்துல்லாவிற்கு இந்தச் சம்பவம் மேலும் அழுத்தமாக அமைந்தது.
மகாதீரின் 22 ஆண்டு கால ஆட்சியில் இந்திய சமுதாயத்தினர் எதிர்கொண்ட ஒருதலைப்பட்ச மதமாற்றம், ஆலயப் பிரச்சனை, இந்திய இளைஞர்களுக்கான கல்வி- வேலைவாய்ப்பில் பின்னடைவு, வீட்டுடைமை சிக்கல், போலீஸ் தடுப்பு காவலில் இளைஞர்கள் மரணம் என்றெல்லாம் நீடித்த ஏராளமான சிக்கல்கள் அப்துல்லா படாவியின் ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருந்தன.

இந்த நிலை முற்றியதால் ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி தவிர்க்க முடியாததாகிவிட்டது.
2008-ஆம் ஆண்டு தொடங்கியதும் அப்துல்லாவை மேலும் பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்தன.
படாவி தலைமையிலானதேசிய முன்னணி அரசின்மீது இந்திய சமுதாயத்தில் பரந்த அளவில் ஏற்பட்டிருந்த அதிருப்தி ஒருபுறம் என்றால்;
அந்த வேளையில், சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த டத்தோஸ்ரீ அன்வார்மீது மலாய் சமூகத்தில் குறிப்பாக இளம் வாக்காளர்களிடம் ஏற்பட்டிருந்த ஆதரவு- அனுதாபம் மறுபுறம்;
2009 ஆம் ஆண்டு தொடங்கியதும் அடுத்த பன்னிரண்டாவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அதே காலகட்டத்தில் அன்வாரும் சிறைவாசம் முடிந்து விடுதலை ஆகும் சூழ்நிலை இருந்தது.
எல்லாவற்றையும் அவதானித்த படாவி, ஓராண்டிற்கு முன்னதாகவே திடுதிப்பென்று 2008 மார்ச் 8-ல் பன்னிரண்டாவது பொதுத் தேர்தலை அறிவித்தார்.

அந்த தேர்தல் முடிவை நாம் எல்லோரும் அறிவோம்;
2004 மார்ச் 21, பதினொன்றாவது தேர்தலில் எந்த அளவுக்கு அப்துல்லாவிற்கு பெருமை சேர்ந்ததோ அதற்கு நேர்மாறான முடிவைத் தந்தது இந்த தேர்தல்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அம்னோ கட்சிக்குள்ளேயே அப்துல்லாவிற்கு எதிராக கலகக் குரல் எழுந்தது.
அந்த கலகக் குரலின் நாயகனாக இருந்தவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்.
அவரை தூண்டிவிடும் விதமாக மகாதீரும் அன்றாடம் அப்துல்லாவிற்கு எதிராக கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார் .
அந்த நேரத்தில் அம்னோ கட்சி செல்வாக்கு இழந்ததைப் பற்றி கவலைப்படாமல் படாவிதான் இதற்கெல்லாம் காரணம் என்றும் அம்னோ கட்சியின் பெயர் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அப்துல்லா படாவி உடனே பதவி விலக வேண்டும் என்றும் நிர்வாக திறமை இல்லாதவர் என்றெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த தரப்பினரை ஆதரித்த மகாதீர், தன் பங்கிற்கு இவரும் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்; அன்றாடம் செய்தியாளரை சந்திப்பார்;
சலிப்பிற்கும் களைப்பிற்கும் ஆளான அப்துல்லா படாவி பிரதமர் பதவியைத் துறந்தார்.
நாட்டின் ஐந்தாவது பிரதமரான அப்துல்லா, பதவி விலகியதற்கு ஏறக்குறைய முக்கால் பங்கு காரணமாக இருந்த மகாதீர், இப்பொழுது அப்துல்லா இறந்துவிட்ட நிலையில் வஞ்சக்கவி பாடுவதைப் போல, அப்துல்லா படாவி, பொருத்தமான நேரத்தில்
பிரதமர் பதவியில் இருந்து தானாக விலகினார் என்று கடந்த 14 ஆம் நாள் சித்திரை முதல் நாளில் மறைந்ததை முன்னிட்டு அவருக்கு அஞ்சலியும் மரியாதையும் செலுத்திய பொழுது தெரிவித்தார்.
