
தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதியில் நாளை, ஏப்ரல் 26இல் இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், வாக்காளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியும் வாக்களிப்பின்மீது அக்கறையும் தென்படுகின்றன;
குறிப்பாக, மலேசிய சோசலிசக் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள பவானிமீது, ‘நம்ம பொண்ணு பவானி’, ‘நம்ம பொண்ணு பவானி’ என்னும் கருத்து இந்திய வாக்காளர் மத்தியில் அதிகமாக எதிரொலிக்கிறது.
அரசியல் கட்சிகள் மற்றும் அரசுகளின் மீது அதிருப்தி இருந்தால் வாக்காளர்கள் முன்பெல்லாம் ஒதுங்கி நிற்பர்; இப்பொழுது அதற்கு மாறான மனநிலை மக்களிடம் காணப்படுகிறது.
ஒதுங்கி நிற்பதால் எந்த பயனும் இல்லை; வலுத்தவன் கைதான் ஓங்குகிறது; இதனால், சம்பந்தப்பட்டவர்கள் தங்களை வெற்றியாளராகக் காட்டிக் கொள்ளும் போக்கை காலம் காலமாக பார்த்து சலித்துப் போன வாக்காளர்கள், இந்த முறை ஒதுங்கி நிற்பதற்கு பதிலாக அடித்தாடும் விதமாக அணி திரண்டு தங்களுக்கு பிடிக்கும் வாக்காளருக்கு வாக்களித்தே தீருவது என்ற முடிவில் இருப்பதைக் காண முடிகிறது.

இந்திய சமுதாயத்தைப் பொருத்தவரை, கல்லூரி காலத்தில் இருந்தே தன்மானத்திற்கும் இன உரிமைக்கும் குரல் கொடுத்து வரும் பவானியின் மீது கவனம் திரும்பி உள்ளது.
தவிர தற்போது நடைபெறும் மடாணி ஒற்றுமை அரசாங்கம், அடுத்தடுத்து இந்திய சமூகத்தை புறக்கணிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதும் இந்த இடைத் தேர்தலில் பிரதிபலிக்க இடமுண்டு.
சுதந்திர மலேசியாவில் அமைச்சரவையில் நீடித்து வந்த தமிழர் பிரதிநிதித்துவத்தை இந்த ஒற்றுமை அரசு புறந்தள்ளி, மலேசியத் தமிழரை சிறுமைப்படுத்தி விட்டது; தவிர, ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக இந்திய சமுதாயம் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மக்கள் நீதி கட்சி(பிகேஆர்) சார்பில் மாநிலங்களிலும்கூட இந்திய சமுதாயத்திற்கு அமைச்சர்(EXCO) பொறுப்பு வழங்கப்படவில்லை
அம்னோ தலைமைலான தேசிய முன்னணி ஆட்சி இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டு வந்த நடைமுறையை பிகேஆர் கட்சி அரியணையில் அமர்ந்தது முதல்,(கடந்த 2018ஆம் ஆண்டு முதல்) அந்த நடைமுறையும் தமிழ் பள்ளிகளுக்கான அடையாளமும் இல்லாமல் போய்விட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக அத்தியாவசிய பண்டங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள்படும் அல்லலுக்கு எல்லையில்லை;
குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகள் இரண்டு மூன்று பேர் இருந்தால் அந்த குடும்பங்களின் தலைவிகள் படுகின்ற துயரம் சொல்லி மாளாது; பால் மாவு, ரொட்டி உள்ளிட்ட திண்பண்டங்கள் யாவும் தவணை முறையில் விலையேறிக் கொண்டே இருக்கிறன.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மாணவர் தலைவராக இருந்தவரே பிரதமர் ஆகிவிட்ட நிலையில் அவரே மதமாற்ற சட்ங்கை நிறைவேற்றுவதும் வழிபாட்டுத்தல அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை ஏற்ப்பதும் என மத நடவடிக்கையில் அதிகமாக ஈடுபாடு காட்டுகிறார்; அவருக்கு சமுதாய மறுமலர்ச்சியைவிட, மத மறுமலர்ச்சிதான் பெரிதாகப்படுகிறது

இதனால் இந்த ஒற்றுமை அரசாங்கத்தின் மீது இந்திய சமூகத்திற்குத்தான் அதிருப்தியும் வேதனையும் இருக்கிறது என்றால் ஒட்டுமொத்தமாக மலேசிய கூட்டு சமுதாயத்திலேயே இந்த நிலைமைதான் நிலவுகிறது என்பதை பிகே ஆர்கட்சியின் அண்மைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பி கே ஆர் கட்சியில் ஆளும் தரப்பில் பதவியில் இருக்கின்ற துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மித்ரா தலைவராக இருக்கின்ற ப.பிரபாகரன், பாரம்பரிய தலைவர்களான சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் சு கேசவன், பிரதமரின் ஆலோசகர் மணிவண்ணன், ஜோகூர் தெப்ராவ் தொகுதியில் ஆர்.யுவனேசுவரன் உள்ளிட்ட இந்திய தலைவர்கள் மட்டுமல்ல;
மலாய்த் தலைவர்களான பிகேஆர் உதவித் தலைவரும் கூட்டரசு அமைச்சருமான நிக் நஸ்மி நிக் அகமட்கூட, தித்தி வங்சா தொகுதித் தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்; அவரைப் போல ஜோகூர் பாரு தொகுதித் தலைவர் தேர்தலில் அக்மால் நாசீரும் மலாக்கா ஹங் துவா ஜெயா தொகுதித் தலைவர் தேர்தலில் ஆடாம் அட்லியும் ஷா ஆலம் தொகுதியில் ரோட்சியா இஸ்மாயிலும் பாலே பூலாவ் தொகுதியில் பக்தியார் வான் ச்சிக்கும் பகாங் லிப்பிஸில் ரீசால் ஜாமினும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