நூற்றாண்டில் பயணிக்கும் துன் மகாதீர் ஏன் இப்படி மனம் அறிந்து பொய் பேச வேண்டும்?
2018, 14ஆவது பொதுத் தேர்தலின்போது மகாதீர் கலந்து கொண்ட அத்தனை பிரச்சாரக் கூட்டங்களிலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அணி திரண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைக் கண்டு உள்ளூர மகிழ்ந்த மகாதீர், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்தியர்களை ‘கிளிங்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இழிவாக குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் இந்திய சமுதாயத்தில் சலசலப்பும் எதிர்ப்பும் எழுந்த பொழுது அதற்கு என்னவோ பேசி சமாளித்தாரேத் தவிர பளிச்சென்று வருத்தம் தெரிவிக்கவில்லை.
2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு தமிழ் நாளேட்டின் சார்பில் மகாதீரிடம் நேர்காணல் செய்யப்பட்டது; அப்பொழுது , தங்களின்மீது இந்திய சமுதாயத்தில் அதிக அளவில் அதிருப்தி நிலவுவதற்கு காரணம் என்ன என்று வினவிய பொழுது பதில் அளித்த மகாதீர், “இதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது” எனவும் துன் சாமிவேலு என்னென்ன கேட்டாரோ அதையெல்லாம் நான் செய்து கொடுத்தேன்” என்றும் சொல்லி நழுவிக்கொண்டார்
1998 இல் வங்களாதேசத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பொழுது, டாக்கா விமான நிலையத்தில் வங்க மொழி செய்தியாளர்கள் “உங்களுடைய முன்னாள் துணைப் பிரதமர் நேற்றைய தினம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட பொழுது அவரின் கன்னம் கன்றி இருந்தது: கண்கள் வீங்கி இருந்தனவே; அதற்கு என்ன காரணம் என்று வினவியபொழுது, மகாதீர் கொஞ்சமும் யோசிக்காமல் “நான் நினைக்கிறேன். அன்வார் தானாகவே தன் கன்னத்தில் குத்திக் கொண்டு இருப்பார் என்று நினைக்கிறேன்” என்றார்.
மகாதீர் சொன்ன பொய்களிலேயே நூற்றுக்கு நூறு மனம் அறிந்து சொன்ன பொய் இதுவாகத்தான் இருக்கும்.
துன் அப்துல்லா படாவிக்குப் பின் பிரதமராக பொறுப்பேற்ற நஜீப், முகைதீன் யாசின், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, இப்பொழுது அன்வார் உள்ளிட்ட ஒருவரையும் விட்டு விடாமல் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார் மகாதீர்; சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்
இத்தனைக்கும் இவருக்கு மக்களிடம் ஆதரவு அடியோடு அற்றுவிட்டது.
தேசிய பள்ளிவாசலில் தொழுகைக்காக செல்லும்பொழுது அங்கு இவர் அமர்ந்திருந்தால், அருகில் உள்ள நாற்காலிகள் எல்லாம் காலியாக இருக்கும். இவர் பக்கத்தில் அமர்வதற்கு எவரும் விரும்ப மாட்டார்கள்;
2019 நவம்பர் மாதம்16-ஆம் நாள் Tanjung Piai நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மகாதீர் தலைமை வகித்த ‘பெர்சத்து’ கட்சி சார்பில் இவர் பார்த்துப்பார்த்து, தேடித்தேடி நிறுத்திய வேட்பாளர் கர்மைன் சார்டினியைவிட, தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மசீச வேட்பாளர் வீ ஜெக் செங் 15,086 வாக்கு வித்தியாசத்தில் வென்று, மகாதீரின் வேட்பாளரை மண்ணைக் கௌவ வைத்தார்.