துணை அமைச்சர்கள், முன்னாள் துணை அமைச்சர், மாநிலத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொறுப்பிலும் பதவியிலும் உள்ள பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மீதும் அவர் தலைமை வகிக்கும் பிகேஆர் கட்சிமீதும் கட்சியினருக்கு மட்டுமல்ல; மொத்த சமுதாயத்திற்குமே ஏமாற்றமும் ஆதங்கமும் அதிகரித்துள்ளன என்பதை இது காட்டுகிறது.

ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, செம்பனைத் தோட்டங்கள் நிறைந்த கிராமப்புற சூழல் நிறைந்த பகுதியாகும். தானியங்கி பண பரிமாற்றத்திற்கான ATM இயந்திரங்களைக்கூட இங்கு அதிகமாக காணமுடியவில்லை என்றால், இந்த வட்டாரம் எப்படிப்பட்டது என்பதை ஊகிக்கலாம்.
வேலை வாய்ப்பு குறைவாக உள்ள இந்தத் தொகுதி மக்களுக்கு, செம்பனைக் கன்று நடவுத் தொழில்தான் உள்ளூரில் கிடைக்கிறது; அதனால், அருகில் உள்ள கம்பார் பட்டணத்தில் அதிகமான மக்கள் வேலை பார்க்கின்றனர். அடுத்து, தெலுக் இந்தானில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோரில் அதிகமானவர்கள் ஆயர் கூனிங்கைச் சேர்ந்தவகள்.
இந்தத் தொகுதியில் உள்ள மலாய் வாக்குகள் ஏறக்குறைய சரிபாதியாகப் பிரிந்து, நம்பிக்கைக் கூட்டணியும் தேசிய முன்னணியும் இணைந்த ஆளும் கூட்டணிக்கும், பாஸ்-பெர்சத்து-கெராக்கான் கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ள பெரிக்காத்தான் கூட்டணிக்கும் அணிபிரிந்துள்ளதாகத் தெரிகிறாது.
இந்திய வாக்காளர்களும் பூர்வகுடியினரும் மிக அதிக அளவில் பவானி பக்கம் பவனி வருகின்றனர்.
அதனால், வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பது சீன வாக்காளர்களின் கையில் இருக்கிறது.

சீன புதுக் குடியிருப்புப் பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக பாஸ் கட்சிக்கு ஆதரவுத் தெரிவிக்கும்போக்கு தென்படுகிறது; பாஸ் கட்சிப்பக்கம் திரும்பிக் கூட பார்க்காத கோல்ட் ஸ்ட்ரீம் பகுதி சீன மக்கள், இரு தினங்களுக்குமுன் அங்குள்ள ஒரு பெரிய அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரிக்காத்தான் பிரச்சாரக் கூட்டத்தில் அதிக அளவில் திரண்டது வியப்பிற்குரியது. அந்தக் கூட்டணியில் கெராக்கான் கட்சி இணைந்திருப்பதால், அக்கட்சியை சேர்ந்த சீனர்களாக இவர்கள் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அங்குள்ள பன்றிப் பண்ணைகள் குறித்து பாஸ் கட்சி அதிகம் பேசிய நிலையில், சீன சமுதாயத்தில் பாஸ்மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனால், சீனர்களின் ஆதரவு பெரிக்காத்தான் கூட்டணியின் பாஸ் கட்சி வேட்பாளர் அப்துல் முகைமின் மாலேக்கிற்கு பெரிய அளவில் கிடைப்பது ஐயத்திற்குரியது.
அதேவேளை, கடந்த பொதுத் தேர்தலின்போது ஐம்முனைப் போட்டியில் அம்னோ வென்ற இந்தத் தொகுதியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பேராக் மாநில தேசிய முன்னணியினரும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முகம்மதுவும் கங்கணத்துடன் செயல்படுகின்றனர்.

இவர்களைவிட, தொகுதி எம்.பி. டத்தோஸ்ரீ மு. சரவணன், தான் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டிவரும் தாப்பா நாடளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெல்வதை ஒரு கௌரவமாகக் கருதி, அங்கேயே முகாமிட்டு அயராது தேர்தல் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், தேர்தல் ஆணையம் கணித்துள்ள 70% வாக்குப்பதிவைவிட அதிகமான வாக்காளர்கள், தங்களின் ஆட்காட்டி விரல் தீர்ப்பெழுத அணி திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயர் கூனிங் வாக்காளர்களின் பெரும்பான்மை முடிவு என்னவென்று, நாளை முன்னிரவு 7:30 மணி அளவில் தெரியவரும். காத்திருப்போம்!.