2018 பொதுத் தேர்தலின்போது இதே பெர்சத்து கட்சி சார்பில் போட்டியிட்ட முகமட் ஃபாரிட் முகமட் ரஃபிக் வெறும் 524 வாக்குகள் என மிகக் குறைந்த பெரும்பான்மையில் மசீச-வின் அதே வீ ஜெக் செங்கை வெற்றி கொண்டார்.
மலேசிய வரலாற்றில் இந்த அளவு பெரும்பான்மையில் எந்த ஆளுந்தரப்பும் தோற்றதில்லை. அதுவும் மசிச(மலேசிய சீனர் சங்கம்) வேட்பாளரிடம்.
அந்த அளவிற்கு மகாதீரின் செல்வாக்கு, இரண்டாவது முறையாக பதவியேற்ற ஒன்றரை வருடங்களில் அதள பாதாளத்திற்கு சென்றிருந்தது.
அப்போது கூட தஞ்சோங் பியாய் தொகுதி வாக்காளர்களைத்தான் மகாதீர் குறை கூறினார்.
இந்த இடைத்தேர்தலின் பொழுது இன்னொரு அக்கப்போரான காரியமும் இடம்பெற்றது. அதை செய்தது மகாதிர் காலத்து தேர்தல் ஆணையம்.
இடைத்தேர்தல் வாக்களிப்பு தினமாக நவம்பர் 16யும் முன்கூட்டிய வாக்களிப்பு நாளாக நவம்பர் 12 ஆம் நாளையும் வேட்பு மனுத் தாக்கல் நாளாக நவம்பர் இரண்டாம் நாளையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையம் செய்த இந்த அறிவிப்பை மசீச-வும் அம்னோவும் கடுமையாக எதிர்த்தன.
மசீச தனது தேசிய பேராளர் மாநாட்டை நவம்பர் 2-3ஆம் நாட்களில் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது; அதைப்போல அம்னோ கட்சியும் தனது தேசிய பேராளர் பேராளர் மாநாட்டை நவம்பர் 13-16 ஆம் நாட்களில் நடத்துவதாக அறிவித்திருந்தது.
இந்த இரு மாநாட்டையும் சீர்குலைப்பது; அதன்வழி தேசிய முன்னணியின் முக்கியமான உறுப்புக் கட்சிகளான இந்த இரு கட்சிகளையும் ஒழுங்காக தேர்தல் பணி ஆற்ற விடாமல் இடையூறு ஏற்படுத்துவது போன்ற உள்நோக்கங்கள் தேர்தல் ஆணையத்தின் மறைமுக எண்ணமாக இருந்திருக்கக்கூடும்.
இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நேரத்தில், பட்டும் படாமல் வருத்தம் தெரிவித்த தேர்தல் ஆணையம், இது தவிர்க்க முடியாததாக அமைந்துவிட்டது என்று நொண்டி சாக்கு கூறியது.
தவிர அந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் தீபாவளி பண்டிகை வந்ததும் இதற்கு காரணம் என்று தீபாவளி பண்டிகைக்கு பின்னால் ஒளிந்து கொண்டது அப்போதைய தேர்தல் ஆணையம்.
கடைசியில் வேறு வழி இல்லாமல் மசீச-வும் அம்னோ-வும் தங்களின் தேசிய பேராளர் கூட்டங்களை ஒத்தி வைக்கும்படி ஆயிற்று.
இவ்வளவு இடையூறுகளை செய்தாலும் கடைசியில் மகாதீரின் கட்சி அந்த இடைத்தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு தோல்வி கண்டது.
2018 பொதுத் தேர்தலின்போது பிரச்சாரக் கூட்டங்களில், குறிப்பாக 2017 நவம்பர் ஆறாம் நாள் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மகாதீர், “ஒருவேளை நம்பிக்கை கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால், தான் தற்காலிக பிரதமராகத்தான் பொறுப்பு வகிப்பேன்; தனக்கும் வயதாகி விட்டது; அதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் டத்தோஸ்ரீ அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன்” என்றார். அத்தேர்தலில் வென்று இரண்டாம் கட்டமாக பிரதமரான பின், அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியது மட்டுமல்லாமல் மக்களிடையே அன்வாருக்கு ஆதரவில்லை என்று இல்லாததை சொல்லி வந்தார்
தேர்தல் வெற்றிக்குப்பின், பிரச்சாரத்தின் பொழுது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் பொது மக்களுக்கு நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று வாக்கு தவறி பேசினார்.
அன்வார் பிரதமர் பதவிக்கு வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் இவர் செய்த அக்கப்போரான அரசியல் தில்லுமுல்லுகளால் நாட்டில் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டது. சபா, மலாக்கா, ஜொகூர் மாநிலங்களில் அடுத்தடுத்து இடைத் தேர்தல் நடைபெறும் அளவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறினர்.
ஜோகூர் மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இவர் புதிதாக கட்டமைத்த பெஜூவாங் கட்சி சார்பில் இவர் நிறுத்திய 40க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அத்தனை தொகுதிகளிலும் தோல்வியை மட்டும் சந்திக்கவில்லை; வைப்புத் தொகையையும் இழந்தனர்.
தவிர 2022 நவம்பர் 19இல் நடைபெற்ற 15 வது நாடாளுமன்றத் தேர்தலில் இவர் அங்குலம் அங்குலம் ஆக மேம்படுத்திய லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவரை மக்கள் நிராகரித்தனர். மண்டியிடும்படி நேர்ந்தது.
அந்த தீவுத் தொகுதியில் 7% வாக்குகளைக்கூட பெற முடியாமல் வைப்புத் தொகையையும் பறிகொடுத்தார் மகாதீர். 1969 முதல் தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த இவர் முதல் முறையாக படுமோசமான தோல்வியை சந்தித்தார்.
இவரின் இத்தகைய வல்லடி அரசியலால் இவரின் அன்பு மகன் முக்ரிஸ், இரண்டு முறை கெடா மாநிலத்தின் மந்திரி பெசார்(மாநில முதல்வர்) பதவியை இழக்க நேர்ந்தது.
இவ்வளவு நடைபெற்ற பிறகும் மலேசிய அரசியலில் ஏதாவது சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
இப்பொழுது துன் அப்துல்லா படாவி மரணத்திலும் மனம் அறிந்த பொய்யை உதிர்த்து இருக்கிறார். ஒரு மனிதர் இறந்து விட்டால், அவரைப் புகழ்ந்து பேசுவது இயல்புதான்; மனித நாகரிகம்தான். அதற்காக, இல்லாததை சொல்லலாமா? அவரை பதவியில் இருந்து விரட்டும் விதமாக செயல்பட்ட இவரே அவர் தானாக பதவி விலகினார் என்று சொல்லும் பொய் எதற்காக? யாருக்காக??
அடுத்து சொல்லுகிறார் மூன்று ‘ஆர்'(Racial, Religious & Royalty) சட்டத்தை பயன்படுத்தி பேச்சு சுதந்திரத்திற்கு அடியோடு பூட்டு போடுகிறது இந்த மடாணி-ஒற்றுமை அரசு என்று;
இவருடைய முதற்கட்ட 22 ஆண்டு கால ஆட்சியில் பேச்சு சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரமும் 100% அளவிற்கு தாராளமாக அள்ளி அளிக்கப்பட்டதைப் போல இவர் பேசுகிறார்.
வரும் ஜூலைத் திங்கள் 10-ஆம் நாள் 101-ஆவது வயதை எட்ட இருக்கும் மகாதீருக்கு இன்னமும் அரசியல் நடவடிக்கையும் லாவணி கருத்தாடலும் எதற்காக?
எது எப்படியோ? இவர் நூற்றாண்டை கடந்தும் பல்லாண்டுகள் வாழ குமரி வாழ்த்துகிறாள்!!


